இலங்கை ஜனாதிபதி அவர்களின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கை 2025 ஜூலை 28

இலங்கை ஜனாதிபதி அவர்களின் மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கை 2025 ஜூலை 28

இலங்கை ஜனாதிபதி அவர்களின்

மாலைத்தீவிற்கான உத்தியோகபூர்வ பயணத்தின்போது வழங்கப்பட்ட ஊடக அறிக்கை

2025 ஜூலை 28

 

மேதகு ஜனாதிபதி முகமது முய்சு அவர்களே,

கௌரவ அமைச்சர்களே,

பெண்களே, ஆடவர்களே,

ஊடக நண்பர்களே

ஆயுபோவன், அஸ்ஸலாமு அலைக்கும், வணக்கம்!

இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவுகள் மற்றும் இருநாடுகளுக்கிடையிலுமுள்ள நல்லுறவை அடையாளப்படுத்துமுகமாக, மாலைத்தீவிற்கான எனது முதலாவது உத்தியோகபூர்வப் பயணமாக மாலேவை வந்தடைந்திருப்பது மனமகிழ்ச்சி அளிக்கிறது. இப்பயணமானது, எமது உறவுக்குப் புதுப்பிக்கப்பட்டதும், புத்துணர்ச்சிமிக்கதுமாக வலுச்சேர்ப்பதுமாக அமைந்தது.

இவ்வாண்டு இலங்கைக்கும் மாலைத்தீவிற்கும் இடையே முறையான இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டு 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த நேரத்தில் மாலைத்தீவுக்கான எனது வருகையும் குறிப்பிடத்தக்கதொரு நிகழ்வாக அமைகிறது.

எனக்கும், எனது குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் உபசாரணைக்காக, அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சுவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊடக நண்பர்களே,

இலங்கையும் மாலைத்தீவும் பல நூற்றாண்டுகளாக நீடித்த உறவுகளை அனுபவித்து வருகின்றன. இந்தியப் பெருங்கடலின் கடற்கரை நாடுகளாக இருக்கும் எமதிரு நாடுகளும், பண்டைய கடல்சார் வர்த்தக வழிகள் மற்றும் பகிரப்பட்ட வரலாற்றைக்கொண்ட எமது தொடர்புகளால் வலுப்படுத்தப்பட்டுள்ளன.

சிறிது நேரத்திற்கு முன்பு, ஜனாதிபதி முய்சுவும் நானும், எமது பிரதிநிதிகளும் இருதரப்பு ஆலோசனைகளை முடித்துக்கொண்டோம். நாம், எமது உறவுகளின் தற்போதைய நிலை குறித்து விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டோம்; மேலும் எதிர்காலத்தில் பரஸ்பர ஆர்வமுள்ள துறைகளில் எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நோக்குகள் மற்றும் வழிமுறைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

இலங்கைக்கு, அனைத்து சந்தர்ப்பங்களிலும் வழங்கப்பட்ட உறுதியான ஆதரவிற்காக, ஜனாதிபதி முய்சு மற்றும் மாலைத்தீவு அரசாங்கத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்தேன்.

எமது ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், எமது மக்களின் பரஸ்பர நன்மைக்காக, எமது உறவை பன்முகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும், ஜனாதிபதி முய்சுவும் நானும் ஒப்புக்கொண்டோம்.

பல இலங்கையர்களுக்கு, வேலைவாய்ப்புக்கான சாத்தியமான இடமொன்றாக மாலைத்தீவை உறுதி செய்தமைக்காக, ஜனாதிபதி முய்சுவுக்கு நான் நன்றி தெரிவித்தேன். மாலைத்தீவின் சமூகத்திற்கும், அதன் பொருளாதாரத்திற்கும் இலங்கையர்களால் வழங்கப்படும் பங்களிப்பைக் காண்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல், இலங்கையில் உள்ள மாலைத்தீவைச் சேர்ந்த மக்கள், இலங்கை சமூகம் மற்றும் பொருளாதாரத்திற்கு அளித்த பங்களிப்பையும்  நாம் பாராட்டுகிறோம்.

ஊடக நண்பர்களே,

இலங்கை மற்றும் மாலைத்தீவு கல்விசார் ஒத்துழைப்பில், வலுவானதொரு கூட்டாண்மையைக் கொண்டுள்ளன. பல ஆண்டுகளாக மாலைத்தீவு மாணவர்கள் மற்றும் நிபுணர்களை ஆதரிப்பதில் இலங்கையர்களான நாம் முக்கிய பங்கு வகித்துள்ளோம். இத்துறையில் மேலும் ஒத்துழைப்பதற்கான நோக்குகள்  மற்றும் வழிமுறைகளை ஜனாதிபதி முய்சுவும் நானும் ஆலோசித்தோம்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பு மற்றும் முக்கிய துறைகளில் முதலீடுகள் குறித்தும் நாங்கள் கவனம் செலுத்தினோம்.

மாலைத்தீவு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளுக்கு இலங்கையை எப்போதும் நம்பகமான இடமாகக் கருதலாம் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலீட்டாளர்களை ஆதரிப்பதற்காக இலங்கையால் தற்போது உருவாக்கப்பட்டு வரும் ஒற்றைச் சாளர அமைப்பு மற்றும் முதலீட்டாளர்களை மேலும் ஊக்குவிப்பதற்காக நிதி மற்றும் நிதி சாராத ஊக்கத் திட்டங்கள் குறித்து நான் ஜனாதிபதி முய்சுவிடம் தெரிவித்தேன். இலங்கையில் முதலீடு செய்ய மாலைத்தீவு முதலீட்டாளர்கள் ஆராயக்கூடிய முதலீட்டாளர் நலன்சார் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழிற்துறை மண்டலங்களான, இலங்கையில் உள்ள நவீன தொழில்நுட்ப பூங்காக்கள் குறித்தும் அவருக்கு விளக்கினேன்.

