பொதுநலவாய நாடுகளின் பொதுநலவாய விவகாரங்களுக்கான கூட்டமைப்பு முகவரமைப்பின் தலைவர் திரு. எவ்ஜெனி ப்ரிமகோவ், வெளிநாடுகளில் வாழும் தோழர்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமான ஒத்துழைப்பு (ரோசோட்ருட்னிசெஸ்டோ) ஆகியோருடன் 2021 டிசம்பர் 13ஆந் திகதி சந்திப்பொன்றில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் பேராசிரியர் ஜனிதா ஏ. லியனகே, புலமைப்பரிசில்கள், பல்கலைக்கழகம் மற்றும் பாடசாலை சார்ந்த ஒத்துழைப்புக்கள், ஆசிரியர் பயிற்சி, இளைஞர் அபிவிருத்தி திட்டங்கள் போன்றவற்றில் இலங்கை - ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பை முன்னெடுப்பதற்கான வழிகள் மற்றும் ஏனைய பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
ரஷ்யாவில் கல்வி கற்க விரும்பும் இலங்கை மாணவர்களுக்காக 40 புலமைப்பரிசில்களை ரோசோட்ருட்னிசெஸ்டோ தற்போது ஒதுக்கீடு செய்துள்ளதுடன், தொழில்முறைத் தொடர்புகளை ஏற்படுத்தவும், 'புதிய தலைமுறை' என்ற குறுகிய காலக் கற்றல் பயணத் திட்டத்தினூடாக ரஷ்ய அரச மற்றும் அரச சாரா நிறுவனங்கள், இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புக்களுடன் நீண்டகாலக் கூட்டாண்மைகளை உருவாக்கவும் 25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளம் தலைவர்களை ரஷ்யாவிற்கு அழைத்துள்ளது.
இருதரப்பும் பரஸ்பர நலன் சார்ந்த அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக வழக்கமான ஈடுபாடுகளைத் தொடர்வதற்கு ஒப்புக்கொண்டன.
இலங்கைத் தூதரகம்,
மொஸ்கோ
2021 டிசம்பர் 30