இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில்  நடைபெறவுள்ளது

 இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பொறுப்பை இலங்கை ஏற்கவுள்ள அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டம் அடுத்த வாரம் கொழும்பில்  நடைபெறவுள்ளது

2023 அக்டோபர் 11ஆந் திகதி கொழும்பில் இலங்கை நடாத்தவுள்ள 23வது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்திற்காக இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் ஐயோரா உறுப்பு நாடுகளின் சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் உரையாடல் பங்காளிகள் அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளனர். கொழும்பில் நடைபெறும் அமைச்சர்கள் மட்டத்திலான கூட்டத்தில் பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மொரிஷியஸ், மலேசியா மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் உட்பட பதினாறு அமைச்சர்களும், அவுஸ்திரேலியா, கொமொரோஸ், பிரான்ஸ், இந்தோனேசியா, கென்யா, மடகாஸ்கர், மாலைதீவு, மொசாம்பிக், ஓமான், சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, சோமாலியா, தான்சானியா, தாய்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யெமன் (உறுப்பு நாடுகள்) மற்றும் சீனா, எகிப்து, சவுதி அரேபியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, ரஷ்யக் கூட்டமைப்பு, துருக்கி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐக்கிய அமெரிக்கா (உரையாடல் பங்காளிகள்) ஆகிய நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்குபற்றவுள்ளனர்.  அமைச்சர்கள் குழு என்பது இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் மிக உயர்ந்த அமைப்பாகும்.

தற்போதைய தலைவரான பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் தலைமைப் பதவியை  வழங்கும்போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சபைக்கு தலைமை தாங்குவார்.

இந்த சபைக்கு முன்னதாக, வெளியுறவு செயலாளர் அருணி விஜேவர்தன தலைமையில் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள்  குழுவின் 25வது கூட்டம் (அக்டோபர் 9-10) நடைபெறும்.

1997 இல் நிறுவப்பட்ட இந்து சமுத்திர விளிம்பு சங்கம், இந்து சமுத்திரத்தின் விளிம்பில் உள்ள அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும். அதன் உறுப்பினர்கள்  ஆபிரிக்கா, மேற்கு ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியா வரை பரவியுள்ளனர்.இன்று, இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 23 உறுப்பு நாடுகள் மற்றும் 11 உரையாடல் கூட்டாளர்கள் என்ற அளவில் விரிவடைந்துள்ளது. 23வது அமைச்சர்கள் கூட்டத்தில் 2023 முதல் 2025 வரையான காலப்பகுதிக்கான இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் தலைமைப் பதவியை இலங்கை ஏற்கும்.

வர்த்தகம் மற்றும் முதலீடு, கடல்சார் காவல் மற்றும் பாதுகாப்பு, மீன்பிடி முகாமைத்துவம், இடர் முகாமைத்துவம் மற்றும் பசுமைப் பொருளாதாரம் உள்ளிட்ட சங்கத்தால் அடையாளம் காணப்பட்ட ஆறு முன்னுரிமைப் பகுதிகளில் ஒத்துழைப்பதற்கான வழிகள் குறித்து அமைச்சர்கள் ஆலோசிக்கவுள்ளனர். இந்து சமுத்திர  விளிம்பு சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளின் 25வது குழுவின் பரிந்துரைகளால் அவர்கள் வழிநடத்தப்படுவார்கள்.

இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி சல்மான் அல் ஃபரிசி மற்றும் மொரிஷியஸில் உள்ள இந்து சமுத்திர விளிம்பு சங்க  செயலகத்தின் பணிப்பாளர்களும் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

விஜயம் செய்யும் அமைச்சர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கூட்டாக சந்திக்கவுள்ளதுடன், இலங்கையில் தங்கியிருக்கும் போது, இலங்கையின்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஏனைய அமைச்சர்களுடனும் இருதரப்பு கலந்துரையாடல்களிலும் ஈடுபடுவர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 அக்டோபர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close