ஹொலி சீ (வத்திக்கான்) தூதுவர் மாண்புமிகு பேராயர் பிரையன் என்கோசி உதேக்வே அவர்களுடன் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

ஹொலி சீ (வத்திக்கான்) தூதுவர் மாண்புமிகு பேராயர் பிரையன் என்கோசி உதேக்வே அவர்களுடன் கௌரவ வெளிநாட்டு அமைச்சர் சந்திப்பு

ஹொலி சீ (வத்திக்கான்) தூதுவர் பேராயர் பிரையன் என்கோசி உதேக்வே, வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களை வெளிநாட்டு அமைச்சில் வைத்து சமீபத்தில் சந்தித்தார்.

இலங்கைக்கும் ஹொலி சீக்கும் இடையிலான நெருங்கிய மற்றும் நட்பு சார்ந்த உறவுகள் குறித்து தெரிவித்த வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாப்பரசர் பிரான்சிஸ் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை நினைவு கூர்ந்தார். கல்வி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூக சேவைகள் சார்ந்த துறையில் ஹொலி சீ மற்றும் இலங்கையில் உள்ள கத்தோலிக்க திருச்சபை வழங்கிய உதவியை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார். கரிட்டாஸ் வழங்கிய தாராளமான அபிவிருத்தி உதவிகளையும் அவர் பாராட்டினார்.

கோவிட்-19 சூழலில், சுற்றாடல் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சர்வதேச அளவில் இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான ஒத்துழைப்பு தொடர்பிலும் வெளிநாட்டு அமைச்சர் கலந்துரையாடினார்.

ஜெனீவாவில் உள்ள இலங்கைத் தூதுவரை ஹொலி சீக்கும் இணைத்து அதிகாரமளிக்கப்பட்டவராக நியமிப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன தெரிவித்தார். 2018ஆம் ஆண்டு முதல் ஹொலி சீக்கு அங்கீகாரம் பெற்ற இலங்கைத் தூதுவர் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் அங்கீகாரமளித்து வழங்கப்படும் நியமனத்தை மீள மேற்கொள்வதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை தூதுவர் பாராட்டினார்.

இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான உயர்மட்ட விஜயங்களை எதிர்காலத்தில் பரிமாறிக் கொள்வதற்கான நம்பிக்கையை வெளிநாட்டு அமைச்சர் வெளிப்படுத்தினார்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2020 டிசம்பர் 20

 

Please follow and like us:

Close