பாராளுமன்றத்தில் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் உரை, 2021 அக்டோபர் 05

பாராளுமன்றத்தில் கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் உரை, 2021 அக்டோபர் 05

கௌரவ. சபாநாயகர் அவர்களே,

இலங்கையின் சார்பாக சர்வதேச அரங்கில் எமது முயற்சிகளை இந்த சபைக்குத் தெரிவிக்க நான் இன்று விளைகின்றேன். நாங்கள், ஒரு அரசாங்கமாக, தற்போதைய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதுடன், அதன் மோசமான  தாக்கங்கலால் ஏற்பட்ட பொருளாதார இறுக்கத்தின் விளைவுகளைக் கையாள்கின்றோம், உங்கள் அனுமதியுடன், நிர்வாகம் மற்றும் தேசிய நல்வாழ்வுக்கான எமது அணுகுமுறையின் மற்றொரு அம்சத்தை முன்னிலைப்படுத்த விரும்புகின்றேன். கொள்கை அளவில், சக தேசிய அரசுகளுடன் முழுமையான, நேர்மையான மற்றும் வெளிப்படையான ஈடுபாட்டிற்கான எமது ஜனாதிபதியின் உறுதிப்பாட்டை நாம் வலியுறுத்த வேண்டும். செழிப்பு மற்றும் நல்வாழ்விற்கான எமது இலக்குகளை தனியாக அடைய முடியாது. நாம் அனைவரும் ஒரு பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்துகொண்டு, அடுத்த தலைமுறையினருக்கு அந்த சிறந்த பிரகாசமான எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் உத்தரவாதப்படுத்தவும் நம்மால் முடிந்ததை மேற்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றோம்.

இந்த வகையில், கௌரவ. சபாநாயகர் அவர்களே, எமது சர்வதேசப் பங்காளிகள் மற்றும் நண்பர்களுடனான சமீபத்திய சர்வதேச ஈடுபாட்டினை இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன். இலங்கையில் உள்ள இராஜதந்திரப் பிரதிநிதிகளுடனும் இலங்கைக்கு அங்கீகாரம் பெற்ற இருதரப்புப் பங்குதாரர் நாடுகளுடனும் நாங்கள் உரையாடலைப் பேணுகையில், புவியியல் மற்றும் ஏனைய எல்லைகளைக் கடந்து சர்வதேச மட்டத்திலும் நாங்கள் ஈடுபட  விரும்புகின்றோம். கௌரவ. சபாநாயகர் அவர்களே, வழங்கப்பட்ட ஒவ்வொரு வாய்ப்பிலும் சாத்தியமான பரந்த பார்வையாளர்களுடன் உரையாற்றுவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இது விமர்சனக் கருத்தை எதிர்கொள்வது அல்லது தவிர்ப்பது மட்டுமல்லாமல், உலகளாவிய அரங்கில் எமது குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும். நாங்கள் இதை இருதரப்புப் பங்காளிகள், நிறுவனங்கள், பிராந்தியக் குழுக்கள் மற்றும் குறிப்பாக பல்தரப்பு மன்றங்களில் மேற்கொள்கின்றோம். தனிப்பட்ட முறையில் மற்றும் கூட்டாக நாம் எதிர்கொள்ளும் எண்ணற்ற சவால்களை எதிர்கொள்வதில் கற்றுக்கொள்வதற்கான விருப்பம் மற்றும் திறந்த மனப்பான்மை ஆகியவற்றால் ஊக்குவிக்கப்பட்டு, ஏனையவர்களின் உணர்வுகள் மற்றும் உண்மையான வாழ்க்கை அனுபவத்தை உள்வாங்கிக் கொள்கின்றோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாங்கள் ஒப்பீட்டளவில் சிறிய தீவு அரசு. எனினும், நாங்கள் ஒரு பெருமைமிக்க வரலாறு மற்றும் சிக்கலான பின்னணி கொண்ட நாடாகும். உலகத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்ற  அதே நேரத்தில், பகிர்ந்து கொள்ளவும் அதிகம் இருக்கின்றது. எமது பல்வகைமை கொண்ட பன்முகத்தன்மை ஒரு சமூகப் பரிசோதனை அல்ல, ஆனால் நாம் அதனுடன் அன்றாட அடிப்படையில் வாழ்கின்றோம். அவ்வப்போது இது பதற்றத்தை ஏற்படுத்துகின்றது, ஆனால் நாங்கள் இன்னும் சகோதரத்துவம் மற்றும் நல்லெண்ண உணர்வுடன் இணைந்து வாழ்கின்றோம். இத்தாலி, ஜெனீவா மற்றும் நியூயோர்க்கில் அண்மையில் நடைபெற்ற மூன்று உயர்மட்ட நிகழ்ச்சிகளின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர் மற்றும் நான் கலந்து கொண்டிருந்தோம். இந்த நிகழ்வுகள், அனைத்து நாடுகளுக்கும் பொதுவான உலகளாவிய முக்கிய விடயங்களில் சர்வதேச சமூகத்துடன் ஒற்றுமையை வெளிப்படுத்தவும், இது தொடர்பாக இலங்கையின் சொந்தக் கருத்துக்களை முன்னிறுத்தவும் இலங்கைக்கு முக்கியமான தளங்களை வழங்கியது. இந்த சமீபத்திய தொடர்புகள் சர்வதேச அளவில் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் அதிக அளவில் தலையிட எங்களுக்கு உதவியது.

