
பெல்ஜியத்துக்கான இலங்கைத் தூதுவர் கிரேஸ் ஆசிர்வதம், பெல்ஜியத்தில் உள்ள நமூர் மாகாண ஆளுநர் டெனிஸ் மாத்தனை 2022 மார்ச் 08ஆந் திகதி ஆளுநரின் இல்லத்தில் சந்தித்தார். பெல்ஜியத்தில் பிரெஞ்சு மொழி பேசும் வாலூன் பிராந்தியத்தின் தலைநகரம் நமூர் ஆகும். பொருளாதார உறவுகளை மேம்படுத்தி, குறிப்பாக நமூர் மாகாணத்தில் ஒரு சுற்றுலாத் தலமாக இலங்கை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த சந்திப்பின் நோக்கமாகும்.
வாலூன் பகுதியில் வணிக மற்றும் தொழில் மையமாக நம்மூரின் முக்கியத்துவத்தை நமூர் ஆளுநர் விளக்கியதுடன், வாலூன் பிராந்தியத்துடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொள்ள தூதரகம் ஏற்கனவே நமூரில் உள்ள ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளுக்கான வாலூன் முகவரமைப்புடன் தொடர்பில் இருப்பதைப் பாராட்டினார். மேலதிக வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்காக, நமூர் மாகாணத்தில் உள்ள நிலையான பொருளாதார அபிவிருத்தி முகவரமைப்புடன் நெருங்கிய தொடர்பைப் பரிந்துரைத்த ஆளுநர், மேலதிக தகவல்களை வழங்கவும், நமூர் மாகாணத்தில் உள்ள நிலையான பொருளாதார அபிவிருத்தி முகவரமைப்புக்கும் தூதரகத்துக்கும் இடையேயான ஈடுபாட்டை எளிதாக்கவும் ஒப்புக்கொண்டார்.
ஆளுநரின் உதவியைப் பாராட்டிய தூதுவர் ஆசிர்வதம், பெல்ஜியம் மற்றும் இலங்கைக்கு இடையிலான வர்த்தக உறவுகளின் நிலையை விளக்கியதுடன், பிரெஞ்சு மொழி பேசும் வாலூன் பிராந்தியத்தில் இலங்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதில் ஆர்வம் காட்டினார். பொருத்தமான இடத்தைக் கண்டுபிடித்து, பிராந்தியத்தில் உள்ள முக்கிய சுற்றுலா நடத்துனர்களை அறிமுகப்படுத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் உட்பட, சுற்றுலாப் பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்வதற்கான தனது முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் ஆளுநர் தூதுவரிடம் உறுதியளித்தார். இலங்கையை உலகின் சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்றும் காட்சிகள் மற்றும் ஒலிகள் குறித்து தூதுவர் விவரித்ததுடன், அதற்கு பதிலளித்த ஆளுநர் மாத்தன், இலங்கையின் சுற்றுலாத் தலங்கள் மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து தாம் கவரப்படுவதாகக் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு உட்பட இலங்கைக்கும் நமூர் மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியமான பகுதிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது. பரஸ்பர நன்மைக்காக தமது ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு ஆளுநரும் தூதுவரும் ஒப்புக்கொண்டனர்.
இலங்கைத் தூதரகத்தின் ஆலோசகர் மதூகா சில்வா மற்றும் அன்ட்வெர்ப்பில் உள்ள இலங்கையின் கௌரவத் தூதுவர் மொனிக் டி டெக்கர் ஆகியோர் தூதுவருடன் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இலங்கைத் தூதரகம்,
பிரஸ்ஸல்ஸ்
2022 மார்ச் 11





