இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர்  ஜீ.எல். பீரிஸ் அவர்களுடன் சந்திப்பு

2021 ஆகஸ்ட் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து புதிய வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை சந்தித்த இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் அகிரா சுகியாமா, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸை வாழ்த்திய அதே வேளை, இலங்கைக்கான ஜப்பானின் தொடர்ச்சியான ஆதரவையும் ஒத்துழைப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். இலங்கை மற்றும் ஜப்பான் அனைத்து மட்டங்களிலும் சிறப்பான கூட்டாண்மைகளை பராமரித்து வருவதாகவும், தொற்றுநோயால் ஏற்படும் சவால்கள் இருந்தபோதிலும், நடைபெற்றுக்கொண்டிருக்கும் அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் சரியான நேரத்தில் நிறைவு செய்யவும், வரவிருக்கும் திட்டங்களை செயற்படுத்துவதை துரிதப்படுத்தவும் ஜப்பான் உறுதிபூண்டுள்ளதாகவும் தூதுவர் சுகியாமா தெரிவித்தார்.

அனைத்து கடினமான காலங்களிலும் இலங்கைக்கு உறுதியான ஆதரவை வழங்கிய ஜப்பானிய அரசாங்கம்  மற்றும் அதன் மக்களுக்கு வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் நன்றிகளைத் தெரிவித்தார். கோவிட்-19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஜப்பான் இலங்கையின் மதிப்புமிக்க பங்காளியாகும் அதே வேளையில், ஜப்பானால் சமீபத்தில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.4 மில்லியன் டோஸ் அஸ்ட்ராசெனெக்கா தடுப்பூசிகள் இலங்கையின் மேல் மாகாணத்திற்குள் தடையற்ற தடுப்பூசித் திட்டத்தை முன்னெடுக்க மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஜப்பான் அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவராக சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது திரு. யசுஷி ஆகாஷியின்  மதிப்புமிக்க பங்களிப்பை நினைவுகூர்ந்த அமைச்சர் பீரிஸ், ஜப்பான் நாட்டில் உள்ள நில யதார்த்தங்களைப் புரிந்துகொண்டதற்காகவும், இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதற்காகவும் சர்வதேச அரங்கில் அதன் மத்தியஸ்தப் பங்களிப்பிற்காக நன்றிகளைத் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் மற்றும் தூதுவர் சுகியாமா ஆகிய இருவரும் அடுத்த ஆண்டு இராஜதந்திர  உறவுகளின் 70வது ஆண்டு நிறைவை பொருத்தமான முறையில் கொண்டாடுவதற்கு ஒப்புக் கொண்ட அதே வேளையில், இரு நாடுகளுக்குமிடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் மக்களிடையேயான தொடர்புகளை மேலும் உயர்த்துவதற்கு அயராது உழைக்க ஒப்புக்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவும்  இணைந்திருந்தார்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 ஆகஸ்ட் 23

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close