இந்தோனேசியாவுடனான பொருளாதாரக் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்

இந்தோனேசியாவுடனான பொருளாதாரக் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை வெளிநாட்டு அமைச்சர் அடிக்கோடிட்டுக் காட்டினார்

 

 

கொழும்பிலுள்ள இந்தோனேசியாவின் தூதுவர் ஐ. குஸ்டி நுரா அர்தியாசா வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை 2020 டிசம்பர் 17ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடலின் போது, பரஸ்பரம் நன்மை பயக்கும் வகையில் வர்த்தக உறவுகளை மேலும் மேம்படுத்துவதன் அவசியத்தை இரு பிரமுகர்களும் வலியுறுத்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பன்முக உறவுகளை மீண்டும் வலியுறுத்துகையில், கடந்த காலத்தில் இலங்கை எதிர்கொண்ட கடினமான காலங்களில் இந்தோனேசியா அளித்த வலுவான நட்பையும் உதவியையும் அமைச்சர் குணவர்தன பாராட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு, பிராந்திய மற்றும் பல்தரப்புத் தளங்களில் இருக்கும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் பிணைப்பை ஒப்புக் கொண்ட தூதுவர், தற்போதைய உறவுகள் மேலும் விரிவடைந்து சமகால முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஆழமடையும் என நம்பிக்கை தெரிவித்தார். சட்டவிரோதமான கடத்தல், போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான ஒத்துழைப்பு, மனோவியல் பொருட்கள் மற்றும் கடல் மற்றும் மீன்வள ஒத்துழைப்பு மற்றும் நிலையான மீன்வள நிர்வாகத்தை ஊக்குவிக்கும் சட்டவிரோத, கட்டுப்பாடற்ற மற்றும் பதிவு செய்யப்படாத மீன்பிடித்தலை முன்வைப்பதற்கான தன்னார்வ சர்வதேச ஒத்துழைப்பு போன்ற துறைகளிலான மேம்பட்ட ஒத்துழைப்பின் அவசியத்தை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.

கோவிட்-19 தொற்றுநோயின் உச்சக்கட்டத்தின் போது, சமீப காலங்களில் இந்தோனேசிய நாட்டினரை திருப்பி அனுப்புவதற்காக வழங்கப்பட்ட உதவிகளுக்கு தூதுவர் அர்தியாசா இலங்கை அரசாங்கத்துக்கு தனது நன்றிகளைத் தெரிவித்தார்.

இலங்கை மற்றும் இந்தோனேசியா நீண்டகால வர்த்தகப் பங்காளிகளாக இருந்து வருகின்றன. இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான மொத்த வர்த்தக வருமானம் 2017 முதல் அதிகரித்து வருகின்றது. 2019ஆம் ஆண்டில், இந்தோனேசியாவிற்கான இலங்கை ஏற்றுமதியின் பெறுமதி வருடாந்த அடிப்படையில் ஆண்டுக்கு 9.54% அதிகரித்துள்ளது. 2018ஆம் ஆண்டில் 427.55 அமெரிக்க டொலராக இருந்த இறக்குமதியின் பெறுமதி 2019ல் 428.27 அமெரிக்க டொலராக ஓரளவு அதிகரித்தது. இந்தோனேசியா 2019ஆம் ஆண்டில் 0.33% உடன் இலங்கைக்கான 45வது ஏற்றுமதிச் சந்தையாக இருந்தது. இலங்கையிலிருந்து இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை உற்பத்திப் பொருட்கள், 2019ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிற்கான மொத்த ஏற்றுமதியில் 19.56% ஆகும். இந்தோனேசியா இலங்கையின் 9வது இறக்குமதிப் பங்காளியாக இருந்ததுடன், இது 2019ஆம் ஆண்டில் 2.2% பங்கைக் கொண்டுள்ளது.

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கான முக்கிய இறக்குமதிப் பொருளாக சீமெந்து இருந்ததுடன், இது 2019ஆம் ஆண்டில் இந்தோனேசியாவிலிருந்து மொத்த இறக்குமதியில் 11.05% ஆகும். இந்தோனேசியாவில் வளர்ந்து வரும் தேவை முறையைப் பொறுத்து, இலங்கையின் நிலையான விநியோகத் திறன்களைக் கருத்தில் கொண்டு, கருவா, கராம்பு, கறுப்புத் தேயிலை, தேயிலை, ரப்பர் டயர்களை இந்தோனேசியாவில் மேலும் விரிவுபடுத்தலாம். இலங்கை இந்தோனேசியாவுடன் 1996 ஜூன் 10ஆந் திகதி இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டதுடன், அது 1997 ஜூலை 21ஆந் திகதி முதல் நடைமுறைக்கு வந்தது. இந்தோனேசியாவுடனான இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் 1993 பிப்ரவரி 03ஆந் திகதி இலங்கை கைச்சாத்திட்டதுடன், இது 1995/1996 முதல் இலங்கையில் செயற்படுத்தப்பட்டது. 2019ஆம் ஆண்டில் இலங்கையின் 34வது முதலீட்டுப் பங்காளராக இந்தோனேசியா இடம்பிடித்தது.

பதிவுசெய்யப்பட்ட வரலாறு தொடங்கிய காலம் முதல், இலங்கை இந்தோனேசியாவுடன் ஒரு விரிவான உறவைப் பகிர்ந்து கொள்கின்றது. ஸ்ரீ விஜயப் பேரரசின் மன்னர் விஜயோத்துங்கவுடன் இலங்கை மன்னர் விஜயபாஹூவுக்கு (1055-1110) நெருக்கமான தொடர்பு இருந்தது என காலனித்துவத்திற்கு முந்தைய வரலாற்றுப் பதிவுகள் குறிப்பிடுகின்றன. இலங்கை மன்னர்கள் காஷ்யப்ப மற்றும் மகேந்திரஹாத் ஜாவாவுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக வரலாறு மேலும் குறிப்பிடுகிறது. மத இணைப்பு மிகவும் அதிகமாக இருந்ததுடன், இலங்கை கைவினைஞர்களின் செல்வாக்கு ஜாவாவிலும், ஜொக்ஜகார்த்தாவில் உள்ள செலிபஸ் மற்றும் போரோபுதூரிலும் காணப்படும் அமைதியான புத்தர் உருவங்களில் குறிப்பாக அவர்களின் எளிமையில் தெளிவாகத் தெரியும் அதே வேளை, சமாதி புத்தர் சிலை என்ற கருத்தை கண்ணியமான வகையில் நேர்த்தியாக வெளிப்படுத்தியது. கோட்டை இராச்சியத்தின் போதான இலங்கை மன்னர் ஆறாம் பராக்கிரமபாஹூ (1411-1466) சிறப்பான மதத் தொடர்புகளைப் பேணி வந்தார்.

இந்த கலந்துரையாடல்களின் போது, தூதுவருடன் இந்தோனேசியத் தூதரகத்தின் முதல் செயலாளருடன் இணைந்திருந்தார். வெளிநாட்டு அமைச்சின் தென்கிழக்கு ஆசியப் பிரிவின் அதிகாரிகளும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 19

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close