ரோம் நகருக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியுடனான சந்திப்பின்  போது  இலங்கைக்கான அமெரிக்க உதவியை வெளிவிவகார செயலாளர் வரவேற்பு

 ரோம் நகருக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியுடனான சந்திப்பின்  போது  இலங்கைக்கான அமெரிக்க உதவியை வெளிவிவகார செயலாளர் வரவேற்பு

ரோமில் உள்ள ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களுக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சிண்டி மெக்கெய்னை வெளிவிவகார செயலாளர் அருணி விஜேவர்தன 2022 செப்டெம்பர் 26ஆந் திகதி திங்கட்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் வைத்து சந்தித்தார். தூதுவர் மெக்கெய்ன், உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் அமெரிக்கப் பிரதிநிதியாவார். உணவு மற்றும் விவசாய  அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதி ஆகியவற்றின் வரவு செலவுத் திட்டங்களுக்கு அமெரிக்கா மிகப்பெரிய நிதிப் பங்களிப்பாளராக உள்ளது.

உணவு மற்றும் விவசாய அமைப்பு, உலக உணவுத் திட்டம் மற்றும் விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் போன்ற ரோமை தளமாகக் கொண்ட முகவரமைப்புக்கள் உட்பட இலங்கையில் உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலையான விவசாயத்தை உறுதிப்படுத்துவதற்காக தூதுவர் மக்கெய்னின் விஜயத்தினூடாக வழங்கப்பட்ட ஆதரவை வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன வரவேற்றார். உலக அளவில் உணவுப் பாதுகாப்புக் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அமெரிக்கா மேற்கொண்டுள்ள சமீபத்திய நடவடிக்கை குறித்து வெளிவிவகார செயலாளரிடம் தெரிவித்த தூதுவர் மெக்கெய்ன், மக்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்துத் தேவைகளை உறுதி செய்வதில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகளுக்குத் துணையாக இலங்கைக்கான அவர்களது நிலையான  மற்றும் தொடர்ச்சியான உதவிகளை உறுதியளித்தார்.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய வெப்ப வலய நாடுகளில் ஏற்படும் தாக்கம் குறித்து வெளிவிவகார செயலாளர் விஜேவர்தன மற்றும் தூதுவர் மெக்கெய்ன் ஆகியோர் கலந்துரையாடினர். குழந்தைகள் மீதான தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் விகிதாசாரத் தாக்கத்தைக் குறிப்பிட்டு, குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்தும், சவால்களுக்கு மத்தியில் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான  ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்தும் அவர்கள் மேலும் கலந்துரையாடினர்.

தூதுவர் மெக்கெய்ன் மறைந்த அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோன் மெக்கெய்னின்  மனைவி ஆவார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் மற்றும் ரோமில் உள்ள ஐ.நா. முகவர் நிலையங்கள் மற்றும் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கான அமெரிக்க தூதரகத்தின் சிரேஷ்ட  அதிகாரிகள் தூதுவர் மெக்கெய்னுடன் இணைந்திருந்தனர். இந்த சந்திப்பில் வெளிவிவகார செயலாளருடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2022 செப்டம்பர் 27

Please follow and like us:

Close