தொற்றுநோயின் காரணமாக பௌதீக ரீதியான தொடர்புகளில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர், 'நம் காலத்தின் மிகப்பெரிய நெருக்கடி' எனக் குறிப்பிட்ட பல்வேறு அம்சங்களில் உரையாற்ற இந்த ஈடுபாடுகள்  முக்கியமான வாய்ப்பை வழங்கின.

நியூயோர்க்கில் நடைபெற்ற 76வது ஐ.நா. பொதுச்சபையிலான தனது அறிக்கையில், தொற்றுநோய் மற்றும் அதனால் ஏற்படும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இருத்தலியல் நெருக்கடிகளை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கை சர்வதேச பங்காளிகளுடன் முழுமையாக ஈடுபட்டுள்ளது என அதிமேதகு ஜனாதிபதி  குறிப்பிட்டார். இந்த உலகளாவிய சவால்களின் மோசமான விளைவுகளிலிருந்து எமது மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டதே எமது ஈடுபாடு ஆகும்.

இலங்கைக்கு சமமாக முக்கியமாக, இந்த விஜயங்கள் மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான முக்கியமான தேசிய பிரச்சினைகளில் இலங்கையில் நாம் சந்தித்த சமீபத்திய உள்நாட்டு முன்னேற்றங்கள் மற்றும் சிரமங்கள் மற்றும் தவறான அல்லது சார்பு உணர்வுகளை சரி செய்வது குறித்து இருதரப்பு மற்றும் பல்தரப்பு மட்டங்களில்  சர்வதேச சமூகத்திற்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியது.

நான் ஜெனீவாவில் உள்ள மனித உரிமைகள் பேரவையில் பின்வரும் கூற்றுடன் எனது அறிக்கையை முடித்துக்கொண்டேன்: 'நாங்கள் எமது சவால்களை ஒப்புக்கொள்வதில் வெளிப்படையாக இருப்பதுடன், ஒரு பொறுப்பான மற்றும்  ஜனநாயக அரசாங்கமாக, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மனித உரிமைகள், சமாதானம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பான முழு அளவிலான விடயங்களில் உறுதியான முன்னேற்றத்தை அடைய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்'.

இந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டியதன் அவசியத்தை நாங்கள் அங்கீகரித்துள்ளோம், அந்த முயற்சியில்,  ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் நல்லெண்ணத்தில் வெளிப்படுத்தப்பட்ட சர்வதேசக் கருத்துக்களுக்கு நாம் திறந்த முறையில் பதிலளிக்க வேண்டும். இவ்வாறு கூறினால், கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாம் எமது சுதந்திரம், தேசிய இறையாண்மை அல்லது ஒரு தேசமாக எமது சுய மரியாதையை சமரசம் செய்யத் தேவையில்லை.

