சர்வதேச ஒம்புட்ஸ்மன் மாநாடு 2023-ஐ முன்னிட்டு, இலங்கையின் நிர்வாகத்திற்கான நாடாளுமன்ற ஆணையாளர் (ஒம்புட்ஸ்மன்) அலுவலகம் மற்றும் துருக்கிய ஒம்புட்ஸ்மன் நிறுவனம் ஆகியவை 2023 ஜனவரி 11ஆந் திகதி அங்காராவில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
இலங்கையின் ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் துருக்கியின் ஒம்புட்ஸ்மன் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் துருக்கி நாடாளுமன்றத்தின் சபாநாயகர் முஸ்தபா சென்டோப், துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி உருகொடவத்த திசாநாயக்க, இலங்கையின் ஒம்புட்ஸ்மன் நீதியரசர் (ஓய்வு பெற்ற) கே.டி. சித்ரசிறி மற்றும் துருக்கியின் பிரதம ஒம்புட்ஸ்மன் ஷெரீஃப் மல்கோஸ் ஆகியோரின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தின் ஒம்புட்ஸ்மன் மற்றும் துருக்கியின் தலைமை ஒம்புட்ஸ்மன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
அநீதி மற்றும் பாகுபாட்டிலிருந்து குடிமக்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், மனித உரிமைகள் மற்றும் அநீதிகளுக்கான தீர்வுகளைப் பாதுகாப்பதில் இலங்கை மற்றும் துருக்கி ஆகிய இரண்டு நிறுவனங்களினதும் பங்கு குறித்து கவனம் செலுத்துவதே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். குடிமக்களின் உரிமைகள், முறைப்பாடுகள் மற்றும் பாதுகாப்புத் துறையில் ஒவ்வொரு தரப்பினரதும் பணிகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பான ஏனைய செயற்பாடுகள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான நிறுவன நிலைமைகளை இது மேலும் உருவாக்கி, சட்டங்களால் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்குள் குடிமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதில் பங்களிப்புச் செய்கின்றன.
'21ஆம் நூற்றாண்டில் மனித உரிமைகளின் எதிர்காலம்' என்ற கருப்பொருளின் கீழ் 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஒம்புட்ஸ்மன் மாநாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்படுகின்றது. ஆசியா, ஐரோப்பா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் பல்வேறு பகுதிகளில் இருந்து 70 க்கும் மேற்பட்ட ஒம்புட்ஸ்மன்கள் பங்கேற்று, அந்தந்த நாடுகளில் உள்ள ஒம்புட்ஸ்மனின் சட்டக் கட்டமைப்பையும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அவர்களின் நுண்ணறிவையும் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கை தூதரகம்,
அங்காரா
2023 ஜனவரி 14