லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த விரிவுரையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் வரவேற்பு உரை - 2023 பெப்ரவரி 03ஆந் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

லக்ஷ்மன் கதிர்காமர் ஞாபகார்த்த விரிவுரையில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியின் வரவேற்பு உரை – 2023 பெப்ரவரி 03ஆந் திகதி, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்

 

எனது அன்பு நண்பரான பங்களாதேஷ் வெளிநாட்டு அமைச்சர் அப்துல் மொமன் அவர்களே,

திருமதி சுகந்தி கதிர்காமர் அவர்களே மற்றும் கௌரவ அதிதிகளே.

இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய இராஜதந்திரியும், அரசியல்வாதியுமான லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவேந்தல் நிகழ்வில் சில வார்த்தைகள் பேசுவது  ஒரு கௌரவமாகும்.

1932 இல் கொழும்பில் பிறந்த லக்ஷ்மன் கதிர்காமரின் வாழ்க்கையானது, கல்வி, அறிவுசார் நோக்கங்கள் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றில் அர்ப்பணிப்புடனான ஈடுபாட்டுடன் குறிக்கப்பட்டது. அவர் ஒரு சிறந்த சட்டத்தரணியும், திறமையான பேச்சாளரும், தைரியமான மனித உரிமைகள் சட்டத்தரணியுமாவார். சட்டத்தின் மீதான அவரது ஆர்வம் அவரை இலங்கையின் மிகவும் வெற்றிகரமான மற்றும் மரியாதைக்குரிய சட்ட சிந்தனையாளர்களில் ஒருவராக ஆக்கியது. 1994 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக கடமையாற்றிய அவர், அசாத்தியமான திறமையும், துணிச்சலும்,  தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராகத் திகழ்ந்ததுடன், அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் இராஜதந்திரியாகப் பணியாற்றும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

அவரது அற்புதமான வாழ்க்கை குறித்துப் பேசுவதற்கு சில நிமிடங்கள் போதுமானதாக இருக்காது. கல்வி, அரசியல் அல்லது விளையாட்டுத் துறையில் அவருடைய சாதனைகளை நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே, சமாதானம், நீதி, மனித உரிமைகள்  மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான அவரது அர்ப்பணிப்பு இலங்கை வரலாற்றின் போக்கை எவ்வாறு மாற்றியது என்பதை இன்று நான் வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

பயங்கரவாத அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டு அழிந்து கொண்டிருந்த ஒரு தேசத்தில், லக்ஷ்மன் கதிர்காமர் அச்சமற்ற மற்றும் அர்ப்பணிப்புள்ள தலைவராக உருவெடுத்தார். விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய பயங்கரவாத அமைப்புக்களை கடுமையாக விமர்சித்த அவர், இலங்கையில் சமாதானம் மற்றும் நீதிக்காக அயராது வாதிட்டார். பயங்கரவாதம் தனது நாட்டிற்கு மட்டுமல்ல, முழு உலகிற்கும் அச்சுறுத்தலானது என்பதை புரிந்து கொண்ட அவர், அதனைத் தடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு உறுதியாக இருந்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய பயங்கரவாதக் குழுக்களை தனிமைப்படுத்துவதற்காக அவர்  உறுதியுடன் செயற்பட்டதுடன், பயங்கரவாதம் தொடர்பாக சர்வதேச சமூகத்தில் முன்னணிக் குரலாக வெளிப்பட்டார்.

அந்த நேரத்தில், தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலைப் போராளிகளாகவோ அல்லது ஒடுக்கப்பட்ட இனக்குழுவின் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகவோ சித்தரிக்க பலர் இருந்தனர். 12 மற்றும் 13 வயதுச் சிறார்களை வலுக்கட்டாயமாக அவர்களது குடும்பத்திலிருந்து அழைத்துச் சென்று, துப்பாக்கி மற்றும் சயனைட் குப்பிகளைத் திணித்து, அவர்களை மரணமடையச் செய்த ஒரு பிரிவினர் தீவிரவாதிகளாகவன்றி வேறு யாராகவும் கருதப்பட முடியாது.  அவர்களின் கொடூரத்திலிருந்து யாரும் தப்பவில்லை. இந்த நாட்டில் சிங்களவர்களைத் தவிர முஸ்லிம்களும், தமிழர்களும் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளானார்கள், அந்த வடுக்கள் இன்றுவரை இருக்கின்றன.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் வடக்கு, கிழக்குப் போர்க்களங்களில் மாத்திரம் வெற்றி பெறவில்லை, மாறாக உலகத் தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடன் உலகெங்கிலும் உள்ள மன்றங்களிலும், சந்திப்பு மன்றங்களிலும், அரங்குகளிலும் எமது உறுதியான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் இலங்கைக்காக கடுமையாகப் போராடினார். விடுதலைப் புலிகளின் நிதி சேகரிப்பை தடுத்தல், அவர்களின் ஆயுத அணுகலைத் துண்டித்தல் அல்லது விடுதலைப் புலிகளின் கொடூரத்தை ஏற்கும்படி சர்வதேச சமூகத்திற்கு விடாப்பிடியான அழுத்தம் கொடுத்தல் உட்பட கதிர்காமர் ஆற்றிய முக்கிய பங்கை பாராட்டாமல் நாம் போரில்  வெற்றி பெற்றமை குறித்து பேச முடியாது.

