அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா  நுலாண்ட் தனது இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

 அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா  நுலாண்ட் தனது இலங்கைக்கான விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார்

அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட் 2022 மார்ச் 22 முதல் 23 வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே ஆகியோருடன் துணைச் செயலாளர் நுலாண்ட் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில்  ஈடுபட்டார். துணைச் செயலாளரை அன்புடன் வரவேற்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், அமெரிக்காவை ஒரு முக்கிய பங்காளியாக இலங்கை கருதுவதாகவும், நீண்ட கால உறவுகளை மேலும் உயர்த்துவதற்கு பைடன் நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுவதற்கு எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

தொற்றுநோயிலிருந்து இலங்கை மீண்டு வருவதாலும், இலங்கைக்கு நல்கப்பட்ட அதிகமான அமெரிக்க முதலீடுகளை ஊக்குவிப்பதாலும், பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது மிகவும் முக்கியம் வாய்ந்ததாகும் என்றும் அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார். மார்ச் 22ஆந் திகதி பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கான சீர்திருத்தங்கள் உட்பட நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றின் முன்னேற்றத்தையும் அவர் சுட்டிக் காட்டினார். இரு நாடுகளினதும் பரஸ்பர நலனுக்காக, எழுபது ஆண்டுகளுக்கும் மேலான வலுவான இருதரப்பு உறவுகளை பன்முகக் கூட்டாண்மையாக ஒருங்கிணைப்பதற்கு இரு தரப்பினரும் தீர்மானித்தனர்.  ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பங்காளியான இலங்கைக்கு ஆதரவளப்பதற்கு அமெரிக்கா ஆர்வமாக இருப்பதாக துணைச் செயலாளர் நுலாண்ட் வலியுறுத்தினார்.

இலங்கை - அமெரிக்கக் கூட்டாண்மை உரையாடலின் 4வது அமர்வின் போது, சந்தை அணுகல், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புக்களை ஆராய்வதற்கான தமது நோக்கத்தை இரு பிரதிநிதிகளும் மீண்டும் வலியுறுத்தினர். காலநிலை மாற்றம் மற்றும் ஏனைய சுற்றுச்சூழல் சார்ந்த சவால்களை எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து செயற்பட அவர்கள் மேலும் உறுதியளித்ததுடன், கடல்சார் பாதுகாப்பில் தொடர்ந்தும் ஒத்துழைப்பதற்குத் தீர்மானித்தனர். அபிவிருத்தி மற்றும் செழுமைக்காக நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை முன்னெடுத்த நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றது. இரு தரப்பு காவல் மற்றும் பாதுகாப்புத் துறை ஒத்துழைப்பை இரு பிரதிநிதிகளும் வரவேற்றதுடன், இலங்கையுடனான பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை ஆராய்வதற்கு அமெரிக்கா தீர்மானித்தது. கல்வி மற்றும் கலாசாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே  நடைபெற்று வரும் ஒத்துழைப்பிற்கு இரு பிரதிநிதிகளும் வலுவான ஆதரவைத் தெரிவித்தனர்.

விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நுலாண்ட், ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்ததுடன், கொழும்புத் துறைமுகத்திற்கு விஜயம் செய்து, சிவில் சமூகத்  தலைவர்கள் மற்றும் தனியார் துறையினரையும் சந்தித்தார்.

பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகே, வெளிநாட்டு அலுவல்கள், பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு, நீதி, சுகாதாரம், விவசாயம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், கல்வி அமைச்சுக்கள் மற்றும் வர்த்தகத் திணைக்களம், முதலீட்டு சபை, வெளிவளத் திணைக்களம் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தக் கூட்டாண்மை உரையாடலில் பங்கேற்றனர். அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச்  செயலாளர் டொனால்ட் லூ, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், இந்தோ-பசிபிக் பாதுகாப்பு விவகாரங்களுக்கான முதன்மை துணைப் பாதுகாப்புச் செயலாளர் அமண்டா டோரி மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் துணைச் செயலாளர் நுலான்டுடன் இணைந்திருந்தனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 மார்ச் 28

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close