2022 ஜூன் 21 முதல் 23 வரை பிரேசிலியாவில் உள்ள மாநாட்டு மையத்தில் நடைபெற்ற இன்னோவா உச்சி மாநாடு 2022 இல் பிரேசிலில் உள்ள இலங்கைத் தூதரகம் பங்கேற்றது.
இலத்தீன் அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் தொழில்துறை ஊக்குவிப்பு நிகழ்வுகளில் ஒன்றான இன்னோவா உச்சி மாநாடு, லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் புதிய கண்டுபிடிப்புக்களை வழங்குவதில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தரத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆர்வமுள்ள தரப்பினரை ஒன்றிணைக்கின்றது. இந்த நிகழ்வு வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு இடையேயான வலையமைப்பிற்கான ஒரு தளத்தை வழங்குவதுடன், வணிகக் கூட்டங்கள், பட்டறைகள் மற்றும் ஏனைய கருத்தரங்குகள் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் சர்வதேச வர்த்தகத்தை ஊக்குவித்து, எளிதாக்குகின்றது.
100 க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்னோவா 2022 இல் கூடங்களைக் கொண்டிருந்ததுடன், 3 நாள் உச்சிமாநாடு சுமார் 20,000 பார்வையாளர்களை ஈர்த்தது.
3,000 க்கும் மேற்பட்ட மக்கள் இலங்கைத் தூதரகக் கூடத்தைப் பார்வையிட்டதுடன், இது இலங்கைத் தேயிலை, கறுவா மற்றும் சுவையூட்டி வகைகள், தேங்காய்ப் பொருட்கள், கைவினைப்பொருட்கள், மேசை விரிப்புக்கள் மற்றும் பட்டிக் ஆடைகள் போன்ற இலங்கைத் தயாரிப்புக்களை விளம்பரப்படுத்த ஒரு தளத்தை வழங்கியது. பார்வையாளர்கள் இலங்கை உணவு மற்றும் சிலோன் தேயிலைகளை சுவைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
பிரேசிலுக்கான இலங்கைத் தூதுவர் சுமித் தசநாயக்க பிரேசிலிய வானொலிக்கு வழங்கிய நேர்காணலில், பிரேசிலிய மற்றும் தென் அமெரிக்க தொழில்முனைவோருக்கு இலங்கையில் உள்ள பரந்த வாய்ப்புக்களை எடுத்துரைத்தார்.
தொல்பொருள் நகரங்கள், வனவிலங்குகள், சாகச சுற்றுலா, தியானம் மற்றும் ஸ்பா மற்றும் கலாச்சாரம் மற்றும் உணவுப்பொருட்களை ஆராய்தல் போன்ற பல்வேறு சுற்றுலா நடவடிக்கைகளை இலங்கை வழங்குவதால், பிரேசில் மற்றும் தென் அமெரிக்க சுற்றுலாப் பயணிகளை அடுத்த பயணத் தலமாக இலங்கையை தெரிவு செய்யுமாறு தூதுவர் சுமித் தசநாயக்க ஊக்குவித்தார்.
பார்வையாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் வகையில், இலங்கை சுற்றுலா மற்றும் வர்த்தகம் மற்றும் நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப மையமாக உள்ள சாதனைகள் குறித்த காணொளிக் காட்சிகளை தூதரகம் மெகா டிஜிட்டல் திரையில் திரையிட்;டது.
இலங்கைத் தூதரகம்,
பிரேசில்
2022 ஜூலை 04