மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியேற்பு

மலேசியாவுக்கான இலங்கையின் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் 2022 ஜனவரி 27ஆந் திகதி கோலாலம்பூரில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

உயர்ஸ்தானிகராலயத்தின் ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எளிமையான வைபவத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட உயர்ஸ்தானிகர் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். மத அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் உள்ள இரண்டு முக்கிய இலங்கை பௌத்த விகாரைகளின் தலைமை மதகுருமார்கள் பின்னணியில் பிரித் ஓதுகையில், உயர்ஸ்தானிகர் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இலங்கையின் பாரம்பரியத்தைக் கடைப்பிடிக்கும் வகையில், 'கிரி இத்திரவீம' நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி, 'பாற்சோறு' மற்றும் ஏனைய இலங்கை உணவு வகைகள் தூதரக ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

தூதரக ஊழியர்களிடம் உரையாற்றிய உயர்ஸ்தானிகர், மலேசியாவில் இலங்கையின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான தனக்கு வழங்கப்பட்ட ஆணைக்காக ஜனாதிபதி, பிரதமர், வெளிநாட்டு அமைச்சர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் ஆகியோருக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்புறவுகளை நினைவுகூர்ந்த உயர்ஸ்தானிகர், இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையிலான பொருளாதார, அரசியல் மற்றும் மக்களுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் தனது முன்னுரிமைகளையும் எதிர்பார்ப்புகளையும் சுட்டிக் காட்டினார். எமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை வெற்றிகொள்வதற்கு இலங்கைக்கு உதவுவதற்காக, முதலீடுகளை ஈர்ப்பதற்கும், இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கும், இலங்கையை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கும் புதிய மற்றும் புதுமையான வழிகளைக் கண்டறிய முயற்சிப்பதற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் கடமையை அவர் குறிப்பாக வலியுறுத்தினார்.

உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்ட எயார் சீஃப் மார்ஷல் சுமங்கல டயஸ் இலங்கை விமானப்படையின் 17வது தளபதியாக செயற்பட்டவராவார்.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

மலேசியா

2022  பிப்ரவரி 03

Please follow and like us:

Close