பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழுவின் முதலாவது கூட்டத்தொடர் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழுவின் முதலாவது கூட்டத்தொடர் கொழும்பில் வெற்றிகரமாக நிறைவடைந்தது

DSC_0555

 

 

 

 

வங்காள விரிகுடாவின் பல துறை தொழிநுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் நிரந்தர செயற்குழுவின் முதலாவது கூட்டத்தொடர் அனைத்து உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் பிம்ஸ்டெக் செயலாளர் நாயகம் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் 2019 ஜனவரி 17 - 18ஆந் திகதிகளில் கொழும்பில் வெற்றிகரமாக நடைபெற்றது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொருளாதார விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சரோஜா சிறிசேன இந்த கூட்டத்தொடருக்கு தலைமை தாங்கினார்.

கத்மண்டுவில் நடைபெற்ற 4வது பிம்ஸ்டெக் உச்சிமாநாட்டின் போது பிம்ஸ்டெக் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக, பிம்ஸ்டெக் செயலகம், பிம்ஸ்டெக் நிலையங்கள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் நிதி சார்ந்த விடயங்களை கையாள்வதற்காக பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழு தாபிக்கப்பட்டது. இந்த தாபனத்தின் தலைமைத்துவத்தை ஏற்றதன் பின்னர் இலங்கை நடாத்திய முதலாவது பிம்ஸ்டெக்  கூட்டத்தொடர் இதுவாகும்.

முதலாவது பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழு கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும்போது, பிம்ஸ்டெக்கின் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்கும், இந்த தாபனத்தின் பொதுவான இலக்குகளை அடைந்து கொள்வதற்குமாக தனது நிறுவன கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்குமான இலங்கையின் அர்ப்பணிப்பினை வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க உறுதிப்படுத்தினார்.

பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் எம். ஷஹிதுல் இஸ்லாம் தனது விஷேட உரையின் போது, முதலாவது பிம்ஸ்டெக் நிரந்தர செயற்குழு கூட்டத்தொடரை நடாத்துவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு தனது ஆழ்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டார். பிம்ஸ்டெக் சாசனம், பிம்ஸ்டெக் பொறிமுறைகளுக்கான நடைமுறையின் விதிகள், பிம்ஸ்டெக் அபிவிருத்தி நிதி, ஒத்துழைப்பிற்கான விடயப்பரப்புக்கள் மற்றும் பிம்ஸ்டெக் செயலகத்தினை வலுவூட்டுதல் போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பில் ஆழமாக ஆராய்ந்தறிவதற்காக, இந்த கூட்டத்தொடரின் முக்கியத்துவம் குறித்து அவர் விஷேடமாக குறிப்பிட்டார்.

செயலகத்தில் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் பணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அனைத்து உறுப்பு நாடுகளும் ஒவ்வொரு பணிப்பாளரை நியமிப்பதற்கான தமது ஈடுபாட்டினை வலியுறுதின. 2020ஆம் ஆண்டில் செயலகத்திற்கான பணிப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கு இலங்கை தகைமை பெற்றுள்ளது. மேலும், இந்த கூட்டத்தொடரின்போது, பிம்ஸ்டெக் கொள்கை சிந்தனைக் கூடங்களின் வலையமைப்பிற்கான வரைவுக் குறிப்பு நியதிகள் இறுதியாக தீர்மானம் செய்யப்பட்டன.

தொழினுட்பத் துறையில் முதன்மையான நாடென்ற வகையில், இலங்கையில் பிம்ஸ்டெக் தொழினுட்ப பரிமாற்ற வசதியை முறையாக நிறுவுவதற்கான தனது தீர்மானத்தை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. குடிவரவு வீசா விடயங்கள் மீதான பிம்ஸ்டெக்கின் நிபுணர் குழு கூட்டத்தொடருக்கு புறம்பாக, நிரந்தர செயற்குழுவின் 2ஆவது கூட்டத்தொடர், சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் 20ஆவது கூட்டத்தொடர், பிம்ஸ்டெக்கின் 17ஆவது அமைச்சர்கள் மட்ட கூட்டத்தொடர் போன்ற பல பிம்ஸ்டெக் கூட்டத்தொடர்களை 2019ஆம் ஆண்டில் நடாத்துவதாக இலங்கை மேலும் அறிவிப்புச் செய்தது.

இந்த கூட்டத்தொடரின் பாகமாக, பிம்ஸ்டெக்கின் செயலாளர் நாயகம் எம். ஷஹிதுல் இஸ்லாம் வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆரியசிங்க அவர்களை சந்தித்தார். இதன் போது, தென்கிழக்கு ஆசியா மற்றும் தெற்காசியாவிற்கிடையிலான பிராந்திய ஒத்துழைப்பினை வலுப்படுத்துவதற்கான பாலமாக பிம்ஸ்டெக் விளங்கும் என இந்த இரண்டு சிரேஷ்ட உத்தியோகத்தர்களும் அவதானித்திருந்தனர்.

 

 

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு

கொழும்பு

2019 ஜனவரி 28

 

 

 DSC_0500
DSC_0567
DSC_0580
Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close