இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் எல்சல்வடோர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு என்பவற்றுக்கிடையிலான இருபக்க அரச ஆலோசனைகளுக்கான முதல் அமர்வில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக அவர்கள் எல்சல்வடோர் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை ஜூலை 6 தொடக்கம் 09 வரை மேற்கொண்டிருந்தார். இந்த அமர்வின்போது வெளிநாட்டு அலுவல்கள், ஒருங்கிணைப்பு மற்றும் பொருளாதார ஊக்குவிப்புக்கான பிரதி அமைச்சர் கௌரவ கார்லஸ் கஸ்டனேடா அவர்கள் எல்சல்வடோர் தரப்பினை வழிநடாத்தினார்.
இக்கலந்துரையாடலின்போது இரு அமைச்சர்களும் கவனம் செலுத்திய முக்கிய விடயமாக எல்சல்வடோர் மற்றும் இலங்கையில் பரவலாக இருக்ககூடிய நீடித்த சிறுநீரக நோயை தடுப்பதற்கான ஒன்றிணைந்த செயல்முறைகள் காணப்பட்டது. கல்வி மற்றும் சுகாதார துறைகளில் காணப்படக் கூடிய சவால்களை முன்வைப்பதற்கு தெற்கு-தெற்கு கட்டமைப்பினூடாக விஞ்ஞான மற்றும் தொழினுட்ப உதவிகளை பயன்படுத்துவதற்கு அவர்கள் உடன்பட்டனர். இத்துறைகளில் பகிரப்பட்ட நோக்கங்களை பின்பற்றுவதற்கு விஞ்ஞான, தொழினுட்ப, கல்வி, மற்றும் கலாசார கூட்டுறவு தொடர்பான கட்டமைப்பு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்களை கண்டறிவதற்கு இரு அமைச்சர்களும் உடன்பட்டனர். பால் சமத்துவம் தொடர்பில், அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்வதற்கு இலங்கை மற்றும் எல்சல்வடோர் பொறுப்பேற்றுக் கொண்டன.
இருபக்க வர்த்தகம், இருபக்க முதலீடு மற்றும் கலாசாரம், விஞ்ஞானம், தொழினுட்பம், கல்வி, விவசாயம், சுற்றுலா போன்ற துறைகளில் எதிர்வுகூறத்தக்க ஒத்துழைப்பு தொடர்பாகவும் இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இருபக்க வர்த்தகத்தை பலப்படுத்துவதற்காக இருநாடுகளிலுமுள்ள வணிக சபைகளுக்கு இடையிலான வர்த்தக தொடர்புகளை ஊக்குவிப்பதற்கும் வர்த்தக சந்தைகளை நடாத்துவதற்கும் இரு அமைச்சர்களும் உடன்பட்டனர். இச் சந்தர்ப்பத்தில் 2018 நவம்பர் 14 தொடக்கம் 17 வரை சான் சல்வடோரில் நடைபெறவுள்ள 26வது சர்வதேச சந்தையான அரையாண்டு வர்த்த சந்தையில் ஆர்வத்துடன் பங்கெடுப்பதற்கு எல்சல்வடோர் இலங்கை அரசுக்கும் இலங்கை வர்த்தக சமூகத்திற்கும் அழைப்பு விடுத்தது.
இருபக்க அரச ஆலோசனைகளுக்கான முதல் அமர்வு முடிவடைந்ததைத் தொடர்ந்து இரு தரப்பினரும் கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட்டனர். இருபக்க அரச ஆலோசனைகளுக்கான இரண்டாவது அமர்வினை 2020ம் ஆண்டு இலங்கை நடாத்தவிருக்கின்றது.
இந்த விஜயத்தின்போது இராஜாங்க அமைச்சர், எல்சல்வடோர் ஜனாதிபதி அதிமேதகு சல்வடோர் சான்சஸ் செரன் அவர்களையும் உத்தியோகபூர்வமாக சந்தித்தார். இந்த சந்திப்புக்களுக்காக இராஜாங்க அமைச்சர் சேனாநாயக அவர்கள் ஹவானா, கியூபா மற்றும் எல்சல்வடோர் ஆகிய நாடுகளுக்கான தூதுவர் ஏ.எல். ரத்னபால அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டார்.