2022 ஜூன் 24 முதல் 25 வரை ருவாண்டாவின் கிகாலியில் நடைபெற்ற 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கலந்து கொண்டார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்கு முன்னதாக ஜூன் 23ஆந் திகதி பொதுநலவாய வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.
ருவாண்டாவின் ஜனாதிபதி பால் ககாமே தலைமையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், அரச தலைவர்கள் மற்றும் வெளியுறவு அமைச்சர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொதுநலவாயத்தின் ஐம்பத்து நான்கு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கிகாலியில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் அதிமாட்சிமை மிகு மகாராணி எலிசபெத் ஐஐ ஐ அதிமாட்சிமை மிகு வேல்ஸ் இளவரசர் பிரதிநிதித்துவப்படுத்தினார். பிளாட்டினம் விழாக் காணும் அதிமாட்சிமை மிகு மகாராணியாருக்கு, பொதுநலவாயத்தின் தலைவராக ஏழு தசாப்தங்களாக உறுதியான அர்ப்பணிப்பை நல்கியமைக்காக தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் வர்த்தகத்தை அதிகரித்தல் போன்ற பகிரப்பட்ட இலக்குகளை அடைவதில் பொதுநலவாயக் குடும்பத்தின் பணியை எடுத்துக்காட்டும் வகையில், 2022 பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் கருப்பொருள் 'பொதுவான எதிர்காலத்தை வழங்குதல்: இணைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மாற்றுதல்' ஆகும். 'ஜனநாயகம், அமைதி மற்றும் ஆட்சி', 'நிலையான மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி' மற்றும் 'கோவிட்-19க்குப் பிந்தைய மீட்பு' ஆகிய மூன்று கருப்பொருள் பகுதிகளின் கீழ் உறுப்பு நாடுகள் உயர்மட்டக் கலந்துரையாடல்களில் பங்கேற்றன.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில், கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து முழுமையாக மீள்வதற்கு வசதியாக இணைத்தல், புதுமைப்படுத்துதல் மற்றும் மாற்றியமைத்தல், 2030 நிகழ்ச்சி நிரலை அடைதல், மற்றும் பொதுநலவாயத்தில் பின்னடைவு மற்றும் முன்னேற்றத்தை அதிகரிக்கும் வழிகளில் மோதல்கள் மற்றும் நெருக்கடிகளுக்குப் பதிலளித்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை பிரதிநிதிகள் குழுவின் தலைவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
அமர்வுகளில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பீரிஸ், உலகம் தற்போது அனுபவித்து வரும் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதில் வலுவான நிறுவனங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். தற்போதைய எரிபொருள், உணவு மற்றும் மருந்துப் பொருட்களின் பற்றாக்குறையை, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் மிகவும் கடினமான சூழ்நிலைகளில் ஒன்று என விவரித்த அமைச்சர் பீரிஸ், இந்த நெருக்கடியான தருணத்தில் நாட்டிற்கு உதவிய அனைத்து நாடுகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்தார். பொருளாதார சீர்திருத்தங்களைத் தவிர, இலங்கையில் தேவையான அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் போது, காபோனிஸ் குடியரசு மற்றும் டோகோலீஸ் குடியரசை பொதுநலவாயத்தில் புதிய உறுப்பினர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், தற்போதைய பொதுச்செயலாளர் மாண்புமிகு பாட்ரிசியா ஸ்காட்லாண்ட் க்யூ.சி. தனது இரண்டாவது பதவிக்காலத்தைத் தொடருவதற்கு அவரை மீண்டும் நியமிக்கப்பட்டார். வாழும் நிலங்கள் மீதான நடவடிக்கைக்கான பொதுநலவாய அழைப்பு, நிலையான நகரமயமாக்கல் பற்றிய பிரகடனம் மற்றும் சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்புச் சீர்திருத்தம் குறித்த கிகாலி பிரகடனம் ஆகிய 3 ஆவணங்களை தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
இந்த அமர்வுகளில் ஐ.நா. வின் துணைப் பொதுச் செயலாளர் அமினா ஜே. முகம்மத் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஆகியோரும் கலந்து கொண்டதுடன், தமது நிறுவனங்களின் முன்னோக்குகளை முன்வைத்த அவர்கள், முக்கியமான விடயங்களை எதிர்கொள்வதற்காக பொதுநலவாய நாடுகள் அதிக நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்புக்களைப் பேணுவதற்கான யோசனைகளை முன்வைத்தனர்.
அடுத்த பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு 2024 இல் சமோவாவில் நடாத்தப்படும்.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் பக்க அம்சமாக, பல பொதுநலவாய நாடுகளைச் சேர்ந்த தனது சகாக்களுடன் அமைச்சர் பீரிஸ் தொடர்ச்சியான இருதரப்பு சந்திப்புக்களில் ஈடுபட்டார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு
கொழும்பு
2022 ஜூன் 29