பொதுநலவாயம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, ஜனநாயக சமூகம் மற்றும் ஜெனீவா மனித உரிமைகள்  பேரவை போன்ற இலங்கையுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பல முக்கிய நாடுகளின் வெளிநாட்டு அமைச்சர்களுடன் தனிப்பட்ட முறையில் கலந்துரையாடுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. எமது அனுபவம், உணர்வுகள் மற்றும் நிலைப்பாட்டைப் பதிவு செய்வதற்கான எமது தொடர்ச்சியான மற்றும் தீவிரமான முயற்சிகள், இந்த வெளிப்படையான அணுகுமுறை மற்றும் ஈடுபடுவதற்கான விருப்பத்தை நிரூபிக்கின்றது. ஆசியாவின் பழமையான ஜனநாயக நாடுகளில் ஒன்றாக ஒன்பது தசாப்தங்களாக இந்த அமைப்பைக் கடைப்பிடிக்கும் ஒரு தேசத்தின் நிலைப்பாட்டில் இருந்து ஜனநாயக விதிமுறைகள், இலட்சியங்கள் மற்றும் பொதுவாகப் பகிரப்பட்ட மதிப்புக்களுக்கான எமது உறுதிப்பாட்டை நாங்கள் மீண்டும் உறுதிப்படுத்தினோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, உண்மையான மற்றும் உறுதியான நன்மைகள் எமது மக்களுக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இந்த முயற்சிகளை மேற்கொள்வது மிக முக்கியமானதாகும். தொற்றுநோய், காலநிலை மாற்றம்,  உலகளாவிய உணவு நிலைமை, நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைதல் மற்றும் ஆற்றலை சுத்தம் செய்வதற்கான மாற்றம் போன்ற உலகின் பெரிய மற்றும் சிறிய நாடுகளைப் பாதிக்கும் விடயங்களிலேயே இந்த ஆண்டு ஐ.நா. பொதுச்சபையின் முக்கிய கவனம் இருந்தது. உலகளாவிய இயல்புடன் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட இந்தப் பிரச்சினைகள் அனைத்து இலங்கையர்களினதும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்பது மிகவும் தெளிவாக உள்ளது.

இந்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இலங்கை சர்வதேசத்துடன் இந்த உரையாடலில் பங்கேற்க வேண்டும். விஞ்ஞானிகள், பொருளாதார வல்லுநர்கள், தனியார் துறை, தொழில்நுட்பத் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் உணவின் முதன்மை உற்பத்தியாளர்கள் போன்ற உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் நாம் மிகவும் பரந்த அளவிலான  பங்குதாரர்களை அணுக வேண்டும் என்பதும் தெளிவாக உள்ளது. இது பல்வேறு நிலைகளில் மற்றும் பல்வேறு துறைகளிலான உள்ளூர் மற்றும் உலகளாவிய சமூகத்தின் ஒரு குறுக்குவெட்டைக் குறிக்கின்றது. அதிமேதகு ஜனாதிபதி கூறியது போல், 'தொற்றுநோயின் பொருளாதாரத் தாக்கம் குறிப்பாக அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் கடுமையாக உள்ளது. இது நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கான 2030 நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதில் கணிசமான ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.'

எனவே, கௌரவ. சபாநாயகர் அவர்களே, இது கூட்டாக எம்மை எதிர்கொள்ளும் பெரும் சவால். சில முக்கியமான  துறைகளில் இலங்கை தலைமை வகித்துள்ளதுடன், சுற்றுச்சூழல் செயற்பாட்டின் சில முக்கிய அம்சங்களுக்குத் தலைமை தாங்குகிறது எனக் கூறுவது சாதாரண பெருமை அல்ல. காலநிலை மாற்றத்தின் உச்சகட்டப் பாதிப்புக்குள்ளாகும் ஒரு நாடாக, ஐக்கிய இராச்சியத்தில் சி.ஓ.பி.26 இல் எமது வரவிருக்கும் ஈடுபாடு பொதுவான, ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் எதிர்காலத்திற்கான எமது உறுதிப்பாட்டை மட்டுமே அடிக்கோடிட்டுக் காட்டும்.

