ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும்  பேச்சுவார்த்தைகள் லங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை (ஜெனீவா, 04 மார்ச் 2022)

ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் மற்றும் பிற சர்வதேச நிறுவனங்களுக்கான இலங்கையின் நிரந்தர பணியகம் மனித உரிமைகள் கழகம் 49 ஆவது வழமையான அமர்வு இலங்கை குறித்த மனித உரிமை உயர்ஸ்தானிகரகத்தின் அறிக்கை மீதான ஊடாடும்  பேச்சுவார்த்தைகள் லங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் கௌரவ. பேரா. ஜி.எல். பீரிஸ் அவர்களின் அறிக்கை (ஜெனீவா, 04 மார்ச் 2022)

தலைவர் அவர்களே,

இலங்கை மீதான 46/1 தீர்மானமானது இக்கழகத்தின் பிரிக்கப்பட்ட வாக்குகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்தின் ஆழமான குறைபாடுள்ள நடைமுறை மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத உள்ளடக்கம், குறிப்பாக ஆதாரங்கள் சேகரிக்கும் பொறிமுறை என்று அழைக்கப்படும் OP பந்தி 6 ஆகியவற்றுடன்,   இத்தீர்மானத்தின் அடிப்படையுடன் உடன்பாடின்றி, இலங்கையும் பிற நாடுகளும்  எதிர்த்தன. இத்தீர்மானமானது, இக்கழகத்தின் நிறுவன கொள்கைகளான; பாரபட்சமற்ற தன்மை, தற்சார்பற்ற குறிக்கோள் மற்றும் தேர்ந்தெடுக்காத தன்மை ஆகியவற்றிற்கு நேர் எதிராகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தீர்மானம் 60/251 மூலம் உறுப்பு நாடுகள் வழங்கிய ஆணையை மீறிச் சென்றது. நான் இவ்விடயம் தொடர்பான இலங்கையின் கருத்துக்களை மார்ச் 01 ஆம் திகதி இச்சபையில் தெரிவித்துள்ளேன்.  உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பான எமது கருத்துக்களையும் உரிய நேரத்தில் சமர்ப்பித்தோம்.  இதை செயலகம், உயர் ஸ்தானிகரின் எழுத்துப்பூர்வ புதுப்பித்தலுடன் ஒரே நேரத்தில் வெளியிடத் தவறியதை நாம் வருத்தத்துடன் குறிப்பிடுகின்றோம்.

நாம் இத்தீர்மானத்தினை நிராகரித்தபோதிலும், தொடர்ந்தும் மனித உரிமைகள் குறித்த சர்வதேச பணிப்பொறுப்புக்களை தன்னார்வத்துடன் நிறைவேற்றுவதுடன், இக்கழகம் உள்ளிட்ட ஐக்கிய நாடுகளுடனும் தொடர்பில் இருப்போம். 18 ஜனவரி 2022 அன்று இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நமது பாராளுமன்றத்தில் கூறியது போல், "நாம் சர்வதேச சட்டங்கள் மற்றும் மரபுகளை மதிக்கும் ஒரு தேசம்". நாம் எமது முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை சீரான முறையில், இக்கழகத்துடனும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிற சம்பந்தப்பட்ட நிறுவங்களுடனும் நேர்மையான முறையிலும் வெளிப்படையாகவும்  பகிர்ந்துள்ளோம்.

