பங்களாதேஷ் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் விவசாய உறவுகளை இலங்கை வலுப்படுத்தல்

பங்களாதேஷ் மற்றும் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் விவசாய உறவுகளை இலங்கை வலுப்படுத்தல்

பங்களாதேஷின் டாக்காவில் நடைபெற்ற ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான 36வது உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய மாநாட்டின் அமைச்சர்கள் மட்ட அமர்வில் இலங்கையின் விவசாயத் துறை மற்றும் உலகளாவிய கோவிட்-19 தொற்றுநோய்க்கு மத்தியில் எழுந்துள்ள சவால்கள் குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே விளக்கினார். 2022 மார்ச் 8 முதல் 11 வரை நடைபெற்ற ஊடாடும் அமர்வுகளில், நாட்டின் விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் புதுமையான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துரைத்தார்.

மாநாட்டின் பக்க அம்சமாக, மார்ச் 10ஆந் திகதி, உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் கு டோங்யுவுடன் அமைச்சர் ஆக்கபூர்வமாக கலந்துரையாடல்களில் ஈடுபட்டார். கலந்துரையாடலின் போது, தெற்காசியாவின் முக்கிய விவசாய நாடுகளில் இலங்கையும் ஒன்று என்றும், விவசாயத் துறையில் இலங்கைக்கு வரலாற்று நன்மைகள் இருப்பதால் வறுமை ஒழிப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது சிறிய தீவுக்கு சவாலான விடயம் அல்ல என்றும் உணவு மற்றும் விவசாய அமைப்பின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார். நாட்டின் விவசாயத் துறையில் கிடைக்கும் முதலீட்டு வாய்ப்புக்களை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக உணவு மற்றும் விவசாய அமைப்பைப் பயன்படுத்துமாறு அவர் இலங்கைக்கு அழைப்பு விடுத்தார். இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின் தயார்நிலையை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். இலங்கையின் விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து பணிப்பாளர் நாயகத்திற்கு அமைச்சர் விளக்கினார்.

பங்களாதேஷூடனான விவசாய ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தி, மேம்படுத்துவதற்காக, அமைச்சர் அலுத்கமகே, பங்களாதேஷ் விவசாய அமைச்சர் கலாநிதி. முஹம்மட் அப்துர் ரசாக்குடன் மார்ச் 11ஆந் திகதி இருதரப்புக் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இந்தச் சந்திப்பின் போது, இருதரப்பினரும் மேற்கொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில், பரஸ்பரம் ஏற்றுமதிப் பொருட்களை மேம்படுத்தி வலுப்படுத்துவது குறித்து இரு அமைச்சர்களும் கலந்துரையாடினர்.

உயர்ஸ்தானிகர் பேராசிரியர் சுதர்சன் செனவிரத்ன, விவசாய தொழில்நுட்ப மேலதிக செயலாளர் கலாநிதி காமினி சமரசிங்க, பிரதி உயர்ஸ்தானிகர் ருவந்தி தெல்பிட்டிய மற்றும் டாக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் முதல் செயலாளர் (வணிகம்) ஸ்ரீமாலி ஜயரத்ன ஆகியோர் இந்தக் கலந்துரையாடல்களில் கலந்துகொண்டனர்.

ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான 37வது உணவு மற்றும் விவசாய அமைப்பின் பிராந்திய மாநாடு 2024 இல் இலங்கையில் நடைபெற உள்ளது.

இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,

டாக்கா

2022 மார்ச் 21

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close