இந்த காரணங்களுக்காக இந்த ஆண்டு சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இலங்கையின் ஈடுபாடு சரியான நேரத்தில் மற்றும் இன்றியமையாததாக இருந்தது. உதாரணமாக, பருவநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை, கடந்த காலத்தின் குறைபாடுகளைத் திருப்பி, ஆரோக்கியமான உலகை சரிசெய்து மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எம்முடைய இளைஞர்கள் மற்றும் வருங்காலத் தலைமுறையினருக்கு நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இந்த  முயற்சியில் நாங்கள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒற்றுமையுடன் கைகோர்த்திருக்கின்றோம் என்பதுடன், எமது ஜனாதிபதி ஐ.நா. பொதுச்சபை மற்றும் ஆற்றல் பற்றிய உயர் மட்ட உரையாடலில் எமது நிலைப்பாட்டை அறிவித்தார். இந்தப் பல காரணங்களுக்காக சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையுடன் இந்த ஆண்டு இலங்கையின் ஈடுபாடு சரியான நேரத்தில் மற்றும் இன்றியமையாதது என அவர் குறிப்பிட்டார்.

உதாரணமாக காலநிலை மாற்றத்தில், எம்முடைய இளைஞர்கள் மற்றும் பிறக்காத தலைமுறையினருக்கு கடந்த  கால சேதங்களை மாற்றியமைக்க மற்றும் ஒரு ஆரோக்கியமான பூமயை சரிசெய்ய மற்றும் மீண்டும் கட்டியெழுப்ப நாம் கடமைப்பட்டிருக்கின்றோம். இதில், நாங்கள் உலகளாவிய ரீதியில் கைகோர்த்துள்ளதுடன், உலகின் ஏனைய நாடுகளுடன் ஒற்றுமையுடன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை மற்றும் ஆற்றல் தொடர்பான உயர் மட்ட உரையாடலில் அதிமேதகு ஜனாதிபதி எமது நிலைப்பாட்டை அறிவித்தார். நிலையான நைதரசன் முகாமைத்துவம் குறித்த கொழும்பு பிரகடனம் மற்றும் பொதுநலவாய நீல சாசன வெற்றியாளராக எம்மை அங்கீகரிப்பதன் மூலம் இந்த உலகளாவிய முயற்சிகளுக்கு இலங்கை பங்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார். 2050 க்குள் கார்பன் நடுநிலை நாடாக மாறுவதற்கான உலகளாவிய முயற்சிகளில் சேரவும், 2030 க்குள் புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து 70% ஆற்றல் வளங்களைப் பெறவும் உறுதிமொழி எடுத்துள்ளோம். நிலையான விவசாயத்தை ஊக்குவிக்கவும், வனப்பகுதியை அதிகரிக்கவும், நீர் மற்றும் பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராடவும் நாம் முன்னெடுத்துள்ள எமது உள்நாட்டு முயற்சிகள் பொதுவாக வரவேற்கப்படுகின்றது.

இந்த லட்சிய இலக்குகளை அடைந்து கொள்ள, வரவிருக்கும் ஆண்டுகளில் தொழில்நுட்பம், நிதி ஒத்துழைப்பு  மற்றும் உதவியை நாம் கணிசமாக அணுக வேண்டுமாதலால், சர்வதேச மற்றும் பொதுச் சபையில் எமது இருப்பு மிக முக்கியமானது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்த செய்திகளை சி.ஓ.பி. 26 இல் மீண்டும் வலியுறுத்துவோம்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, நாம் சமாளிக்க வேண்டிய மற்றொரு பெரிய சவால் சமூக ஒன்றிணைப்பு மற்றும்  ஒற்றுமை ஆகும். உள்நாட்டு சச்சரவுகள், கசப்பு மற்றும் வெறுப்பு இல்லாத உண்மையான ஒருங்கிணைந்த நாடு இல்லாத நிலையில், நாம் சுவர்களைக் கட்டி எழுப்புவதிலும் பார்க்க பாலங்களைக் கட்ட வேண்டும். சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் நாம் அணுக வேண்டும் மற்றும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் அடுத்தடுத்த தேர்தல்களில் அரசாங்கத்தின் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நான் மேற்கொண்ட அறிக்கையில் தேசிய முயற்சிகளுக்கு புத்துயிரூட்டவும் மீண்டும் உயிர்ப்பிக்கவும் நாம் மேற்கொள்ளும் எமது முயற்சிகளைக் குறிப்பிட்டேன். நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக, நீடித்த மோதலுக்குப் பின்னர் மிகவும் அது மிகவும் அவசியமாகும். அதமேதகு ஜனாதிபதி நியூயோர்க்கில் குறிப்பிட்டது போல் 'நீடித்த சமாதானத்தை அடைந்து கொள்வதற்கு உள்நாட்டு நிறுவனங்களின் மூலம் அதிகமான பொறுப்புணர்வு, மறுசீரமைக்கப்பட்ட நீதி மற்றும் அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை வளர்ப்பது அவசியமாகும்.'

