வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

 வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபிய இராச்சியத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு

     

சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சரின் அழைப்பின் பேரில், இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, 2023 ஜனவரி 22 முதல் 27 வரை சவூதி அரேபியாவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் சப்ரி தனது சவூதி அரேபியப் பிரதமருடன் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவான இருதரப்பு கலந்துரையாடலை மேற்கொண்டார். அவர் இராச்சியத்தில் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் அவரது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட தாராளமான விருந்தோம்பல் மற்றும் அவரது வருகை தொடர்பாக செய்யப்பட்ட சிறந்த ஏற்பாடுகளுக்காக அமைச்சர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சருடனான சந்திப்பில், இரு நாடுகளுக்கும் இடையிலான சிறந்த இருதரப்பு உறவுகளை அமைச்சர் சப்ரி சுட்டிக் காட்டியதுடன், சர்வதேச அரங்குகளில், குறிப்பாக 2009, 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கத்துவம் வகித்த போது இலங்கைக்கு வழங்கிய ஆதரவுக்காக சவூதி அரேபியாவுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கையின் உட்கட்டமைப்பு மற்றும் ஏனைய அபிவிருத்திகளில் சவூதி அபிவிருத்தி நிதியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஏறக்குறைய 1.5 பில்லியன் சவூதி ரியால் பெறுமதியான பங்களிப்பையும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் காட்டப்பட்டுள்ள ஒற்றுமையையும் அமைச்சர் ஒப்புக்கொண்டார். ஏறக்குறைய 185000 இலங்கையர்களுக்கு விருந்தளித்தமைக்காக தனது பிரதியமைச்சருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர், இலங்கையர்களுக்கு திறமையான, அரைதிறன் மற்றும் தொழில்முறைப் பிரிவுகளில் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்தார். இலங்கையில் குறிப்பாக கொழும்புத் துறைமுக நகரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முதலீடு செய்யுமாறு சவூதி முதலீட்டாளர்களுக்கு அமைச்சர் சப்ரி அழைப்பு விடுத்தார்.

சவூதி அரேபியாவும் இலங்கையும் உண்மையான நண்பர்கள் என்றும், பல சர்வதேச விவகாரங்களில் ஒரே மாதிரியான கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதாகவும் சவூதி வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டார். ரியாத்தில் எக்ஸ்போ 2030 ஐ நடாத்தும் சவுதி அரேபியாவின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் முதல் நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த இலங்கைக்கு அவர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். எப்போதும் வர்த்தக நிறுவனங்களை முதலீடு செய்வதற்கான சாத்தியமான இடமாக சவூதி அரேபியாஇலங்கையை நோக்குவதற்கு ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் வழங்கிய புதுப்பிக்கப்பட்ட தகவல்களுக்கு பதிலளித்த சவூதி அமைச்சர், 'உலகம் முழுவதிலும் உள்ள தனது நண்பர்களிடமிருந்து இலங்கை நேர்மறையான கவனத்தைப் பெறுவதில் மகிழ்ச்சி அடைவதாக' குறிப்பிட்டார். கோவிட்டுக்கு முந்தைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த இரு நாடுகளுக்கும் இடையேயான விமான இணைப்பை மீண்டும் தொடங்குவதற்கு அமைச்சர்கள் ஒப்புக்கொண்டனர்.

அபிவிருத்திக்கான சவூதி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்சாத் உடனான தனது சந்திப்பின் போது, இலங்கை அமைச்சர், நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் காட்டப்படும் நெகிழ்வுத்தன்மைக்கு மத்தியிலும் தொடர்ந்து நிதியளித்தமைக்காக அபிவிருத்திக்கான சவூதி நிதியத்திற்கு நன்றி தெரிவித்தார்.

இந்த விஜயத்தின் போது, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி அரசாங்கங்களுக்கு இடையிலான நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடினார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் நாயகம் ஹிஸைன் பிராமின் தாஹாவுடனான சந்திப்பின் போது, ஈடுபாடுகளை மேம்படுத்தவும், சர்வதேச அரங்குகளில் தொடர்ந்தும் ஒத்துழைக்கவும் அமைச்சர் மற்றும் செயலாளர் நாயகம் ஆகியோர் ஒப்புக்கொண்டனர். இச்சந்திப்பின் போது, இலங்கைக்கு 'காணக்கூடிய மனிதாபிமான மற்றும் பொருளாதார ஆதரவை' வழங்குமாறு இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளையும் அமைச்சர் வலியுறுத்தினார்.

இஸ்லாமிய அபிவிருத்தி வங்கியின் துணைத் தலைவர் கலாநிதி ஜமீர் இக்பாலுடனான சந்திப்பில், இலங்கையின் பொருளாதாரத்திற்கு உதவும் நோக்கில் மாற்று நிதியைத் திறப்பதற்கான முதலீட்டு மாநாட்டை ஏற்பாடு செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் ஒருங்கிணைப்பதற்கு இந்த அமைப்பு முன்வந்தது.

வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் பொதுச் செயலாளர் கலாநிதி நயீப் ஃபலாஹ் எம் அல் ஹஜ்ரஃப் உடனான சந்திப்பின் போது, இந்தியா, சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவைத் தொடர்ந்து இலங்கைக்கும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தக அளவு ஆண்டுக்கு 2.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பைப் பொறுத்தமட்டில், இந்தப் பிராந்தியமே இலங்கைக்கு முதலிடம் வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 2022ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட 300,000 வேலைவாய்ப்பில், 257,000 பேர் இப்பிராந்தியத்தில் பணிபுரிந்ததாகவும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் குறிப்பிட்டார். வளைகுடா ஒத்துழைப்புப் பேரவையின் நாடுகளுக்கு இலங்கையில் கிடைக்கக்கூடிய சாத்தியமான முதலீட்டு வாய்ப்புக்களை ஆராய்வதன் அவசியத்தை அமைச்சரும் செயலாளர் நாயகமும் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், இலங்கைக்கும் வளைகுடா ஒத்துழைப்புப் பேரவைக்கும் இடையே கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கும் இணக்கம் காணப்பட்டது.

இந்த விஜயத்தின் போது அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஸகாத்தின், வரி மற்றும் சுங்க ஆணைக்குழுவின் ஆளுநர் (அமைச்சர் மட்டம்) பொறியியலாளர் சுஹைல் பின் முஹம்மத் அபன்மி ஆகியோர் சவூதி அரேபியாவின் ஸகாத், வரி மற்றும் சுங்க ஆணைக்குழுவின் தலைமையகத்தில் வைத்து அந்தந்த அரசாங்கங்களின் சார்பாக இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

மதீனா மாகாண ஆளுநரையும் சந்தித்த வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, மதீனாவில் இலங்கையர்களுக்கான அதிக வேலை வாய்ப்புக்கள் மற்றும் மேற்கு பிராந்தியத்திலிருந்து சவுதி சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்தல் ஆகியன குறித்து கலந்துரையாடினார்.

அமைச்சர் அலி சப்ரி முறையே ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள துணைத் தூதரகம் ஏற்பாடு செய்த ஒன்றுகூடல்களில் ரியாத் மற்றும் ஜித்தாவில் உள்ள இலங்கை சமூகங்களுடன் கலந்துரையாடினார்.

ஜித்தாவில் தான் துணைத் தூதவராக கடமையாற்றிய காலத்தில் நிறுவப்பட்ட ஜித்தாவில் உள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின்  மாணவர்களிடமும் அமைச்சர் உரையாடினார்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 ஜனவரி 27

Please follow and like us:

Close