வெளிநாட்டு அலுவல்கள் அலி சப்ரி பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. ஏ.கே. அப்துல் மொமனை நவம்பர் 23ஆந் திகதி டாக்காவில் வைத்து சந்தித்து, இருதரப்புக் கலந்தரையாடல்களில் ஈடுபட்டார்.
இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் (ஐயோரா) அமைச்சர்கள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் சென்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சப்ரி, இருதரப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவை மேலும் மேம்படுத்துவதற்காக இரு நாடுகளுக்குமிடையே வலுவான கப்பல் மற்றும் விமானத் தொடர்பைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் குறித்து கலந்துரையாடினார். கடந்த சில ஆண்டுகளில் இந்தியா மற்றும் மாலைதீவு போன்ற அண்டை நாடுகளுக்கு சுமார் 2.5 மில்லியன் பங்களாதேஷ் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதால், இலங்கைக்கான பங்களாதேஷின் சுற்றுலா சந்தையின் சாத்தியக்கூறுகளை அமைச்சர் மொமன் சுட்டிக்காட்டினார். சாட்டோகிராம், கொழும்பு மற்றும் மாலே துறைமுகங்களை இணைப்பதன் மூலம் சுற்றுலாத்துறையை மேலும் மேம்படுத்த முடியும் என இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
சர்வதேச அரங்கில் பரஸ்பரம் அளித்த ஆதரவை வெளிநாட்டு அமைச்சர்கள் இருவரும் நினைவு கூர்ந்ததோடு, தமது ஆதரவை பரஸ்பரம் மீண்டும் உறுதிப்படுத்தினர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் பங்களாதேஷின் தொடர்ச்சியான ஆதரவிற்காக அமைச்சர் சப்ரி தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து அமைச்சர் சப்ரி அமைச்சர் மொமனுக்கு விளக்கினார். பங்களாதேஷின் பொருளாதார அபிவிருத்திக்கு இலங்கை முதலீட்டாளர்கள் வழங்கிய பங்களிப்பை அமைச்சர் மொமன் பாராட்டினார். இரு நாடுகளுக்கும் இடையே விரிவான ஒத்துழைப்பை உறுதி செய்வதற்காக அமைச்சர்கள் மட்டத்தில் ஒரு கூட்டு ஆலோசனைக் குழுவை உருவாக்குவது சம்பந்தமான விடயங்களை விரைவுபடுத்துவதற்கு இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
இருதரப்பு வர்த்தகத்தை மேலும் மேம்படுத்தும் வகையில் முன்மொழியப்பட்ட முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதன் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மொமன் குறிப்பிட்டார். பங்களாதேஷில் குறிப்பாக விவசாய பொருட்கள், மருந்துகள் மற்றும் நன்னீர் மீன் போன்றன சார்ந்த வர்த்தகத் துறையில் பல வாய்ப்புக்கள் உள்ளன. முதலீடுகளை மேம்படுத்துவதைக் கருத்தில் கொண்டு, இருதரப்பு முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடருவதற்கு இரு அமைச்சர்களும் விருப்பம் தெரிவித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான இருதரப்பு ஒத்துழைப்பை திருப்தியுடன் குறிப்பிட்ட இரு அமைச்சர்களும், உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒப்புக்கொண்டனர்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
டாக்கா
2022 நவம்பர் 24