2009 ஆம் ஆண்டு கடினமாக வெற்றிகொண்ட சமாதானத்தை நிலைநாட்டவும், கட்டியெழுப்பவும் இந்த முயற்சியில் நாங்கள் ஆதரிக்கும் பல தேசிய நிறுவனங்களுக்கு நான் விளக்கினேன். குறிப்பாக, கௌரவ. சபாநாயகர் அவர்களே, காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகத்தின் முக்கிய செயற்பாடானது, காணாமல் போனவர்களின் பட்டியலை  ஏனைய முகவர்களுடன் இணைந்து துயரப்பட்ட குடும்பங்களுக்கு இறுதிப்படுத்தலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது எனபதை நான் வலியுறுத்தினேன். இந்த ஆண்டில் மட்டும், இழப்பீட்டு அலுவலகம் 3775 உரிமைகோரல்களை செயலாக்கியுள்ளது. தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தை அதன் 8 அம்ச செயற்றிட்டத்தை மீண்டும் செயற்படுத்தும் முயற்சியில் நாங்கள் ஆதரவு அளித்துள்ளோம். இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் அதன் ஆணையை நிறைவேற்றுவதில் நாங்கள் தொடர்ந்தும் ஆதரவளித்து வருகின்றோம். நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழ், சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக ஒரு தேசிய வழிநடத்தல் குழு செயற்படுகின்றது என்பதை நாங்கள் சுட்டிக்காட்டினோம். இதற்கும் மேலதிகமாக, கடந்த பல ஆண்டுகளாக நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பல்வேறு முயற்சிகளை ஆணைக்குழுவுக்கு எடுத்துரைத்து, ஒரு முடிவுக்கு வந்ததுடன், பரிந்துரைகள் இந்த செயன்முறைகளை முன்னோக்கிச் செல்ல வழிவகுக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். எமது மண்ணின் அடுத்த தலைமுறை மகன்கள் மற்றும் மகள்களுக்கு ஒரு பிரகாசமான, வளமான மற்றும் அமைதியான இலங்கையை செயற்படுத்துவதற்காக நாம் இவை அனைத்தையும் நேர்மையுடனும், சிரத்தையுடனும் மேற்கொள்கின்றோம்.

