2022 ஜனவரி 09ஆந் திகதி அலரி மாளிகையில் நடைபெற்ற சீன மக்கள் குடியரசின் அரச அவை உறுப்பினரும், வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ உடனான இருதரப்பு சந்திப்பின் போது, இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான ஆரோக்கியமான மற்றும் சிறப்பு வாய்ந்த நட்புறவு மற்றும் பலதரப்பட்ட பங்காளித்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தனது ஆரம்ப உரையில் எடுத்துரைத்தார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இறப்பர் அரிசி ஒப்பந்தத்தின் 70வது ஆண்டு நிறைவையும், இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 65வது ஆண்டு நிறைவையும் குறிக்கும் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இலங்கைக்கு சுருக்கமான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
மேலும் கருத்துக்களை வெளியிட்ட வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ், இலங்கை சிரமங்களை எதிர்கொண்ட போதெல்லாம், சீனாவிடமிருந்து முழு அளவிலான ஆதரவு எப்போதும் கிடைத்திருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த சூழலில், நன்கொடையாக வழங்கப்பட்ட 3 மில்லியன் டோஸ் தடுப்பூசிகள் உள்ளடங்கலாக, கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சீனாவின் தன்னிச்சையான மற்றும் தாராளமான ஆதரவிற்காக வெளிவிவகார அமைச்சர் வாங் யீக்கு அமைச்சர் உண்மையான நன்றிகளையும், ஆழ்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில், இலங்கை மத்திய வங்கிக்கு 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வசதியை வழங்குவதன் மூலம் சீனாவின் சரியான நேரத்திலான உதவி, நாட்டின் நாணய இருப்புக்களை அதிகரிக்க உதவியதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இது இரு நாடுகளுக்கும் இடையே உள்ள நிலையான நட்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இருதரப்புக் கலந்துரையாடலின் போது, தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசித் திட்டத்திற்கான மேலதிக ஆதரவு, சீனாவில் இருந்து கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயத்திற்கு முதலீடுகளை ஈர்த்தல், சீனாவில் இருந்து இலங்கைக்கான சுற்றுலாவை அதிகரித்தல், சீனாவிற்கான இலங்கையின் ஏற்றுமதியை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இரு நாடுகளுக்கு இடையே பௌத்த உறவுகளை வளர்ப்பதில் கலாச்சார ஒத்துழைப்பை ஊக்குவித்தல் ஆகியன உள்ளிட்ட இருதரப்பு ஆர்வமுள்ள ஏனைய விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
வெளிநாட்டு அமைச்சரின் கருத்துக்களுக்கு அன்புடன் பிரதிபலித்த சீனாவின் அரச அவை உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ, சீனா இலங்கையை காலத்தால் இணைந்த நண்பராகக் கருதுவதாகக் குறிப்பிட்டதுடன், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு விஷேட நினைவு நாணயத்தை வெளியிட்டமைக்காக இலங்கைக்கு நன்றிகளைத் தெரிவித்தார். 1952ல் கைச்சாத்திடப்பட்ட இறப்பர் அரிசி ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும் என அவர் பாராட்டினார். பல ஆண்டுகளாக பல்வேறு சர்வதேச அரங்குகளிலான இரு நாடுகளினதும் வலுவான மற்றும் நிலையான ஆதரவையும் அவர் எடுத்துரைத்தார்.
கலந்துரையாடலின் பின்னர், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இரண்டு வெளிநாட்டு அமைச்சர்களினதும் முன்னிலையில், இரு தூதுக்குழுவினரும் பின்வரும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டனர்:
- பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம்
- கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கான மானியத்துடன் கூடிய வீட்டுத்திட்டம் தொடர்பான பரிமாற்றக் கடிதம்
- பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்திற்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் கையளிப்பு சான்றிதழ்
- நடமாடும் சிறுநீரக நோய் கண்டறிதல் அம்புலன்ஸ் வாகனங்களுக்கான தொழில்நுட்ப ஒத்துழைப்புத் திட்டத்தின் சான்றிதழ்களை ஒப்படைத்தல்
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகளும், வர்த்தகப் பிரதி அமைச்சர் கியான் கெமிங், உதவி வெளிவிவகார அமைச்சரான தூதுவர் வூ ஜியாங்ஹாவ் மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் குய் சென்ஹோங் ஆகியோரும் முறையே இலங்கை மற்றும் சீனத் தூதுக்குழுக்களில் கலந்துகொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2022 ஜனவரி 10