மத இராஜதந்திரத்தின் மூலம் நட்புறவு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வளர்த்தல்:  மணிலாவில் உள்ள புனித ஜூட் தாடியஸ் தேசிய ஆலயத்தின் திருவிழா நாளில் இலங்கை ஊக்குவிப்பு

 மத இராஜதந்திரத்தின் மூலம் நட்புறவு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வளர்த்தல்:  மணிலாவில் உள்ள புனித ஜூட் தாடியஸ் தேசிய ஆலயத்தின் திருவிழா நாளில் இலங்கை ஊக்குவிப்பு

திருச்சபை பாதிரியார் மற்றும் புனித ஜூட் தாடியஸ் தேசிய ஆலயத்தின் திருத்தந்தையான அருட்தந்தை லினோ  நிகாசியோ எஸ்.வி.டி. அவர்களின் அழைப்பின் பேரில், ஆலயத்தின்  புரவலர் தந்தையின் பெருநாள் கொண்டாட்டத்தில் மணிலாவில் உள்ள இலங்கைத் தூதரகம் 2021 அக்டோபர் 28ஆந் திகதி நாட்டின் விளம்பரத்துடன் பங்கேற்றது.

திருச்சபையின் பக்தர்கள் மற்றும் மதச் சமூகத்திற்கு மத்தியில் இலங்கையை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், மதச்  சுற்றுலாத் துறை மற்றும் இலங்கையின் முக்கிய ஏற்றுமதித் தயாரிப்பான சிலோன் டீ உள்ளிட்ட நாட்டின் சுற்றுலாத் துறைகளை காட்சிப்படுத்துவதற்காக சுற்றுலா மற்றும் தேயிலை ஊக்குவிப்புச் சாவடியொன்று தூதரகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. மணிலாவின் பேராயர் மாண்புமிகு ஜொஸ் எப். கர்தினால் அட்வின்குலா, தூதுவர் ஷோபினி குணசேகர மற்றும் ஆலய உத்தியோகத்தர்களினால் எண்ணெய் விளக்கு ஏற்றி வைத்து முறைப்படி சாவடி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மணிலா பேராயரின் தலைமையில் இடம்பெற்ற புனித ஆராதனையில், தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சிங்கள மொழியில் கன்னி மரியாவின் பக்திக் கீதமான 'நமோ மரியானி' பாடலை இசைத்தனர்.

தூதுவர் குணசேகர தனது கருத்துக்களில், இலங்கைக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையில் குறிப்பாக பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாச்சாரத் துறைகளில் நீண்டகாலமாக நிலவும் நல்லுறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் பலப்படுத்துவதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க தளமாக கிறிஸ்தவத்தின் பகிரப்பட்ட நம்பிக்கையை எடுத்துரைத்தார். தொற்றுநோயினாலான அழுத்தத்தைப் போக்கும் இடமாக நாட்டிற்கு விஜயம் செய்வதன் மூலம் இலங்கையின் அழகு மற்றும் தனித்துவமான அம்சங்களை ரசிக்க திருச்சபைக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

இதற்கிடையில், மதிப்பிற்குரிய தந்தை நிகாசியோ தூதரகத்தின் பங்கேற்பிற்காக தனது பாராட்டுகளைத் தெரிவித்ததுடன், பிலிப்பைன்ஸுடன் கலாச்சார மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை வளர்ப்பதற்கான அதன் பயனுள்ள முயற்சிகளைப் பாராட்டினார்.

திருப்பலிக்குப் பின்னர், விருந்தினர்கள் மற்றும் பக்தர்களுக்கு சிலோன் டீ தேனீர் வழங்கப்பட்டதுடன், சுற்றுலா ஊக்குவிப்புப் பொருட்கள் மற்றும் தேயிலை மாதிரிகள் விநியோகிக்கப்பட்டன. இந்த விழாக்களில் நாடு முழுவதிலுமிருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டதுடன், சுமார் 100,000 மெய்நிகர் பங்கேற்பாளர்களுடன் சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

பிலிப்பைன்ஸ் உலகளவில் பிரேசில் மற்றும் மெக்சிகோவிற்கு அடுத்ததாக அதிக கத்தோலிக்க மக்கள் தொகையுடன் மூன்றாவது இடத்தில் கத்தோலிக்கர்கள் ஆதிக்கம் செலுத்தும் நாடாகும். இந்த நாட்டில் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் மற்றும் மிஷனரிகள் அடங்கிய கத்தோலிக்க மதத்தின் இலங்கை மத சமூகம் இருப்பதுடன், அவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு போதகர் நடவடிக்கைகள் மற்றும் உயர் கல்வி முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கைத் தூதரகம்,

மணிலா

2021 நவம்பர் 05

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close