பொது இராஜதந்திரம் மற்றும் பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவுகள், நேபாளம் மற்றும் இலங்கைக்கான அமெரிக்க பிரதி உதவி இராஜாங்க செயலாளர் தூதுவர் கெல்லி கெய்டர்லிங், இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களை உள்ளடக்கிய பரந்த அளவிலான கலந்துரையாடல்களில் வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகேவுடன் 2021 நவம்பர் 15ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சில் வைத்து ஈடுபட்டார். தூதுவர் கெய்டர்லிங் 2021 நவம்பர் 13 முதல் 15 வரையான காலப்பகுதியில் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்தார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியை வெளியுறவுச் செயலாளர் அன்பாக வரவேற்றார்.
கோவிட்-19 தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கும், எம்.வி. - எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொருளாதாரத் தாக்கத்தைத் தணிப்பதற்கும் வழங்கப்பட்ட தொடர்ச்சியான உதவிகளுக்காக வெளியுறவுச் செயலாளர் அமெரிக்க அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். ஆழ்கடலில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் இலங்கையின் திறனை அதிகரிக்கவும், அதிக அளவில் ஏனைய சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்கவும் உதவும் மூன்றாவது கட்டர் 'டக்ளஸ் முன்றோ' ஐ இலங்கைக் கடற்படைக்கு அண்மையில் பரிசாக வழங்கியமைக்காக அமெரிக்க அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கத்தின் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், புனர்வாழ்வு மற்றும் மனித உரிமைகள் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விஜயம் செய்திருந்த அமெரிக்க அதிகாரிருக்கு அவர் விளக்கமளித்தார்.
அமெரிக்க - இலங்கை கூட்டாண்மை உரையாடலை ஒன்று கூட்டுதல் உட்பட இரு நாடுகளுக்குமிடையில் நடைபெற்று வரும் இருதரப்பு முயற்சிகளை வெளியுறவுச் செயலாளரும், அமெரிக்க பிரதி உதவி இராஜாங்க செயலாளரும் மீளாய்வு செய்தனர். ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், காலநிலை மாற்றம் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களை எதிர்த்துப் போராடுவதல் மற்றும் இயற்கை விவசாயம் ஆகியன மீதான சர்வதேச ஒத்துழைப்பின் அவசியம் போன்ற முக்கியமான சமகால விடயங்கள் குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
வெளிநாட்டு அமைச்சு,
கொழும்பு
2021 நவம்பர் 16