கோவிட்-19 தொற்றுநோயின் கட்டுப்பாடுகள் காரணமாக நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம் நியூயோர்க் ட்ரை-ஸ்டேட் பகுதியில் மெய்நிகர் ரீதியாக இலங்கையின் 74 வது ஆண்டு சுதந்திர தின விழாவைக் கொண்டாடியது.
நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் மொஹான் பீரிஸ் தேசியக் கொடியை ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து தேசிய கீதம் மற்றும் ஜயமங்கல கதா கீதம் இசைக்கப்பட்டு விழா ஆரம்பமானது.
நியூயோர்க் பௌத்த விகாரையின் பிரதமகுரு வணக்கத்திற்குரிய அலுத்கம தம்மஜோதி தேரர் பௌத்த ஆசீர்வாதங்களை வழங்கியமையைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள வட அமெரிக்காவின் இந்து ஆலய சங்கத்தின் சமய விவகாரப் பணிப்பாளர் ஸ்ரீ ரவி வைத்தியநாத சிவாச்சாரியார், வட அமெரிக்காவில் உள்ள இலங்கை முஸ்லிம் சமூகத்தின் முன்னாள் இமாம் முப்தி ஹிஷாம் நவாஸ் மற்றும் நியூ ஜேர்சியில் உள்ள செயின்ட் பெனடிக்ட் மடாலயத்தின் வணக்கத்திற்குரிய தந்தை சில்வெஸ்டர் ஜெயக்கொடி ஆகியோர் ஆசி வழங்கினர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுதந்திர தின உரையைத் தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோரின் வாழ்த்துச் செய்திகள் வாசிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் நிரந்தரப் பிரதிநிதி மொஹான் பீரிஸ் உரையாற்றுகையில், நாம் எமது சொந்தக் கனவுகளைத் தொடரும் சுதந்திர தேசத்தின் மக்கள் என்றும், பல ஆண்டுகளாக ஊட்டப்பட்ட சுதந்திரமானது எதேச்சாதிகாரக் கட்டுப்பாடு மற்றும் சமூக சாசனம் இல்லாத எமது சொந்தத் தெரிவுகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். சுதந்திரத்தின் புனிதமான கொள்கைகள் எமது அரசியலமைப்பின் அடித்தளத்தில் பொதிந்துள்ளன என்றும், வாய்ப்பின் தரத்தை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாட்டை உள்ளடக்கியது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். யாரையும் விட்டு வைக்காத தொற்றுநோய் அதிலிருந்து சிறந்த முறையில் மீண்டு, கட்டியெழுவதற்கான புதிய வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது என்பதை எடுத்துரைத்த அவர், ஒரு தேசமாக நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எதுவாக இருந்தாலும், தலைகளை உயர்த்தி, கைகளை அகல விரித்து எதிர்கொள்ள வேண்டும் என இலங்கைப் பிரஜைகளிடம் கேட்டுக்கொண்டார்.
பங்களாதேஷ் மக்கள் குடியரசு, பூட்டான் இராச்சியம், இந்தியக் குடியரசு, மாலைதீவுக் குடியரசு, நேபாளம் மற்றும் பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு ஆகிய நாடுகளின் ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரப் பிரதிநிதிகளால் அந்தந்த அரசாங்கங்கள் மற்றும் அவர்களது மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில் செய்திகள் வழங்கப்பட்டன.
நியூயோர்க் ட்ரை ஸ்டேட் பகுதியில் வசிக்கும் புலம்பெயர் இலங்கையர்களின் செய்திகளும் இந்த விழாவில் உள்ளடக்கப்பட்டன. நியூயோர்க்கில் உள்ள சிங்கள சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, கலாநிதி விஜே கொட்டஹச்சி உரையாற்றினார், அதனைத் தொடர்ந்து நியூயோர்க்கில் உள்ள தமிழ் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி கதிரவேல் ஈஸ்வரனும், முஸ்லிம் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி திரு. அப்துல் ஷாகுல்ஹமீட்டும் உரையாற்றியதுடன், நியூயோர்க் இலங்கை சங்கத்தின் தலைவி திருமதி. ஷமிஸ்ரா நடராஜாவின் உரை இடம்பெற்றது.
கிரிபத் மற்றும் ஏனைய பாரம்பரிய இலங்கை இனிப்பு வகைகளுடன் நிகழ்வு நிறைவுற்றது.
முழு நிகழ்விற்கான இணைப்பை https://youtu.be/f8SVY_drDaw இல் அணுகஜக் கொள்ளலாம்.
நிரந்தரப் பிரதிநிதியான தூதுவர் மொஹான் பீரிஸின் உரையை https://youtu.be/35jfJE9G2hkv இல் அணுகிக் கொள்ளலாம்.
ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரத் தூதரகம்,
நியூயோர்க்
2022 பிப்ரவரி 08