நெல்சன் மன்டேலா சமாதான உச்சி மாநாடு என அழைக்கப்படும் ஐக்கிய நாடுகள் பொது சபையின் உயர்-மட்ட நிறைவான கூட்டத்தில் இலங்கையின் சனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை
2018 செப்டெம்பர் 24 ஆம் திகதி, நிவ்யோர்க்
சீமாட்டிகளே மற்றும் கனவான்களே
நெல்சன் மன்டேலா சமாதான உச்சிமாநாட்டை ஓழுங்கமைத்துள்ளமைக்காக, இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பிலும், நான் எனது தாழ்மையான பாராட்டுதல்களை ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுச்சபையின் செயலாளர் நாயகத்திற்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
சமகால உலகமானது நெல்சன் மன்டேலா போன்ற தலைவர்களை இழந்துள்ள வேளையில், அங்கீகாரத்திற்கு உதாரணமாய் விளங்கிய தலைவரும், சிறந்தவொரு மனிதாபிமான ஆர்வலரும்; உன்னதமான பாதையை நோக்கி மனித இனத்தை வழிநடத்தியவருமாகிய அத்தகையவொரு தலைவரைப்பற்றி இன்று நாம் உரையாற்றுகின்றோம்.
நெல்சன் மன்டேலா அவர்கள், அதிகாரமுள்ள ஒருவர் அந்த அதிகாரத்திற்கான வரையறைகளை அமைக்கும் வேளையிலும்; அதிகாரத்தை வகைதுறக்கும் வேளையிலும் எவ்வாறு மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை உலகத்திற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.
இன்று உலகமானது மேதகு நெல்சன் மன்டேலாவால் முன்னெடுக்கப்பட்ட பாதையில் பயணிக்கவில்லை. இதன் காரணமாகத்தான் நெல்சன் மன்டேலாவின் பயணத்தை உலகிற்கு ஞாபகமூட்ட வேண்டிய தேவையேற்பட்டுள்ளது. உலக அரசியல் பாதையில் பயணிக்கும் இன்றைய தேசிய இனங்கள் மற்றும் தலைவர்கள் எந்தளவுக்கு நெல்சன் மன்டேலாவின் உன்னத குணங்களையும் பண்புகளையும் பின்பற்றுகின்றனர் என்ற கேள்வி எழுகின்றது.
குறிப்பாக உலக தலைவர்கள் சமாதானம், நல்லிணக்கம், சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வு மற்றும் மனிதாபிமான பயணம் ஆகியவற்றை உலகிற்கு கற்பித்த நெல்சன் மன்டேலாவின் வாழ்க்கையை கற்கவும் பின்பற்றவும் வேண்டும் என்பது எனது நம்பிக்கையாகும்.
நெல்சன் மன்டேலாவின் ஆழமான மனிதாபிமானம், மனித இனத்திற்கான அவரின் அன்பு மற்றும் அரசியல் அதிகாரத்திற்கான அவரின் பேராசையின்மை ஆகிய பண்புகளுக்காக உயர்ந்த மரியாதையை இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கம் செலுத்தும் அதேவேளையில் உலகத் தலைவர்கள் அனைவரும் இந்த சிறந்த மனிதரை பின்பற்ற வேண்டும் என்று நாம் அழைப்பினை விடுக்கின்றோம்.
அனைவருக்கும் எனது நன்றி.