சமீபத்தில் இத்தாலியின் பொலோக்னாவில் முடிவடைந்த ஜி 20 சர்வமத உரையாடலின் உரையில், மதம் மற்றும்  ஏனைய சமூகக் கலாச்சார வேறுபாடுகளின் அடிப்படையிலான தடைகளைத் தாண்டுவதன் முக்கியத்துவத்தை எமது மாண்புமிகு பிரதமர் வலியுறுத்தினார். பொலோக்னாவில் நடைபெற்ற சர்வமத மன்றத்தில் மாண்புமிகு பிரதமரின் பங்கேற்பானது, உள்நாட்டு அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதில் கல்வி மற்றும் இளைஞர்களின் முக்கிய பங்கை மேலும் எடுத்துரைத்தது. இந்த சர்வமத மன்றம் இலங்கையில் எடுத்துக்காட்டப்பட்ட எமது பிராந்தியத்தில் உள்ள பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் ஒரு பொருத்தமான தருணமாவதுடன், இந்தப் பன்முகத்தன்மை ஒரு தேசமாக எமது வலிமையின் அடித்தளம் என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது. 'இந்த வேறுபாடுகளுக்கு மேல் உயர்ந்து, முதிர்ச்சியடைந்த தேசிய உணர்வை உருவாக்கும் சவாலுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம்' என அவர் குறிப்பிட்டார்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, தேசத்திற்கும் உலகுக்கும் உங்களின் மூலமான எங்களின் செய்தி என்னவென்றால், நாம் பல உள்ளூர் மற்றும் உலகளாவிய சவால்கள் குறித்து குறிப்பிடுவதால்,  நாங்கள் பன்முகத்தன்மையைக் கொண்டாட விரும்புகின்ற அதே நேரத்தில் பலவீனத்தை விட வலிமைக்கு ஆதாரமாக இருக்கும் ஒற்றுமை, இலங்கை என்ற  உணர்வு மற்றும் அடையாளத்தை உருவாக்க விரும்புகின்றோம். மாண்புமிகு பிரதமர் பொலோக்னாவில் தனது உரையில் குறிப்பிட்டது போல், 'நல்லிணக்கம் எமது காலத்தின் முக்கியமான தேவை. மோதல்கள் மற்றும் அதிகரித்து வரும் பதற்றங்கள் எம்மைச் சுற்றி மிகவும் தெளிவாக உள்ளன. அவர்களுடன் எங்களுக்கு ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், சமாதானத்தையும் ஸ்திரத்தன்மையும் எமது நாடுகளில் வாழும் அனைவருடனும் ஆரோக்கியமான உறவுகளிலிருந்து வருகின்றன.

இங்கே, வெறுப்பு வெறுப்பால் வெல்லப்படாது, மாறாக அன்பால் மட்டுமே வெல்லப்படுகின்றது என்பதை எமது  மதம் எமக்குப் போதிக்கின்றது. கடந்த காலத்திலிருந்து பெறப்பட்ட மனக்கசப்புக்களைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தில் கவனம் செலுத்த வேண்டும், இணக்கத்தின் தேவை, சகோதரத்துவம் மற்றும் புரிதலின் அவசரத் தேவையான இணைப்புக்களை எம்முடைய பார்வையில் இருந்து மாறுபட்ட பார்வைகளுடன் உருவாக்கினால், அதுவெ எம் அனைவருக்கும் காத்திருக்கும் உத்வேகம் தரும் புதிய எல்லையாகும்.'

