வெளிநாடுகளில் தூதரக சேவைகள் வழங்குவதை இலங்கைத் தூதரகங்களில் மட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

வெளிநாடுகளில் தூதரக சேவைகள் வழங்குவதை இலங்கைத் தூதரகங்களில் மட்டுப்படுத்துவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

உலகளவில் கோவிட் - 19 வேகமாகப் பரவுவதற்கான தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, வெளிநாடுகளில் இலங்கைத் தூதரகங்களுக்கு வருகை தரும் இலங்கையர்களிடையே வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காக, வெளிநாடுகளில் உள்ள சில இலங்கைத் தூதரகங்கள் மற்றும் அவற்றின் அங்கீகாரம் பெற்ற நிலையங்களில் மார்ச் 16 முதல் மறு அறிவித்தல் வரை தூதரக சேவைகளை மட்டுப்படுத்துவதற்கு வெளிநாட்டு உறவுகள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

இந்த நாடுகளில் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ட்ரியா ஆகியவை உள்ளடங்கும்.

சம்பந்தப்பட்ட நாடுகளின் அதிகாரிகள் மேற்கொண்ட பயணத் தடைகள் மற்றும் மூடிவிடுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடுமையான கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் இந்த நாடுகளிலிருந்து மேற்கொள்ளும் அனைத்து பயணங்களுக்கும் இலங்கை அரசாங்கம் அண்மையில் விதித்த பயணத் தடை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில், 2020 மார்ச் 16 முதல் மறு அறிவித்தல் வரை, விடயங்களின் அடிப்படையில்  அவசியமானதாக கருதப்படும் தற்காலிக / அவசர பயண ஆவணங்களை வழங்குதல், இலங்கையர்களின் இறப்பு தொடர்பான ஆவணங்களை வழங்குதல் மற்றும் சான்றுப்படுத்துதல், மற்றும் ஏனைய அவசர தூதரக சேவைகளை வழங்குதல் என்ற வகையில் கட்டுப்படுத்துவதற்கு இந்தத் தூதரகங்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளன. தூதரகங்களிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் முன் நியமனங்களின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படும்.

ஆரம்ப நியமனங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், மட்டுப்படுத்தப்பட்ட தூதரக சேவைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும் விஜயங்களை மேற்கொள்பவர்களுக்காக இலங்கைத் தூதரகங்களால் அவசர தொடர்பு இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
கொழும்பு
14 மார்ச் 2020
Please follow and like us:

Close