விடயம் 7: ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 45 வது அமர்வின் போது இடம்பெற்ற பலஸ்தீனம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட ஏனைய அரபு பிரதேசங்களிலுள்ள மனித உரிமைகளின் நிலைமை குறித்த பொது விவாதம்
30 செப்டம்பர் 2020
இலங்கையின் அறிக்கை
தலைவி அவர்களே,
அணிசேரா இயக்கம் வழங்கியுள்ள அறிக்கையுடன் இலங்கை தன்னையும் இணைத்துக் கொள்கின்றது.
இந்த விடயத்தில் இலங்கையின் நீண்டகாலக் கொள்கை ரீதியான நிலைப்பாடு தெளிவாக உள்ளது. பலஸ்தீனிய மக்களின் அரசொன்றிற்கான மற்றும் அவர்களது பிராந்தியத்திலுள்ள இயற்கை வளங்களுக்கான நியாயமான மற்றும் தவிர்க்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கின்றோம். அளவுகோல்களுக்குப் புறம்பாக, இந்தப் பிரச்சினையில் அமைதியான தீர்வுக்கான வாய்ப்புக்களை பாதித்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை சீர்குலைக்கும் விதமான எந்தவொரு இணைப்பும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக அமையும்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிராந்தியத்தில் இடம்பெறும் பலஸ்தீனிய மக்களின் தொடர்ச்சியான மனித உரிமை மீறல்களை பொதுச்செயலாளரின் அறிக்கை உட்பட சமீபத்திய ஐ.நா. அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. எனவே தனது இணைப்புத் திட்டங்களையும் இதேபோன்ற செயற்பாடுகளையும் முற்றிலுமாக தவிர்த்து, அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் பாதுகாப்பிற்கான பலஸ்தீனிய மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டும் என இஸ்ரேலிடம் கேட்டுக்கொள்கின்றோம். சம்பந்தப்பட்ட ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் இரு அரசுத் தீர்வுக்கு ஏற்ப மோதலைத் தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான மற்றும் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தைகளில் மீண்டும் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்திற்கு சமீபத்திய ஒப்பந்தம் வழிவகுக்கும் என்ற பொதுச் செயலாளரின் எதிர்பார்ப்பை நாங்கள் எதிரொலிக்கின்றோம்.
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிராந்தியத்திலும், கோவிட்-19 இன் விளைவாக இஸ்ரேலிலும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடியை நாங்கள் கவலையுடன் நோக்குவதுடன், தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சர்வதேச சமூகத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுமாறு இரண்டு தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம். ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள புதிய மனிதாபிமான சவால்களுக்கு பதிலளித்தமைக்காக ஐ.நா. நிவாரணம் மற்றும் பணிகள் முகவருக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவிக்கும் அதே வேளை, அவர்களது நடவடிக்கைகளுக்கு வலுவான ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக சர்வதேச சமூகத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.
பலஸ்தீனிய மற்றும் இஸ்ரேலிய மக்களின் நியாயமான மற்றும் முக்கியமான பாதுகாப்பு விடயங்களை அங்கீகரிக்கும் அதே வேளையில், இப்பகுதியில் தொடரும் நிச்சயமற்ற தன்மையானது, நெருக்கடியை மேலும் ஆழமாக்குவதற்கு மட்டுமே பங்களிப்புச் செய்யும் என்பதை இலங்கை அவதானிப்பதுடன், இரு தரப்பினரும் அதிகபட்சமான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதற்காக ஊக்குவிக்கின்றோம்.
1967 எல்லைகளின் அடிப்படையில் ஒருவருக்கொருவர் இணக்கமாக வாழும் இரு அரசுகளின் சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட அளவுருக்களுக்கு ஏற்ப, பேச்சுவார்த்தை ரீதியான தீர்வுகளுக்கு முழுமையாக ஆதரவளிப்பதற்கு இலங்கை உறுதியுடன் உள்ளது.
நன்றி.