நிலையான நைதரசன் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை காலநிலை மாற்ற உரையாடலில் இலங்கை எடுத்துரைப்பு

 நிலையான நைதரசன் முகாமைத்துவத்தின் முக்கியத்துவத்தை காலநிலை மாற்ற உரையாடலில் இலங்கை எடுத்துரைப்பு

காலநிலை மற்றும் நைதரசன் கழிவுகளுக்கு இடையிலான தொடர்பை மையமாகக் கொண்டு, சி.ஓ.பீ.26 க்கு முன்னதாக, சர்வதேச நைதரசன் முகாமைத்துவ அமைப்புடன் இணைந்து, 'நைதரசனை மீண்டும் கண்டறிதல்: காலநிலை மாற்றம், சுகாதாரம், பல்லுயிர் மற்றும் பல்வகைமை மற்றும் வட்டப் பொருளாதாரத்திற்கான தீர்வு ஒருங்கிணைப்புக்கள்' என்ற நிகழ்வை 2021 அக்டோபர் 31ஆந் திகதி மாலை கிளாஸ்கோவில் இலங்கையின் வெளிநாட்டு  அமைச்சு ஏற்பாடு செய்தது. நைதரசனை 1772 இல் ஸ்கொட்லாந்தில் விஞ்ஞானி டேனியல் ரூதர்ஃபோர்ட் கண்டுபிடித்ததால், 'நைதரசனை மீண்டும் கண்டுபிடித்தல்' என்ற சொற்றொடர் பயன்படுத்தப்படுகின்றது. சுற்றுச்சூழல், சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றிற்கான பல இணை நன்மைகளுடன் கூடிய காலநிலை இலக்குகளை அடைந்து கொள்வதற்கு உதவுவதற்கு அவசியமான நைதரசனின் மீதான நடவடிக்கை குறித்து இந்த நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் அதிமேதகு ஜனாதிபதி, இங்கிலாந்து அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம், பொதுநலவாயம், தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனையோரது உயர்மட்ட அறிக்கைகள் சி.ஓ.பீ.26 க்கு முன்னதாக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான விருப்பங்கள் குறித்து கலந்துரையாடின. இந்த நிகழ்வானது சி.ஓ.பீ.26 க்கான #Nitrogen4NetZero முன்மொழிவை அறிமுகப்படுத்தியதுடன், இது உறுப்பு நாடுகளுடனான தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் பணியை பிரதிபலிக்கின்றது.

2050ஆம் ஆண்டளவில் கார்பனேற்றத்திற்கான இலங்கையின் திட்ட வரைபடம் உட்பட, புதிய நிலக்கரி ஆலைகளை அமைப்பதில்லை  மற்றும் சதுப்புநில மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பிற்கான முன்னோடி நடவடிக்கை தொடர்பான முக்கிய தீர்மானத்தைக் கொண்டுள்ள, 2030 க்குள் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை அடைந்து கொள்வதற்காக காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் கட்டமைப்பு மாநாட்டில் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட அதன் புதுப்பிக்கப்பட்ட மற்றும் தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புக்களின் மூலம் சித்தரிக்கப்பட்ட இலங்கையின் முற்போக்கான காலநிலை அபிலாஷைகள் மீது மேலும் கவனம் செலுத்தியது. அந்நிய நேரடி முதலீட்டிற்கான வாய்ப்புக்கள், குறிப்பாக பசுமைத் தொழில்கள் மற்றும் சுற்றுலாத்துறைக்காக தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புக்களை நடைமுறைப்படுத்துவதற்கான இலங்கையின் நடவடிக்கைகளும்இந்த நிகழ்வில் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