மேலும், மாலைத்தீவு வணிகர்களை குறிப்பாக தகவல் தொழிநுட்பம்/செயற்கை நுண்ணறிவு, மீன்வளம் மற்றும் விவசாயப் பதப்படுத்துதல், சுற்றுலா மற்றும் ஓய்வுநேரம் கழித்தல், காணி வர்த்தகம் மற்றும் நகர்ப்புற உட்கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தேன்.

ஊடக நண்பர்களே,

இரு நாடுகளுக்கும் சுற்றுலா என்பது முக்கியமானதொரு பொருளாதார உந்து சக்தியாகும். இச்சூழலில், சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பு குறித்தும் நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம். விமானப் போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்துவது, குறிப்பாக விமான இணைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் ஆலோசித்தோம்.

விவசாயம் மற்றும் இளைஞர் வலுவூட்டல் மற்றும் விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து நாங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவு நாடுகளாக, மீன்வளம் மற்றும் கடற்துறையில் உள்ள பெரும் ஆற்றலை நாங்கள் ஒப்புக்கொண்டோம். புதுமையான மற்றும் நிலையான மீன்பிடி நடைமுறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து நாங்கள் விவாதித்தோம். அரேபிய கடலுக்கு சுமூகமான அணுகலுக்காக இலங்கை மீன்பிடி கப்பல்களுக்கு போக்குவரத்து வழித்தடத்தை வழங்குவது மற்றும் ஒத்துழைப்புக்கான மேலதிக வழிகள் குறித்து நாங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம்.

ஊடக நண்பர்களே,

இலங்கையும், மாலைத்தீவும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஆழ்ந்த அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன. இலங்கையையும், அதன் முழு சமூகத்தையும், நிலையானதும், தொடர்ச்சியானதுமான முறையில் உயர் மட்டத்திற்கு உயர்த்துவதற்காக சமூக மேம்பாடு, சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் நெறிமுறை மேம்பாடு ஆகிய மூன்று முக்கிய தூண்களின் மூலம் செயற்படுத்தப்படுகின்றை 'தூய்மையான இலங்கை' திட்டத்தை எனது அரசாங்கம் தொடங்கியுள்ளது. திண்மக்கழிவு முகாமைக்கான 'Maldives Clean Environment' திட்டத்தை வெற்றிகரமாக செயற்படுத்தியதற்காக ஜனாதிபதி முய்சுவைப் பாராட்டுகையில், காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதலின் சவாலை எதிர்கொள்வதில் கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

2030 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலங்கை இலக்கொன்றை நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கை அடைய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நமது இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான ஒத்துழைப்பை நான் முன்மொழிந்தேன்.

பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பு குறித்தும் நாம் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம்.

ஊடக நண்பர்களே,

இலங்கை மற்றும் மாலைத்தீவுகள் வலுவான கலாச்சார பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. எமது மொழிகளில் குறிப்பிடத்தக்க ஒற்றுமைகள் உள்ளன; சிங்களமும் திவேஹியும் ஒரே வேரிலிருந்து உருவாகின்றன. மக்களிடையேயான தொடர்புகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதில் எமது ஆலோசனைகள் கவனம் செலுத்தின.

பிராந்திய மற்றும் பல்தரப்பு ஒத்துழைப்புத் துறையில், மாலைத்தீவுகள் இலங்கைக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்ததோடு, மாலைத்தீவுக்கு இலங்கையின் ஆதரவை உறுதி செய்தேன். இரு நாடுகளும் பல்வேறு சர்வதேச அமைப்புகளில் தொடர்ந்து ஆதரவைப் பரிமாறிக் கொள்வதுடன், ஒருவருக்கொருவர் எமது ஒத்துழைப்பைத் தொடர நாங்கள் உறுதியளித்துக்  கொண்டோம்.

பரஸ்பர வசதியான திகதியில் இலங்கைக்கு வருகை தருமாறு அதிமேதகு ஜனாதிபதி முகமது முய்சுவை அழைத்தேன்.

ஊடக நண்பர்களே,

எனது இவ்வருகையின் போது, நான் வணிக மன்றத்தில் உரையாற்றுவதுடன், மாலைத்தீவில் உள்ள இலங்கை சமூகத்தினரையும் சந்திக்கவுள்ளேன்.

மாலைத்தீவில், எனக்கும் எனது பிரதிநிதிகளுக்கும் வழங்கப்பட்ட அன்பான உபசாரணைக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவிக்க இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

மாலைத்தீவுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து மேம்படுத்துவதற்கும், ஆழப்படுத்துவதற்கும் இலங்கை முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை மீண்டும் வலியுறுத்துவதன் மூலம் நான் இத்துடன் எனது உரையை நிறைவு செய்ய  விரும்புகிறேன்; எமக்கிடையிலான இவ்வுறவு எதிர்வரும் ஆண்டுகளில் மேலும் பலப்படுத்தப்படும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

நன்றி. ஷுக்ரியா.

Please follow and like us:

Close