வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் ஸ்லோவேனியாவில் இடம்பெறும் பிளெட் மூலோபாய கருத்துக்களம் - 2018இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்

வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் ஸ்லோவேனியாவில் இடம்பெறும் பிளெட் மூலோபாய கருத்துக்களம் – 2018இல் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றார்

Image 01 (1)

2018 செப்டெம்பர் 10 - 11 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற 13வது பிளெட் மூலோபாய கருத்துக்களத்தில் பங்குபற்றுவதற்காக, ஸ்லோவேனியாவின் பிரதி பிரதம மந்திரியும், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருமான கார்ல் எர்ஜாவக் அவர்களின் அழைப்பின் பேரில், வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் ஸ்லோவேனியாவிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். இந்த வருடத்திற்கான கருத்துக்களத்தின் தலைப்பு 'பிரிவுகளை இணைத்தல்' ஆகும்.

'தனித்து செயற்பட்டால் தோல்வியுறுவோம்: நிலையான எதிர்காலத்திற்காக ஒன்றாக செயற்படுதல்' என்ற தலைப்பில் இடம்பெற்ற குழு விவாதத்தில், இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க அவர்கள் ஒரு அங்கத்தவராக காணப்பட்டார். பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள், கல்வித்துறை, சிவில் சமூகம் மற்றும் பெருநிறுவனத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் மட்ட பேச்சாளர்களை இந்தக் குழு உள்ளடக்கியிருந்தது.

நீண்டகால வலு மற்றும் உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சாத்தியமான தீர்வாக விவசாயத்துறையில் உயிரியல் உர வகைகளை பயன்படுத்துதல் உள்ளடங்கலாக நீர் வலு, காற்று மற்றும் சூரிய வலு போன்ற புதுப்பிக்கக்கூடிய வலு மூலங்களை பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இராஜாங்க அமைச்சர் தனது உரையில் கவனம் செலுத்தினார். பூமியின் அடிப்படை வளம் என்ற வகையில் இயற்கைச் சுற்றாடல் மற்றும் அதன் உயிர்ப்பல்வகைமையின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்கான தேவைப்பாட்டினை அவர் மேலும் வலியுறுத்தினார். மேலும், கடல்வளச் சூழலின் பாதுகாப்பும் கூட புவியின் முக்கியமானதொரு அம்சம் என இராஜாங்க அமைச்சர் சிறப்பித்துக் கூறினார்.

இருதரப்பு அமர்வின் போது, இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க அவர்கள் ஸ்லோவேனியாவின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க செயலாளர் அன்ட்ரஜ் லொகார் அவர்களை சந்தித்தார். கலந்துரையாடல்களின் போது, இரு நாடுகளினதும் உறவுகளை மேலும் ஒருங்கிணைப்பதற்கான இலங்கையின் ஈடுபாட்டை அவர் மீள உறுதிப்படுத்தியதுடன், கலாச்சாரம், விஞ்ஞானம், கல்வி, வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துவதற்கான வழிகள் தொடர்பிலும் கலந்துரையாடினார். பல்தரப்பு விடயங்களில் பகிரப்பட்ட ஈடுபாடுகளை மேம்படுத்துவது தொடர்பிலும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.

பிளெட் மூலோபாய கருத்துக்களத்தின் இணைப்பாக, இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க அவர்கள் ஆர்ஜன்டீனா குடியரசின் முன்னாள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சுசன்னா மல்கொர்ரா அவர்களை சந்தித்து, தெற்கு - தெற்கு ஒத்துழைப்பிற்கான பகிரப்பட்ட ஈடுபாடுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடினார். ஜனநாயகத்தை வலுப்படுத்துதல், நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் மற்றும் நிலையான சமூக - பொருளாதார அபிவிருத்தியை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றுக்காக தேசிய ஒற்றுமை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் விபரிக்கப்பட்ட கண்ணோட்டத்தை அவர் மேலும் வழங்கினார்.

இராஜாங்க அமைச்சர் சேனாநாயக்க அவர்கள் மசிடோனியாவின் பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அன்ட்ரெஜ் ஸேர்னோவ்ஸ்கியை மேலும் சந்தித்ததுடன், இலங்கை மற்றும் மசிடோனியாவிற்கு இடையிலான இருதரப்பு ஒத்துழைப்புக்களை மீள்பார்வை செய்தார்.

இந்த விஜயத்தின் போது, ஒஸ்ட்ரியாவிற்கு சான்றளிக்கப்பட்டுள்ள ஸ்லோவேனியாவிற்கான இலங்கைத் தூதுவர் மற்றும் தூதரக உத்தியோகத்தர்கள் இராஜாங்க அமைச்சருடன் இணைந்திருந்தனர்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

 

21 செப்டெம்பர் 2018

 

 

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close