இலங்கையில் மின்சார வாகனங்களை ஒன்றிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உட்பட மின்சார வாகன உற்பத்தித் துறையில் உள்ள வாய்ப்புக்களை ஆராய்வதற்காக, இலங்கை முதலீட்டுச் சபை மற்றும் இந்தோனேசிய மின்சார வாகனத் தொழில் சங்கத்தின் (பெரிக்லிண்டோ) உறுப்பினர்களுக்கிடையிலான மெய்நிகர் சந்திப்பொன்றை ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகம் ஏற்பாடு செய்தது. இந்த மெய்நிகர் சந்திப்பு 2021 டிசம்பர் 07ஆந் திகதி நடைபெற்றது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக் கொள்கைக்கு இணங்க மின்சார வாகனத்தை மேம்படுத்துவதற்கான மூலோபாயத் திட்டத்தை இலங்கை உருவாக்கி வருவதாக இந்தோனேசியாவுக்கான இலங்கைத் தூதுவர் யசோஜா குணசேகர தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்புப் பணிப்பாளர் நிலுபுல் டி சில்வா மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிப் பணிப்பாளர் சுதத் ஜயசேகர ஆகியோர் முதலீட்டு விதிமுறைகள் மற்றும் தற்போதைய சந்தைத் தகவல்களை முன்வைத்ததுடன் பெரிகிளிண்டோவின் உறுப்பினர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதிலளித்தனர்.
மூன்றாவது செயலாளர் (வர்த்தகம்) ஹெஷானி பிரேமதிலக, அரசாங்க உறவுகள் அதிகாரி ஜெனிசா லஹோப் மற்றும் பொது இராஜதந்திர நிறைவேற்று அதிகாரி ஏ. பெப்ரி ஃபலா{ஹதீன் ஆகியோர் ஜகார்த்தாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திலிருந்து இந்த சந்திப்பில் பங்குபற்றியவர்களில் உள்ளடங்குவர்.
இலங்கைத் தூதரகம்,
ஜகார்த்தா
2021 டிசம்பர் 13