எனினும், கதிர்காமர் பயங்கரவாதத்திற்கு எதிரான ஒரு போர்வீரன் என்பதை விடவும் மேலானவராவார். ஒருங்கிணைப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் செயற்பட்ட அவர், எப்போதும் மக்களை ஒன்றிணைக்கவும் பொதுவான நிலையைக் கண்டறியவும் முயற்சித்தார். வலிமையான, ஒற்றுமையான, அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்புவதுதான் பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான ஒரே வழி என அவர் நம்பினார். ஒரு யதார்த்தவாதியாக, பயங்கரவாதத்தை தோற்கடிக்காமல் அமைதி சாத்தியமில்லை என்பதை அவர் புரிந்து கொண்டார், மேலும் உலகம் கோவிட்-19 தொற்றுநோயிலிருந்து கசப்பான பாடம் கற்றுக்கொள்வதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, எல்லோரும் பாதுகாப்பாக இல்லாவிட்டால், யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை அவர் முன்னறிவித்தார். அவர் ஒரு உண்மையான தேசபக்தர் ஆவார், அவர் ஒரு பொதுவான இலங்கை அடையாளத்தில் வேற்றுமையில் ஒற்றுமையின் சக்தியை கடுமையாக நம்பினார். இன அல்லது சாதி அடிப்படையில் பிரிக்கப்படுவதை ஒருபோதும் ஆதரிக்காத அவர், 'இலங்கையில் வாழும் மக்கள் முதலில் இலங்கையர்களே. பிறக்கும்போதே நமக்குக் கொடுக்கப்பட்ட இனம், மதம் அனைத்தும் அதற்குப் பிறகு தான். இலங்கையில் அனைத்து இனங்களையும் மதங்களையும் பொறுத்துக் கொண்டு நாம் வாழ வேண்டும்'. இக் கூற்றின் அடிப்படையில், மதம் அல்லது இனம் வெட்கப்பட வேண்டிய ஒன்று என சொல்லப்படவில்லை, மாறாக, வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இன்றியமையாதது என்பதால், பலதரப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் இனங்கள்  கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதப்படுகின்றது.

ஐக்கியம், கருணை மற்றும் மனித மாண்பு ஆகியவற்றை உறுதிப்படுத்துவதே இலங்கையின் முன்னோக்கிய ஒரே வழி என்ற அவரது உறுதியான நம்பிக்கை  காலத்தின் சோதனையாக உள்ளது. மோதலுக்குப் பின்னர் மிகவும் மோசமாக சேதமடைந்ததை சரிசெய்வதற்காக அதிகமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன - நாங்கள் சிறார்களை போர்க்களத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று வகுப்பறைகளில் சேர்த்தோம். நாங்கள் அவர்களின் கழுத்தில் இருந்த துப்பாக்கியையும், சயனைட் குப்பியையும் எடுத்துவிட்டு, அதற்குப் பதிலாக பேனா மற்றும் காகிதத்தை வைத்தோம். முன்னாள் போராளிகளுக்கு வாழ்க்கையில் மிகவும் தகுதியான வாய்ப்புக்களை வழங்கினோம், அவர்களை சமூகத்தில் மீண்டும் இணைத்தோம்.

இன்னும், செய்ய வேண்டிய பணிகள் அதிகம் உள்ளன. தேசத்தைக் கட்டியெழுப்புதல், நல்லிணக்கம், தேசிய ஐக்கியத்தை உருவாக்குதல் ஆகிய துறைகளில்  நாம் சாதிக்க வேண்டியது ஏராளம். லக்ஷ்மன் கதிர்காமரின் பாரம்பரியம் குறித்து நாம் சிந்திக்கும்போது, உலகளாவிய ரீதியில் அவரது அனைத்து கடின உழைப்பிற்கும், மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சமூகங்களை சிறந்த முறையில் நடாத்துவதற்கும் மற்றும் அனைத்து இலங்கையர்களின் உயர் வாழ்க்கைத் தரத்திற்கும் அவர் உள்நாட்டில் கடுமையாகப் போராடினார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

கதிர்காமர் 2005 இல் துரதிர்ஷ்டவசமாக படுகொலை செய்யப்பட்டபோது, சிறந்த இலங்கைக்கான அவரது நம்பிக்கைக்கு பெரும் விலை கொடுத்தார். அவரது வாழ்க்கையையும், அவரது பணியையும், நமது தேசத்துக்காக அவர் ஆற்றிய இறுதித் தியாகத்தையும் நாம் கௌரவிக்க வேண்டுமானால், ஐக்கிய இலங்கை குறித்த அவரது நோக்கை நனவாக்குவதற்கு நாம் பாடுபட வேண்டும். சாதி, இனம் மற்றும் மதம் என்ற வீண் பிடிவாதத்தை நாம் ஒதுக்கி வைத்துவிட்டு ஒரே தேசமாக ஒன்றிணைய வேண்டும். நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நமது நாட்டிற்காக எங்களால் முடிந்ததைச் செய்ய நாங்கள் பாடுபடும் 'இலங்கையர்' தேசம்  என்ற நிலைக்கு மாற வேண்டும்.

அதுவே, 'வீட்டில் தயாரித்த கேக்கிற்கு' (cake that was baked at home) நாம் செலுத்தும் உயரிய அஞ்சலி அதுவே என நான் நம்புகின்றேன்.

நன்றி.

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close