உயர்ஸ்தானிகரால் இச்சபையில் முன்வைக்கப்பட்ட அறிக்கையில் பாரிய முரண்பாடுகளும் பலவீனங்களும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதிலுள்ள அடிப்படைக் குறைபாடு என்னவெனில், அதன் சகிக்க முடியாத ஊடுருவும் தன்மையாகும். இது, தொடர்ந்து மூன்று தேர்தல்களில் நம் நாட்டு மக்களால் பெரும்பான்மையாக ஆணையிடப்பட்ட இலங்கை அரசாங்கத்தின் முக்கிய செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதில் பாகுபாட்டினை தெளிவாக கண்டறியக்கூடிய ஒரு அம்சம் உள்ளது, அதாவது, மற்ற உறுப்பு நாடுகளைப் பொறுத்தமட்டில் இதேபோன்ற விசாரணை நடைமுறையை மேற்கொள்வதை இக்கழகம் நிச்சயமாக எடுத்துக் கொள்ளாது என்பதேயாகும். இது ஐக்கிய நாடுகள் அமைப்பின் அடித்தளத்தின் வேரையே தாக்குகிறது. உறுப்பு நாடுகளின் அளவு மற்றும் செல்வாக்கு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், உயர் ஸ்தானிகரால் பயன்படுத்தப்படும் தரநிலைகளின் சீரான தன்மை மற்றும் நிலைத்தன்மை, ஆகியவையும் ஐக்கிய நாடுகளின் சகோதரத்துவத்தின் அனைத்து உறுப்பினர்களின் இறையாண்மை சமத்துவம் தொடர்பான அத்தியாவசியக் கொள்கையுடன் உறுதியான இணக்கமும் இந்த அறிக்கையிலுள்ள பல பகுதிகளில் குறைகண்டுபிடிக்கும் தன்மையில் அத்துமீறப்பட்டுள்ளன.

இக்கழகத்தின் மனோபாவங்களுக்கு அடித்தளமாக இருக்கும் தார்மீகம் மற்றும் ஒழுக்கத்தின் அடிப்படையில் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தின் பரவலான மதிப்பீட்டிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின், குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் பலமும் கௌரவமும் பெறப்பட்டதால், இது எமக்கு கவலையளிக்கிறது. குறிப்பாக, இக்கழகத்தின் முன்னோடியான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவிதியைக் கருத்தில் கொண்டு, இந்த நம்பிக்கையை குறையாமல் தக்கவைத்துக்கொள்வது இன்றியமையாதது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் உண்மையாக நடந்தவற்றின் சிக்கலான தன்மையை உணராமல், மேலெழுந்தவாரியான முடிவுகள் பல இந்த அறிக்கையில் இடம் பெற்றிருப்பது ஆழ்ந்த வருத்தத்திற்குரிய விடயமாகும். எங்கள் எழுத்துப்பூர்வ பதிலில் இவை பற்றி விரிவாக விளக்கியுள்ளோம்.

வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சார பாரம்பரியத்திலிருந்து உருவாக்கப்பட்டதும், திறமையான சட்டங்களின் ஒருங்கிணைந்த பகுதியை உருவாக்கும் கடுமையான மீளாய்வுச்  செயன்முறைகளுக்குட்பட்ட இலங்கையின் அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்பின் கீழ் இயங்கும் நமது நாட்டின் செல்வாக்குள்ள நிறுவனங்கள் மீதான உயர் ஸ்தானிகரின் தேவையற்ற தாக்குதலால் நாங்கள் கலக்கமடைந்துள்ளோம்.

முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியான நேரத்தில், மனிதகுலம் அனைத்திற்கும் உகந்த பலனை அடையும் வகையில் கடுமையாக வரையறுக்கப்பட்ட வளங்களைப் பயன்படுத்துவது பற்றிய ஒரு கேள்வியும் உள்ளது.  ஒரு பாகுபாடான மற்றும் குறிப்பாக இலங்கை மீது இலக்கு வைக்கும் நோக்கத்திற்காக மில்லியன் கணக்கான டொலர்களைச் செலவிடுதலானது, இந்த வெளிப்படையான கட்டாயத்துடன் ஒத்துப்போகவில்லை. இந்த நேரத்தில் மிக முக்கியமானதாக இருக்கும் என்று பரந்த அளவிலான நாடுகளுக்குத் தோன்றும் இந்தக் கருத்தாய்வுகளில், இந்த அறிக்கை குறைவான அக்கறை காட்டுவது எங்களுக்கு பெரும் பரிதாபமாகத் தோன்றுகிறது.

எமது மக்களுக்காக நாம் மீட்டெடுத்த பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கும், சமமான  முறையில் நிலையான முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் உறுதியாக உள்ளது. வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ள சமத்துவம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் அடிப்படையில் எங்களுடன் பங்குதாரர்களாக சேர வேண்டும் என்ற நேர்மையான அறிவுரையுடன் எனது நாடு சர்வதேச சமூகத்தை அணுகுகிறது.

நன்றி தலைவர் அவர்களே.

Please follow and like us:

Close