மியன்மார் அரசாங்கம் 1.48 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடை

மியன்மார் அரசாங்கம் 1.48 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடை

 1.48 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமான பெறுமதியான அவசரமாகத் தேவைப்படும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை மியன்மார் அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு 2022 நவம்பர் 21ஆந் திகதி நன்கொடையாக வழங்கியது.

யாங்கூனில் உள்ள மருத்துவ ஆராய்ச்சித் திணைக்களத்தில் நடைபெற்ற கையளிக்கும் நிகழ்வில், மியன்மாரின் மத்திய சுகாதார அமைச்சர் வைத்தியர் தெட் கைங் வின் அவர்களால், மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டாரவிடம் இந்தப் பொருட்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

பொருட்களை ஏற்றுக்கொண்ட தூதுவர் ஜனக பண்டார, இந்தக் கடினமான நேரத்தில் இலங்கை மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்களை நன்கொடையாக வழங்கியமைக்காக மியன்மார் அரசாங்கத்திற்கும், அதன் மக்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

2022 ஜூன் 07ஆந் திகதி நடைபெற்ற தனது நற்சான்றிதழைக் கையளிக்கும் விழாவில் தூதுவர் ஜனக பண்டார விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க மியன்மாரின் சிரேஷ்ட ஜெனரல் மின் ஆங் ஹ்லைங் இந்த நன்கொடையை வழங்கியுள்ளார்.

யாங்கூனில் உள்ள இலங்கைத் தூதரகம் இந்த மருந்துப் பொருட்களை விரைவில் இலங்கைக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

 

இலங்கைத் தூதரகம்,

யாங்கோன்

 

2022 நவம்பர் 22

Please follow and like us:

Close