இருதரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இலங்கையும் பிரேசிலும் இணக்கம்

இருதரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இலங்கையும் பிரேசிலும் இணக்கம்

 

இலங்கைக்கும் பிரேசிலுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்தாலோசனைகள், 2026 மார்ச் 20 அன்று கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றன. இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவதில் முக்கிய படியொன்றாக அமைந்தது. இக்கூட்டத்திற்கு அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜவும், பிரேசில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்களுக்கான செயலாளரும், தூதுவருமான சூசன் கிளீபேங்க்கும் இணை-தலைமை தாங்கினர்.

2022-ல் நடைபெற்ற முதல் சுற்று இருதரப்பு அரசியல் கலந்தாலோசனைகலைத்தொடர்ந்து அடைந்த முன்னேற்றத்தை மீளாய்வு செய்யவும், சாத்தியமான ஒத்துழைப்புகளுக்கான பகுதிகளை இனங்காணவும் இக்கலந்தாலோசனைகள் சிறந்ததொரு வாய்ப்பை வழங்கின.

கலந்துரையாடல்களின் போது, ​​பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சீரான வளர்ச்சியை ஏற்றுக்கொண்ட இரு தரப்பினரும், 2030-ஆம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்த்த இணங்கினர். மாறிவரும் உலகப் பொருளாதார இயக்கவியலுக்கு ஏற்ப ஈடுபாட்டை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் இரு நாடுகளும் வலியுறுத்தின.

உறவுகளை மேலும் வலுப்படுத்த, முக்கியத் துறைகளில் நிலுவையில் உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகளை விரைவாக இறுதி செய்வதன் அவசியத்தை உணர்ந்து, பாதுகாப்பு, சட்ட அமுலாக்கம், ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல், பாரம்பரிய மற்றும் ஆயுர்வேத மருத்துவம், மற்றும் இராஜதந்திரப் பயிற்சியளித்தல் ஆகியவற்றில் நிலுவையில் உள்ள சட்ட ஆவணங்களை இறுதி செய்ய இரு தரப்பினரும் உறுதியளித்தனர். தொழில்நுட்ப ஒத்துழைப்பின் கட்டமைப்பின் கீழ் பாலுற்பத்தி கால்நடை தொடர்பிலான செயற்திட்டம் மற்றும் கரும்புத் திட்டம் ஆகியவை இறுதி செய்யப்பட்டு, பிரேசிலிய ஒத்துழைப்பு முகமையின் (ABC) ஆதரவுடன் விரைவில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக இரு தரப்பினரும் திருப்தி தெரிவித்தனர்.

ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க பிரேசில் நாட்டிற்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. பாராளுமன்ற இராஜதந்திரத்தை மேம்படுத்துதல் மற்றும் சட்டமன்றங்களுக்கு இடையில் நெருங்கிய உறவுகளை வளர்த்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இரு தரப்பினரும், பாராளுமன்ற நட்புறவுக் குழுக்களைப் புதுப்பிக்கவும், தூதுக்குழுக்களைப் பரிமாறிக்கொள்ளவும் இணங்கினர். இது தொடர்பாக, பிரேசில் சட்டமன்றத்திலிருந்து ஒரு பெண் பாராளுமன்றக் குழு இலங்கைக்கு வருகை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விவசாயம், கால்நடை வளர்ப்பு, விவசாய ஆராய்ச்சி, துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து, மற்றும் விளையாட்டு உள்ளிட்ட முன்னுரிமைத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புதிய வழிகளையும் இவ்வாலோசனைகள் அடையாளம் கண்டன. இருதரப்பு மற்றும் பல்தரப்பு மன்றங்களில் நெருங்கிய ஒத்துழைப்பைத் தொடரவும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

தூதுவர் சூசன் கிளீபேங்க், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜத ஹேரத்தையும் சந்தித்தார். இச்சந்திப்பின்போது, ​​இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், பரஸ்பர நலன் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் இரு தரப்பினரும் தங்களது ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தினர்.

இந்த அரசியல் கலந்தாலோசனைகளுக்கான தூதுக்குழுக்களில், பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சமிந்த ஐ. கொலோன்னே, பிரேசிலியத் தூதரகத்தின் பொறுப்புத் தூதுவர் மோனிகா மரியா மெய்ரெல்லஸ் நாசர், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மற்றும் தொடர்புடைய முகமைகளின் சிரேஷ்ட அதிகாரிகளும் அடங்கியிருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

2026 மார்ச் 20

Please follow and like us:

Close