இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 90 பௌத்தர்கள் அடங்கிய பௌத்த சுற்றுலாக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மும்பையில் உள்ள இலங்கையின் துணைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. தூதரகத்தால் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழி ஊக்குவிப்பு முயற்சிகளின் கீழ் இந்தியாவிலிருந்து பௌத்தர்கள் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது குழு இதுவாகும்.
2022 மே 12ஆந் திகதி கொழும்பை வந்தடைந்த குழுவினர், அனுராதபுரம், கண்டி, கதிர்காமம் போன்றவற்றில் உள்ள புனித பௌத்த தலங்களுக்கு விஜயம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மும்பை உல்லாஸ்நகரில் உள்ள மகா மகிந்த விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய நலுவெல ஆனந்த மகா தேரோவினால் இந்தக் குழு தலைமை தாங்கப்படுகின்றது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 6.5 மில்லியனுக்கும் அதிகமான பௌத்தர்கள் வசிப்பதுடன்,இது இந்தியாவின் மொத்த பௌத்த மக்கள்தொகையில் 77% ஆகும். மகாராஷ்டிராவில் 52 க்கும் மேற்பட்ட பாரம்பரிய பௌத்த தலங்கள் இந்திய தொல்லியல் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தலங்களில் 60-100 குகைகள் இருப்பதுடன், 'அஜந்தா எல்லோரா' குகைகளும் இதிஜல் உள்ளடங்கும்.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் புதிய நீரோட்டத்தை உருவாக்குவதற்காக, மகாராஷ்டிரா பௌத்தர்கள் மத்தியில் இலங்கையில் உள்ள பௌத்த தலங்களை தூதரகம் தீவிரமாக ஊக்குவித்து வருகின்றது.
இலங்கையின் துணைத் தூதரகம்,
மும்பை
2022 மே 19