புனித பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர், மேதகு பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் நிறைவு

புனித பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர், மேதகு பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகரின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் நிறைவு

புனித பீடத்தின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர், மேதகு பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், 2025 நவம்பர் 3 முதல் 8 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார். இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை ஒட்டி, இந்த விஜயம் புனித பீடத்திற்கும், இலங்கைக்கும் இடையிலான நீண்டகால மற்றும் நட்புறவுகளில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைகிறது.

வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறைப் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர பேராயர் கல்லாகரை வரவேற்றார். இலங்கை கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவர், வணக்கத்திற்குரிய  மால்கம் ரஞ்சித் மற்றும் வணக்கத்திற்குரிய ஆயர் கலாநிதி ஹெரோல்ட் பெரேரா ஆகியோர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புனித பீடத்தின் தூதுக்குழுவை வரவேற்பதில் இணைந்துகொண்டனர்.

தனது விஜயத்தின் போது, பேராயர் கல்லாகர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இலங்கைக்கும் புனித பீடத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடர்பான பல அம்சங்கள் குறித்து கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின. கல்வித்துறை உட்பட புனிதபீடம் இலங்கைக்கு அளித்து வரும் ஆதரவிற்கு ஜனாதிபதியும் பிரதமரும் நன்றி தெரிவித்ததுடன், உள்ளடக்கம், உரையாடல், பரஸ்பர புரிதல் மற்றும் பன்மைத்துவம் மூலம் நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். நல்லிணக்கத்தில் இலங்கையின் முன்னேற்றத்தைப் பாராட்டிய பேராயர் கல்லாகர், இலங்கை மக்களுடன் புனிதபீடத்தின் தொடர்ச்சியான கூட்டுப்பொறுப்புணர்வை குறிப்பிட்டார். இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு புனித அருட்தந்தை பதினான்காம் லியோவையும் இலங்கைக்கு அழைப்பு விடுத்தார்.

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடனும் பேராயர் கல்லாகர் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தினார். இலங்கைக்கும் புனித பீடத்திற்கும் இடையிலான வலுவான மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பை இந்தச் சந்திப்பு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியதுடன், கெரிட்டாஸ் இலங்கை- சமூக, பொருளாதார அபிவிருத்தி நிலையம் (SEDEC) மூலம் வழங்கப்படும் மனிதாபிமான உதவி, நல்லிணக்க செயன்முறை மற்றும் இலங்கையின் பல்லின மற்றும் பல்மத சமூகத்தில் ஆன்மீக நம்பிக்கைகளுக்கு இடையேயான நல்லிணக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் முக்கியத்துவம் அளித்தது. போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.

அவர்களின் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து, இரு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்களும் ஒரு கூட்டு ஊடக சந்திப்பில் உரையாற்றினர்; அமைதி, மனித கண்ணியம் மற்றும் பரஸ்பர ஒத்துழைப்புக்கான பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர். சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மை மற்றும் சமூக நீதி போன்ற உலகளாவிய பிரச்சினைகளில் ஒத்துழைப்பின் புதிய வழிகளை ஆராயவும் அவர்கள் இணங்கினர்.

நவம்பர் 4 ஆம் திகதி, இலங்கைக்கும் புனித பீடத்திற்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 50 வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நினைவு நிகழ்வொன்று காலி முகத்திடல் ஹோட்டலில் நடைபெற்றது. அமைதி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான வத்திக்கானின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், பேராயர் கல்லாகர் "பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுதல்: புனித பீடத்தின் தொலைநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு" என்ற தலைப்பில் ஒரு பொதுமக்களுக்கான சொற்பொழிவொன்றை நிகழ்த்தினார். விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கௌரவ க்ரிஷாந்த அபேசேன, நன்றியுரையை நிகழ்த்தியதுடன், இலங்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மத சகவாழ்வுக்கான புனித பீடத்தின் நீடித்த ஆதரவிற்கு இலங்கை சார்பில்  நன்றி தெரிவித்தார்.

 இலங்கையின் வளர்ச்சிக்கான புனிதபீடத்தின் உறுதிப்பாட்டையும், இலங்கையுடனான மதங்களுக்கு இடையேயான உரையாடல், சமூக ஒற்றுமை மற்றும் ஆன்மீக மற்றும் கலாச்சார உறவுகளை வளர்ப்பதையும் இந்த விஜயம் மீண்டும் உறுதிப்படுத்தியது. பேராயர் கல்லாகர் தங்கியிருந்த காலத்தில் நடைபெற்ற ஈடுபாடுகள் இருதரப்பு உறவுகளை ஆழப்படுத்தியதுடன், கல்வி, அமைதியைக் கட்டியெழுப்புதல் மற்றும் மதம் சார்ந்த சுதந்திரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் எதிர்கால ஒத்துழைப்புக்கான அடித்தளமாக செயற்படும்.

 

வெளிநாட்டு அலுவல்கள்வெளிநாட்டு வேலைவாய்ப்பு
மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு
கொழும்பு

 2025, நவம்பர் 13

 

 

 

 

Please follow and like us:

Close