இலங்கை மற்றும் ஓமான் சுல்தானேற்றுக்குஇடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், அதே வேளையில், ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 டிசம்பர் 11ஆந் திகதி மஸ்கட்டில் உள்ள காலா கோல்ஃப் கிளப்புடன் இணைந்து இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பின் ஒரு பகுதியாக கோல்ஃப் போட்டியை ஏற்பாடு செய்தது. தூதரகம் காலா கோல்ஃப் கிளப்பில் நடைபெற்ற போட்டியின் போது இலங்கை சுற்றுலா காட்சிப்படுத்தப்பட்டதுடன், சுற்றுலாவுக்காக இலங்கையில் உள்ள கவர்ச்சிகரமான இடங்களின் வீடியோவும் ஒளிபரப்பப்பட்டது.
பாரம்பரிய எண்ணெய் விளக்கு மற்றும் மஸ்கட் இலங்கைப் பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய பறை (மகுல் பேரா) மற்றும் ஹக் இசை நிகழ்ச்சியுடன் நிகழ்வு ஆரம்பமானதுடன், அதனைத் தொடர்ந்து ஓமான் மற்றும் இலங்கை சுல்தானேற்றின் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டன. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஓமான் சுல்தானேற்றுக்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் மற்றும் முக்கியஸ்தர்களின் பங்களிப்புடன் சம்பிரதாய கேக் வெட்டும் நிகழ்வும் இடம்பெற்றது.
ஓமான் வெளியுறவு அமைச்சின் உலகளாவிய விவகாரங்கள் திணைக்களத்தின் தலைவரும், ஓமான் மனித உரிமைகள் குழுவின் துணைத் தலைவருமான ஹூமைத் அல் மானி, புருனாய், பாகிஸ்தான் மற்றும் தென் கொரியாவின் ஓமான் சுல்தானேற்றுக்கான தூதுவர்கள், காலா கோல்ஃப் கிளப்பின் சபை உறுப்பினர் ஃபைஸ் முகமது ரியாஸ், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் நாட்டிற்கான முகாமையாளர் ஃபயாஸ் தாஹா மற்றும் ஏனைய முக்கியஸ்தர்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.
கூட்டத்தில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வத், இரு நட்பு நாடுகளுக்கிடையிலான தொடர்பை ஊக்குவிப்பதில் விளையாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையே அடிக்கடி விளையாட்டு நடவடிக்கைகள் பரிமாறப்படுவதை வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 40வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், இந்த மாத இறுதியில் ஓமானி ஹொக்கி அணிகளுடன் நட்புரீதியான போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை ஹொக்கி அணிகள் ஓமானுக்கு வருகை தருவதாகவும் அவர் அறிவித்தார்.
போட்டியில் வெற்றி பெற்ற அஹமட் அல் லாம்கிக்கு தூதுவர் அமீர் அஜ்வத், ஓமான் வெளியுறவு அமைச்சின் உலகலாவிய விவகாரத் தலைவர் ஹூமைத் அல் மானி, காலா கோல்ஃப் கிளப்பின் சபை உறுப்பினர் ஃபைஸ் மொஹமட் ரியாஸ் மற்றும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் நாட்டிற்கான முகாமையாளர் ஃபயாஸ் தாஹா ஆகியோர் இணைந்து வெற்றிக் கிண்ணத்தை வழங்கினர். வெற்றியாளருக்கு ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் அனுசரணையுடன் சுற்றுலாவிற்காக இலங்கை செல்வதற்கான 2 வழி வணிக வகுப்பு விமான டிக்கெட் வழங்கப்பட்டதுடன், எஸ்னா ஹொலிடேஸ் கொழும்பின் அனுசரணையில் 2 இரவுகள் கொழும்பு மோவன்பிக் ஹோட்டலில் தங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் போது, இலங்கை சுற்றுலாத்துறையானது 'சோ ஸ்ரீ லங்கா' என்ற பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் சிற்றேடுகளை காட்சிப்படுத்தி ஊக்குவிக்கப்பட்டது. ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸின் பிரதிநிதிகள் பங்கேற்பாளர்களிடையே இலங்கைக்கான கவர்ச்சிகரமான பயணப் பொதிகள் பற்றிய துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனர்.
இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ், இலங்கையிலுள்ள எஸ்னா ஹொலிடேஸ், மோவென்பிக் ஹோட்டல் கொழும்பு, யுனைடெட் டெக்னிக்கல் சொல்யூஷன்ஸ், பிரட் பொக்ஸ் மற்றும் ஓமானில் உள்ள ஓஜே உணவகம் ஆகியன இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கின.
இலங்கைத் தூதரகம்,
மஸ்கட்
2021 டிசம்பர் 20