தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான உலக உணவுத் திட்டத்தின் பிராந்தியப் பணிப்பாளர் ஜோன் அய்லிஃப், 2022 செப்டெம்பர் 01ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
உணவுக்கான அணுகல் மற்றும் உணவு கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக உணவு முறைமைகளை வலுப்படுத்தி, குறிப்பாக சமுர்த்தி திணைக்களத்துடன் பிரதிபலிக்கும் பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான திட்டங்களை உருவாக்கும் பொருட்டு, தேசிய ஊட்டச்சத்துத் திட்டங்கள் மற்றும் தேசிய பாடசாலை உணவுத் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் தேசிய சுகாதார அமைப்பு உட்பட பல பகுதிகளில் ஆதரவை வழங்குவதற்காக, கடந்த தசாப்தங்களாக உலக உணவுத் திட்டம் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பாராட்டினார். நாடு எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து வெளிவருவதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பங்காளிகள் உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தி இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த முயற்சிகள் குறித்து அவர் பிராந்தியப் பணிப்பாளருக்கு விளக்கினார்.
நாட்டில் நடைபெற்று வரும் உலக உணவுத் திட்ட முன்முயற்சிகளின் முன்னேற்றம், குறிப்பாக நாட்டில் சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு தொடர்பான திட்டங்கள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு பிராந்தியப் பணிப்பாளர் விளக்கினார். இந்த சவாலான நேரத்தில் உலக உணவுத் திட்டம் இலங்கை அரசாங்கத்துக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து, நெருக்கமாக இணைந்து ஒத்துழைக்கும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 செப்டம்பர் 02