இந்நிகழ்விற்கு ஸ்கொட்லாந்தின் முதன்மை விஞ்ஞானவியல் ஆலோசகரும் மோர்டூன் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானவியல்  பணிப்பாளருமான பேராசிரியர் ஜூலி ஃபிட்ஸ்பேட்ரிக் தலைமை தாங்கினார். சுற்றாடல் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர வரவேற்புரையை நிகழ்த்தியதுடன், அதனைத் தொடர்ந்து பேராசிரியர் மார்க் சுட்டன் அறிமுகவுரையை நிகழ்த்தினார். கொழும்பு பிரகடனத்தின் கீழ் நைதரசன் கழிவுகளை அரைவாசியாகக் குறைப்பதன் முக்கியத்துவத்தை பேராசிரியர் சுட்டன் வலியுறுத்தியதுடன், இது ஆண்டுக்கு 100 பில்லியன் அமெரிக்க டொலர்களை சேமிக்கும்.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றுகையில், 'சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஏற்படுத்தாமல் விவசாய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு நவீன விஞ்ஞான நுட்பங்களையும் நடைமுறைகளையும் பயன்படுத்துவதே தற்போது எம்மிடம் உள்ள சவாலாகும். எங்களுக்கு ஒரு புதிய விவசாயப் புரட்சி தேவைப்படுவதுடன், அது அதன் மையத்தில் நிலையான தன்மையைக் கொண்டுள்ளது' எனக் குறிப்பிட்டார். '...இலங்கை குறிப்பாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இயற்கை விவசாயத்தில் முதலீடுகளை வரவேற்கின்ற  அதே வேளையில், ஊக்குவிப்பு மற்றும் பொருத்தமான கொள்கைத் தலையீடுகளின் மூலம் அதன் வெற்றிக்கு ஆதரவளிப்பதற்குத் தயாராக உள்ளது. எனவே எதிர்காலத்தில் இது தொடர்பாக அதிகமான ஒத்துழைப்புகள் கிடைக்கும் என நம்புகின்றேன்' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

துரதிர்ஷ்டவசமாக, 2021 அக்டோபர் 31ஆந் திகதி நிகழ்ந்த ரயில் விபத்தின் காரணமாக, இங்கிலாந்தின் வெளியுறவு,  பொதுநலவாயம் மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் தெற்காசியா, ஐக்கிய நாடுகள் மற்றும் பொதுநலவாய அமைச்சரான விம்பிள்டன் பிரபு அஹ்மத் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள இயலவில்லை. அவரது உரையை ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான இங்கிலாந்தின் பிராந்திய சி.ஓ.பீ.26 தூதுவர் கென் ஓ'ஃப்ளாஹெர்டி நிகழ்த்தினார். பிரபு அஹ்மத் சார்பாக உரையை ஆற்றிய தூதுவர் ஓ'ஃப்ளாஹெர்டி, காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் எமது ஆரோக்கியத்தின் மீது நைதரசன் மாசுபாடு ஏற்படுத்தும் தாக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் முக்கியத்துவத்தை மீண்டும் வலியுறுத்தினார். 'எதிர்கால சந்ததியினருக்காக எமது கிரகத்தைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய நடவடிக்கையின் தேவை மிகவும் அவசரமானதாவதுடன், கார்பன் உமிழ்வைக் குறைப்பதில் அபிவிருத்தியடைந்த நாடுகளில் இங்கிலாந்து முன்னணி வகிக்கின்றது' என அவர் மேலும் விரிவாகக் குறிப்பிட்டார். நிகர பூஜ்ஜிய உமிழ்வை சட்டமாக இயற்றிய முதலாவது பெரிய பொருளாதாரமாக இங்கிலாந்து அமைவதுடன், 2035 க்குள் உமிழ்வை 78% குறைக்கும் உலகின் மிக லட்சியமான காலநிலை மாற்ற இலக்கை அது சட்டத்தில் அமைத்துள்ளமையினால், 2050 ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை சட்டமியற்றும் இங்கிலாந்தின் முன்னேற்றம் குறித்து அவரது உரையில் சிறப்பிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையின் துணைச் செயலாளரும், ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான  மாண்புமிகு இங்கர் அண்டர்சன், தெற்காசிய கூட்டுறவு சுற்றுச்சூழல் திட்டத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி. மசுமுர் ரஹ்மான் மற்றும் ஜேர்மனியின் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சின் இராஜாங்க செயலாளர் திரு. ஜோச்சென் ஃப்ளாக்ஸ்பார்த் ஆகியோர் காணொளி மூலம் உரை நிகழ்த்திய இந் நிகழ்வின் முக்கிய பேச்சாளர்களாவர்.

