2021 டிசம்பர் 29ஆந் திகதி அங்காராவின் இன்செக்கில் உள்ள 'ஓட்டிசம் மன்றப் பாடசாலையில்' சிறுவர்களுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை தூதரகம் கொண்டாடியது.
கல்வியை மட்டுமின்றி, விஷேட தேவையுடைய சிறுவர்களின் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும் விளையாட்டு மற்றும் தொழிற்பயிற்சி போன்ற மேலதிக பாடத்திட்டங்களையும் வழங்கும் விஷேட கல்வி நிலையமான ஓட்டிசம் மன்றப் பாடசாலைக்கு குடும்பத்தினர் மற்றும் தூதரக ஊழியர்களுடன் தூதுவர் எம். ரிஸ்வி ஹசன் விஜயம் செய்தார்.
சிறுவர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகத்துடனான சுருக்கமான உரையாடலின் போது, சிறுவர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கும், அவர்களது நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்குமாக பாடசாலை நிர்வாகத்தினால் ஒதுக்கப்பட்ட நேரத்திற்காக தூதுவர் ரிஸ்வி ஹாசன் நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த தூதுவர், நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
ஓட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய ஓட்டிசம் மன்றத்தின் தலைவர் அய்டின் கயான், கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக தம்மைத் தேர்ந்தெடுத்தமைக்காக தூதுவர் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வின் போது அங்காராவில் வசிக்கும் இலங்கையர்களுடன் தூதரக ஊழியர்களும் சிறுவர்களுடன் இணைந்து கிறிஸ்மஸ் கரோல்க பாடல்களைப் பாடியதுடன், பின்னர் சிறுவர்கள் இசை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை நிகழ்த்தி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தனர்.
தூதரக ஊழியர்கள் மற்றும் அங்காராவில் வசிக்கும் இலங்கையர்களின் பங்களிப்புக்களுடன் தூதரகம் சிறுவர்களுக்கு பரிசுகளை வழங்கியது. இந் நிகழ்வின் போது, இலங்கையின் உணவு வகைகள் மற்றும் தூய சிலோன் தேநீர் ஆகியன பகிரப்பட்டன.
இலங்கைத் தூதரகம்,
அங்காரா
2022 ஜனவரி 03