இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் மட்ட சபை 2021 - 2023 க்கான துணைத் தலைமை நாடாக இலங்கையை அங்கீகரித்தது

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் மட்ட சபை 2021 – 2023 க்கான துணைத் தலைமை நாடாக இலங்கையை அங்கீகரித்தது

துணைத் தலைவர் பதவிக்காக மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை ஏற்று, இலங்கை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியமைக்காக, இலங்கைத் தூதுக்குழுவிற்கு தலைமை தாங்கிய வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஐக்கிய அரபு இராச்சியத்தினால் இன்று (17/12) இணைய வழியாக மெய்நிகர் ரீதியில் நடாத்தப்பட்ட 20வது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தில் அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார். அந்த வகையில், 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்றுக்கொள்ளவுள்ளது. 2020ஆம் ஆண்டு டிசம்பர் 15 மற்றும் 16ஆந் திகதிகளில் நடைபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் குழுவின் 22வது அமர்விற்கு முன்னர் அமைச்சர்கள் மட்ட சபை காணப்பட்டது. அதற்கான இலங்கைத் தூதுக்குழுவிற்கு வெளியுறவு செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே தலைமை தாங்கினார்.

உறுப்பு நாடுகளின் மத்தியில் உரையாற்றிய வெளிநாட்டு அமைச்சர், பாதுகாப்பான மற்றும் அமைதியான இந்து சமுத்திரத்தினால் மட்டுமே பொருளாதார செழிப்பை ஏற்படுத்த முடியும் என இலங்கை உறுதியாக நம்புவதாகவும், இந்தக் கருத்து இந்து சமுத்திரத்தை அமைதி நிறைந்த வலயமாக உயர்த்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டிலிருந்து வெளிப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார். அனைத்து உறுப்பு நாடுகள் மற்றும் உரையாடல் கூட்டாளர்களின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பு முயற்சிகள் மட்டுமே இந்த ஐ.நா. தீர்மானத்தை அடைந்து கொள்வதற்கும், ஆதரிப்பதற்கும் உதவும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் முன்னுரிமை மற்றும் கவனம் செலுத்தும் பகுதிகளில் தொடர்பு கொள்வதற்கான தளமொன்றாக அமையக் கூடிய வகையில், உறுப்பு நாடுகளுடன் சிறந்த நடைமுறைகள் உள்ளடங்கலாக அனுபவங்கள் மற்றும் நிபுணத்துவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், பாராளுமன்ற நட்புக் குழுவைக் கூட்டுவதற்குமாக தடம் 1 மற்றும் 1.5 இடைத்தொடர்புகளை தனது பதவிக்காலத்தில் ஊக்குவிப்பதற்கு இலங்கை விரும்புவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மேலும், 2018ஆம் ஆண்டு முதல் கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்க செயற்குழுவின் ஒருங்கிணைப்பாளர் என்ற ரீதியில், 2019 ஆகஸ்ட்டில் கொழும்பில் நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தின் போதான செயற்றிட்டத்தை அங்கீகரித்ததன் மூலம், அறிவு மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதனூடாக அதிகமான இணைப்புக்கள் இருப்பதை உறுதி செய்வதற்கான முயற்சிகளுக்கு இலங்கை அர்ப்பணித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நீலப் பொருளாதார மாநாட்டை நடாத்துவதற்கு எதிர்பார்க்கும் இலங்கை, இந்து சமுத்திர விளிம்பு சங்கப் பிராந்தியத்தில் கடல் வர்த்தகத்தை தாமதமாக்குவதற்கான காரணிகளை அடையாளம் காண்பது குறித்த ஆய்வையும் மேற்கொள்ளவுள்ளது. மீன்வள முகாமைத்துவம் தொடர்பான இந்து சமுத்திர விளிம்பு சங்க கொத்தணிக் குழுவில் இணைவதற்கான தனது ஆர்வத்தையும் இலங்கை சுட்டிக்காட்டியது. இடர் முகாமைத்துவம், நீலப் பொருளாதாரம், சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பரிமாற்றங்கள் போன்ற இந்து சமுத்திர விளிம்பு சங்க கொத்தணிக் குழுக்களிலும் இலங்கை உறுப்பினராக உள்ளது.

மேலதிக செயலாளர் பி.எம். அம்சா, சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி திசாநாயக்க, பொருளாதார விவகாரங்கள் (பல்தரப்பு) பிரிவின் பதில் பணிப்பாளர் நாயகம் அன்சுல் ஜான் மற்றும் வெளிநாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர் இனோகா தர்மதாச ஆகியோர் இலங்கைத் தூதுக்குழுவில் உள்ளடங்கியிருந்தனர்.

வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

 

2020 டிசம்பர் 17

 

Please follow and like us:

Close