பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இலங்கை மற்றும் ருமேனியா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்து, பன்முகப்படுத்துவதற்கு உறுதி

பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் இலங்கை மற்றும் ருமேனியா, வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை அதிகரித்து, பன்முகப்படுத்துவதற்கு உறுதி

வெளியுறவுச் செயலாளர் ஜயநாத் கொலம்பகே மற்றும் ருமேனியாவின் வெளிவிவகார இராஜாங்க செயலாளர் கொர்னெல் ஃபெருஸா ஆகியோர் 2020 டிசம்பர் 16ஆந் திகதி மெய்நிகர் இணையவழி ரீதியான இருதரப்பு வெளியுறவு அலுவலக ஆலோசனைகளை நடாத்தினர். இலங்கை மற்றும் ருமேனியா இடையே முன்னுரிமை பெற்ற துறைகளில் மேம்பட்ட ஒத்துழைப்புக்கான புதிய பாதையானது, இலங்கை - ருமேனியா இருதரப்பு ஆலோசனைகளின் மூன்றாவது அமர்வின் போது அடையாளம் காணப்பட்டது.

அடுத்த ஆண்டு ருமேனியாவில் ஒரு இலங்கைத் தூதரகத்தை திறப்பதாக அறிவித்த இலங்கைத் தூதுக்குழுவின் தலைவரும், வெளியுறவுச் செயலாளருமான அட்மிரல் (பேராசிரியர்) ஜயநாத் கொலம்பகே, 1957 முதல் அறுபத்து மூன்று ஆண்டுகளாக நீடித்து வரும் சிறந்த இருதரப்பு ஈடுபாட்டை மேலும் பலப்படுத்துவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினார். புதிய அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் மேம்பாட்டு முன்னுரிமைகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தையும் வழங்கிய வெளியுறவுச் செயலாளர் கொலம்பகே, 21ஆம் நூற்றாண்டானது அறிவு மற்றும் கண்டுபிடிப்புக்களால் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதை அங்கீகரிப்பதன் மூலம், மக்களை மையமாகக் கொண்ட மற்றும் அறிவால் இயங்கும் இலங்கையின் புதிய தொடக்கத்தை எடுத்துக்காட்டினார்.

தொழிலாளர் துறையிலான ஒத்துழைப்பில் கவனம் செலுத்திய இராஜாங்க செயலாளர் ஃபெருஸா, தொற்றுநோய் நிலைமையின் போதும் கூட, இலங்கையின் திறமையான மற்றும் அரைத் திறமையான தொழிலாளர்களுக்கு ருமேனியா தொடர்ந்தும் தொழிலில் ஈடுபடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த வாரம் மட்டுமே 1,500 புதிய தொழில் அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ருமேனியாவில் தற்போது 8,000 க்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் முக்கியமாக ஆடை, விருந்தோம்பல் மற்றும் கட்டுமானத் துறைகளில் பணியாற்றுவதுடன், தகவல் தொழில்நுட்பம் போன்ற ஏனைய துறைகளில் திறமையான வேலைவாய்ப்புக்கள் திறக்கப்படுகின்றன. ருமேனியாவில் உள்ள தொழிலாளர்களுக்கு ருமேனிய அரசாங்கம் வழங்கிய பொருளாதாரத் தூண்டுதல்களும் வெளிநாட்டுத் தொழிலாளர்களை உள்ளடக்குவதற்காக நீடிக்கப்பட்டுள்ளதாக திரு. ஃபெருஸா குறிப்பிட்டார்.

பரந்த அளவிலான மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த கலந்துரையாடல்கள், அரசியல், பொருளாதாரம், கல்வி, எரிசக்தி, விவசாயம், தொழிலாளர், பாதுகாப்பு, கல்வி மற்றும் சமூகப் பகுதிகளிலான இருதரப்பு நலன்களையும், தற்போதைய திட்டங்களையும் மதிப்பாய்வு செய்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி + வசதியை முழுமையாகப் பெற்றுக் கொள்வதற்கும், மத்திய ஐரோப்பா மற்றும் ஆசியாவில் உள்ள பரந்த சந்தைகளை முறையே அணுகுவதற்குமாக, இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டுப் பதவிநிலைகளை புத்துயிர் பெறச் செய்து, விரிவாக்குவதற்கும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். நகர்வுப் புனர்வாழ்வு மற்றும் உற்பத்தியிலான தொழில்நுட்ப உதவி, எண்ணெய் மற்றும் எரிவாயுத் துறையிலான திறன் இடைவெளிகளை நிவர்த்தி செய்வதற்கான திறன் அபிவிருத்தி மற்றும் விவசாய செயலாக்கம் ஆகியன மேலதிக ஒத்துழைப்புக்காக அடையாளம் காணப்பட்டன. பிராந்திய மற்றும் பல்தரப்புப் பகுதிகளில் பகிரப்பட்ட நலன்களையும் இந்தப் பேச்சுவார்த்தைகள் மதிப்பாய்வு செய்தன.

கொழும்பில் உள்ள ருமேனியா தூதரகத்தின் தூதுவர் விக்டர் ச்சியுடியா உள்ளடங்கலாக, புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு, தொழிலாளர் திணைக்களம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், வர்த்தகத் திணைக்களம் மற்றும் வெளிநாட்டு அமைச்சு ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

2020 டிசம்பர் 19

Please follow and like us:

Close