மாலை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, எகொனொமிக் டைம்ஸ் ஒஃப் இந்தியாவின் திருமதி. ஊர்மி கோஸ்வாமியும், பேராசிரியர் சுட்டனும் 'ஏன் நைதரசன்?' என்ற தலைப்பில் இருவழி உரையாடலை நடாத்தினர். 100 வருட காலப்பகுதியில், கார்பன் டையொக்சைடை விட 296 மடங்கு அதிகமான ஜி.எச்.ஜி. நைட்ரஸ் ஒக்சைட்டினாலான நேரடியான புவி வெப்பமடைதல் சாத்தியத்தை (பாரிய அடிப்படையில்) இந்தக்  கலந்துரையாடல் வலியுறுத்தியது. உலகம் நிகர பூஜ்ஜிய ஜி.எச்.ஜி. உமிழ்வை அடைந்து கொள்ள வேண்டுமானால் நைட்ரஸ் ஒக்சைட்டு உமிழ்வைக் குறைப்பது அவசியமாகும்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஏனைய முக்கிய பிரமுகர்களில், மாலைதீவின் ஜனாதிபதி அதிமேதகு இப்ராஹிம் முகமது சோலிஹ்  மற்றும் பிலிப்பைன்ஸ் குடியரசின் வெளியுறவுச் செயலாளர் திரு. தியோடோரோ ஜூனியர் லொக்சின் ஆகியோர் அடங்குவர். தேசிய பிரதிநிதிகள், பிரித்தானிய அரசாங்கம், வணிக மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த தனியார் துறை பணியாளர்கள் மற்றும் கல்வியியலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் 90க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

'2.5 பில்லியன் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஐம்பத்து நான்கு பொதுநலவாய நாடுகளுடன் இலங்கை இந்தப் பயணத்தில் ஈடுபட்டுள்ளது...' என அஸ்தலின் பரோனஸ் ஸ்கொட்லாந்து, பொதுநலவாயத்தின் பொதுச் செயலாளர் கௌரவ. பட்ரிசியா ஸ்கொட்லேன்ட்  பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார். 'நீங்கள் பின் சென்று அந்த அறிவிப்பைப் பார்த்தால், இது ஒரு இருத்தலியல் சார்ந்த அச்சுறுத்தல் என்ற கவலைகள் அனைத்தும் இருந்ததுடன், அப்போது இலங்கை முன்னணியில் இருந்தது, இப்போதும் இலங்கை முன்னணியில் உள்ளது' என்று அவர் மேலும் குறிப்பிட்டார். பேசுவதில் ஆர்வம் காட்டாது செயலில் முற்றிலும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுகின்ற இலங்கை ஜனாதிபதி மற்றும் மாலைதீவு ஜனாதிபதி ஆகிய இருவரையும் அவர் பாராட்டினார். நடைமுறைப்படுத்தல் செயற்பாட்டில் பொதுநலவாய செயலகத்தின் ஆதரவு மற்றும் செயஙபடுத்தல் கருவித் தொகுப்பு உருவாக்கப்படும் என அவர் உறுதியளித்தார். சதுப்புநிலங்களுக்கும் நைதரசனுக்கும் இடையிலான தொடர்பைப் புரிந்து கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தியதுடன், பொருத்தமான பொறிமுறைகளை உருவாக்குவதில் பொதுநலவாய செயலகத்துடன் மீண்டும் இணைந்து கொள்ளுமாறு இலங்கையை வரவேற்றார்.

'ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் பேரவையின் 4/14 - 2019 தீர்மானத்திற்கு அப்பால் விரிவான நடவடிக்கைகளை முன்மொழிந்து, நிலையான நைதரசன் முகாமைத்துவம் தொடர்பான புதிய பெறுமதி சேர்க்கப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆந் திகதி சமர்ப்பித்துள்ளது' என சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜாசிங்க அறிவித்தார்.  2030 ஆம் ஆண்டு வேகமாக நெருங்கி வரும் நிலையில், கொழும்பு பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, முன்மொழியப்பட்ட தீர்மானத்தில் பல புதிய கூறுகளை இலங்கை அறிமுகப்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இந்தப் புதிய தீர்மானம், காலநிலைக்கான நைதரசன் மீதான நடவடிக்கைக்கு அடித்தளத்தை அமைக்கும் அதே வேளை, சம்பந்தப்பட்ட அனைத்து பலதரப்பு சுற்றுச்சூழல் ஒப்பந்தங்களையும் மாநாட்டிற்கு இடையேயான நைதரசன் ஒருங்கிணைப்புப் பொறிமுறையின் மூலம் ஒருங்கிணைக்கும் எனக் குறிப்பிட்டார்.

இறுதிக் கருத்துக்களை வழங்கிய வெளிநாட்டு அமைச்சர் கௌரவ. பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பெருக்கம் தொடர்பான உலகளாவிய முன்முயற்சிகளில் முன்னோடிப் பங்கை வகிக்க இலங்கை சிறந்த முறையில் தயாராக உள்ளதாக வலியுறுத்தினார். ஒருபுறம் பொருளாதார அபிவிருத்திக்கும் மறுபுறம் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் இடையில் முரண்பாடுகள் இருப்பதாக இலங்கையில் நாம் ஒரு போதும் நம்பவில்லை. ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் போல இந்த இரண்டு அம்சங்களும் ஒன்றாகச்  செல்கின்றன' என அவர் குறிப்பிட்டார். இலங்கையின் அனைத்து விவசாய நடவடிக்கைகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் இரசாயன உரத்திலிருந்து இயற்கை உரத்திற்கு மாறுவதற்கான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துணிச்சலான தீர்மானத்தை எடுத்ததாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். இந்த மாற்றமானது நீர் மற்றும் மண்ணை மாசுபடுத்தி, அதன் மூலம் சமுத்திரங்களை மாசுபடுத்தி, நாட்டு மக்களின் ஆரோக்கியத்தில் ஒட்டுமொத்தமான அடிப்படையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாசுபாட்டைக் குறைக்கும் எனக் குறிப்பிட்டார்.

பேரோனஸ் பட்ரிசியா ஸ்கொட்லேண்ட்டின் கருத்துக்களைக் குறிப்பிட்ட பேராசிரியர் பீரிஸ், 'எம்மிடம் நேரத்தின் ஆடம்பரம்  இல்லை என்பதே இதற்கான காரணமாகும். உயர்ந்த லட்சியங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்கள் போதுமானதாக இல்லை. உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதே அவசரமாகத் தேவைப்படுகின்ற அம்சமாகும்'. என தொடர்ந்தும் குறிப்பிட்டார். அரசியல் ரீதியான மாறுபாடுகளில் இருந்து இலங்கை வெகு தொலைவில் இருப்பதாகவும், தீவிரமான அர்ப்பணிப்பு மற்றும் கடுமையான ஈடுபாட்டை கொண்ட அணுகுமுறையே எம்முடையதாகும் என பார்வையாளர்களுக்கு கௌரவ. வெளிநாட்டு அமைச்சர் உறுதியளித்தார். எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக இந்த கிரகத்தின் உயிர்வாழத்தக்க சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் மற்றும் ஏனைய அம்சங்களுக்கும் இலக்கான அனைத்து முயற்சிகளிலும் இலங்கை எப்போதும் உறுதியான பங்காளியாக இருக்கும் என அவர் சர்வதேச சமூகத்திற்கு உறுதியளித்தார்.

வெளிநாட்டு அமைச்சு,

கொழும்பு

2021 நவம்பர் 12

Print Friendly, PDF & Email
Please follow and like us:

Close