வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளருடன்  சந்திப்பு

 வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் பிரித்தானிய வெளியுறவுச் செயலாளருடன்  சந்திப்பு

வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரித்தானிய செயலாளர் எலிசபெத்  ட்ரஸ்ஸை வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தில் வைத்து வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் 2021 அக்டோபர் 26ஆந் திகதி சந்தித்தார்.

சுமார் 82% ஆன தகைமை வாய்ந்த சனத்தொகையினருக்கு முழுமையாக தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதன் விளைவாக இலங்கையில் இயல்பு வாழ்க்கை திரும்பி வருவதாக அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளியுறவுச் செயலாளர் எலிசபெத் ட்ரஸிடம் தெரிவித்தார். தொற்றுநோயின் போது வீழ்ச்சியடைந்த சுற்றுலாத்துறை தற்போது எண்ணிக்கையில் உயர்வடைந்து வருவதாகவும், ஏனைய வணிகங்களும் அபிவிருத்தியடைந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.  தொற்றுநோயின் உச்சக்கட்ட நிலைமையிலும் கூட மீள்தன்மையுடன் காணப்பட்ட இலங்கையின் ஆடைத் தொழில்துறையை தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற ஏனைய பொருட்களை உற்பத்தி செய்வதற்கு ஏதுவானதாக மாற்றியமைக்க முடிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை - இங்கிலாந்து இருதரப்பு உறவுகள் மிகவும் வலுவானதாகும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையில் அதிகமான ஒற்றுமைகள் இருப்பதாகவும், அதனை மேலும் கட்டியெழுப்புவதற்கு உறுதியான அடித்தளம் இருப்பதாகவும் அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார். சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்னர், சிலோன் காலனியாக இருந்தபோது, உலகளாவிய வயதுவந்தோருக்கான வாக்குரிமையை இலங்கையர்கள் அனுபவிக்கத் தொடங்கிய  வலுவான மற்றும் காலத்தால் சோதிக்கப்பட்ட ஜனநாயகப் பாரம்பரியத்திற்கானதொரு எடுத்துக்காட்டு இலங்கையாகும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

மனிதவள அபிவிருத்திக்காக தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள இலவச சுகாதாரம் மற்றும் பல்கலைக்கழக மட்டம் வரையான இலவசக் கல்வி போன்றவை குறித்துக் குறிப்பிட்ட அமைச்சர் பேராசிரியர்  பீரிஸ், இலங்கையின் இலவசக் கல்வி முறையின் கீழ் தகைமையடைந்த சிலர் இங்கிலாந்தின் பொருளாதாரத்திற்குப் பங்களித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இலங்கையின் அரசியல், வர்த்தகம், நிதி, சட்டம் மற்றும் கல்வி என ஒவ்வொரு அம்சத்திலும் பிரித்தானிய செல்வாக்கு காணப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இலங்கையின் முக்கிய நிறுவனங்களின் பெயர்கள் அவற்றின் தோற்றம் குறித்து விளக்கி நிற்கின்ற அதே வேளை, அவை பிரித்தானிய வர்த்தகர்களால் அமைக்கப்பட்டவை என்பதைக் குறிப்பிடுவதாகத் தெரிவித்தார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் இலங்கை கைச்சாத்திட்டுள்ள சுதந்திர  வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இவ்வாறான உடன்படிக்கைகள் பிரித்தானிய நிறுவனங்களுக்கு வாய்ப்புக்களை அளிப்பதாகவும், இத்தகைய சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்டு உற்பத்திகளை இலங்கையில் மேற்கொள்வதற்கான வழித்தடமாக அவை செயற்படுவதாகவும் குறிப்பிட்டார்.

புலம்பெயர் மக்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஊக்குவித்துள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கம் அணுகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். சிவில் சமூக அமைப்புக்களுடன் ஈடுபாடுகளை ஆரம்பித்துள்ள அரசாங்கம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள சில சந்தேக நபர்களை விடுவித்துள்ள அதே வேளை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்து,  கணிசமான மாற்றங்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார். காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் போன்ற அலுவலகங்கள் பயனுள்ள பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அமைச்சர் பேராசிரியர் பீரிஸ் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கான பதில் பிரதிபலிப்புக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் எலிசபெத் ட்ரஸ், தான் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள விஜயமானது அதிர்ஷ்டகரமானது என்றும்,  இரு நாடுகளும் முதலீடுகளில் அதிகமான ஈடுபாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இலங்கையும் ஒரு அங்கமாக அமையக்கூடிய வகையிலான பரந்த முதலீட்டு அமைச்சொன்றை இங்கிலாந்து உருவாக்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 அக்டோபர் 29

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close