இந்த முயற்சிகளில் சிவில் சமூகத்தின் பங்கை வலியுறுத்த விரும்புகின்றேன். சிவில் சமூகத்தின் பிரதிநிதிகள் நாம்  வகுக்க விரும்பும் தீர்வுகளின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கௌரவ. சபாநாயகர் அவர்களே, அவர்கள் பிரச்சினையின் வெளிப்பாடு அல்ல, ஆனால் எமது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் இன்றியமையாத கூறாவர். இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளை முடக்குவதாகக் கூறப்படும் அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு மேல் எதுவும் இருக்க முடியாது. நாங்கள் சமூகத்துடன் தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், நல்லிணக்கத்திற்கு ஆதரவாக மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் செயன்முறைகளுக்கு ஆதரவாக அவர்களின் ஆற்றலையும் சந்தேகத்திற்கு இடமில்லாத திறன்களையும் பயன்படுத்த முயற்சிக்கின்றோம். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையில் நான் மேற்கொண்ட உரையில் இதை நான் தெளிவாகக் கூறினேன், எமது மக்களின் முன்னேற்றத்திற்கான முயற்சிகளில் அவர்களை மதிப்புமிக்க பங்காளிகளாக நாங்கள் கருதுகின்றோம் என இந்த சபைக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, இந்த ஒருங்கிணைந்த நோக்கிற்கான முக்கிய சவால்களில் ஒன்று தீவிரவாதம்  மற்றும் அதிலிருந்து பிறந்த பயங்கரவாதம் ஆகும். நாங்கள் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கமாக, சர்வதேசப் பங்காளிகளுடனான நெருக்கமான ஒத்துழைப்புடன் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, பரந்த அர்த்தத்தில் மனிதப் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றோம். இந்த சூழலில் கணக்கில் கொள்ளப்பட வேண்டிய கூட்டு தேசிய மற்றும் சர்வதேசப் பாதுகாப்பில் பல பரிசீலனைகள் உள்ளன. தனிப்பட்ட சுதந்திரங்களுக்கு உத்தரவாதம் அளிப்பது தேசியப் பாதுகாப்பு என்ற கருத்துக்கு எதிரானது அல்ல. உண்மையில், இது தனிநபர் உரிமைகளை அனுபவிக்க உதவும் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான சர்வதேச மற்றும் உள்நாட்டு ஒழுங்காகும். உன்னதமான புராணத்தின் பல தலைகள் கொண்ட ஹைட்ரா போல, ஒரு நாடு அல்லது பிராந்தியத்தில் ஒரு இயக்கம் தோற்கடிக்கப்படும்போது தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் வேறு இடங்களில் வளர்கின்றன. இதை நாம் பல நிகழ்வுகளில் பார்த்திருக்கின்றோம். ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட உலகில், முன்பு ஊடுருவ முடியாத தேசிய எல்லைகளை இத்தகைய இயக்கங்களும் தீவிரவாத சித்தாந்தங்களும் அர்த்தமற்றவையாக்குகின்றன. கௌரவ. சபாநாயகர் அவர்களே, எமது பதில் சமமான இயக்கத்துடன், நெகிழக்கூடியதாகவும் நிலையானதாகவும் இருக்க வேண்டும். நியூயோர்க் மற்றும் ஏனைய இடங்களில் உள்ள நட்பு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்களுடனான எனது பரிமாற்றங்களின் போது, நெருக்கமான ஒத்துழைப்பு, உளவுத்துறை சேகரிப்பு மற்றும் பகிர்வு, அத்துடன் இந்த குற்றவியல் வலையமைப்புக்களின் நிதியுதவி மற்றும் தடை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான கூட்டு நடவடிக்கை ஆகியவற்றில் நாங்கள் கூர்மையான கவனம் செலுத்தியுள்ளோம்.

ஐ.நா. பொதுச் சபையில் தனது உரையில் அதிமேதகு ஜனாதிபதி வலியுறுத்தியது போல், 'பயங்கரவாதம் என்பது, அதிலிருந்து மீளுவதற்காக குறிப்பாக உளவுத்துறைப் பகிர்வு போன்ற விடயங்களில் சர்வதேச ஒத்துழைப்பு தேவைப்படும் ஒரு உலகளாவிய சவாலாகும். இலங்கையில் கடந்த அரை நூற்றாண்டில் வன்முறை  ஆயிரக்கணக்கான உயிர்களையும் பல தசாப்தங்களின் செழிப்பையும் கொள்ளையடித்துள்ளது.

இதுபோன்ற வன்முறைகள் இலங்கையில் மீண்டும் நடக்காது என்பதை உறுதி செய்வதில் எனது அரசாங்கம்  உறுதியாக உள்ளது.

எனவே அதன் பின்னணியில் உள்ள முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க நாங்கள் செயற்படுகின்றோம்.

இறுதியாக, கௌரவ. சபாநாயகர் அவர்களே, சர்வதேச சமூகத்துடன் தொடர்ச்சியான முனைப்புடன் ஈடுபடுவதன்  மூலம் தேசத்திற்கான சிறந்த முடிவுகளைப் பெறுவதற்கான எமது முயற்சிகளில் நாங்கள் ஓய்வெடுக்க மாட்டோம் என நான் இலங்கை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகின்றேன். வரும் மாதங்களில், இது தொடர்பான எமது முயற்சிகளில் பெருமளவிலான அவை உறுப்பினர்களுக்கும், தேசத்துக்கும் தொடர்ந்தும் தெரிவிக்க முயற்சிப்பேன்.

கௌரவ. சபாநாயகர் அவர்களே, நன்றி.

Please follow and like us:

Close