வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன்கள் திரட்டல்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தொடர்பான செலவுகள் குறித்து 2022 மே 20ஆந் திகதி வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து, செலவீனங்களைக் குறைப்பதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பல்வேநு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகளில், வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமை மற்றும் இடைநிறுத்தம் செய்யப்பட்டமை ஆகியன உள்ளடங்கும். இதன் விளைவாக, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு 2021ஆம் ஆண்டிற்கான அதன் வருடாந்த வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளில் இருந்து ரூபா. 1,314 மில்லியனை மிச்சப்படுத்தியது.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் போது, மூலதனச் செலவீனங்களை மேற்கொள்ளாமல் செலவீனங்களைக் குறைப்பதற்கு மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் 40 உத்தியோகத்தர்களை மீள் நியமனமின்றி இலங்கைக்கு இடமாற்றம் செய்தல், தெரிவு செய்யப்பட்ட தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், 2022 ஏப்ரல் 26ஆந் திகதிய நிதி அமைச்சின் தேசிய வரவு செலவுத் திட்ட சுற்றறிக்கை இல. 3/2022 மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் அறிவுறுத்தல்களுக்கு இணங்க, மேலதிக செலவுகளைக் குறைக்குமாறு வெளிநாடுகளில் உள்ள அனைத்து தூதரகத் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பிரிவுத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் பராமரிப்பு மற்றும் சம்பளத்திற்காக 10.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்கள் 2021ஆம் ஆண்டில் ரூபா. 3,221 மில்லியன் வருமானத்தையும், தூதரக சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு ரூபா. 675 மில்லியன் வருமானத்தையும் ஈட்டியுள்ளன என்பதையும் அமைச்சு குறிப்பிட விரும்புகின்றது.

வெளிநாடுகளில் உள்ள இராஜதந்திர பிரதிநிதித்துவங்களைப் பேணுதல் மற்றும் வெளிநாட்டு உறவுகளை முன்னெடுத்தல் ஆகியன வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் பிரஜைகளுக்கு சேவைகளை வழங்குவதற்காக இன்றியமையாததும், முக்கியமானதுமாகும் என்பதை அமைச்சு குறிப்பிட விரும்புகின்றது.

செலவீனங்களை மேலும் குறைப்பதற்கான மேலதிக வழிகளை ஆராய்வதற்காக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பிரதமர் அலுவலகத்துடன் ஒருங்கிணைந்து செயற்படும்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2022 மே 20

Please follow and like us:

Close