நாட்டை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் ஒற்றையாட்சி நாடாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது - அமைச்சர் தினேஷ் குணவர்தன

நாட்டை ஒரு சுதந்திரமான, இறையாண்மை கொண்ட, சுயாதீனமான மற்றும் ஒற்றையாட்சி நாடாக அபிவிருத்தி செய்வதற்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது – அமைச்சர் தினேஷ் குணவர்தன

சுதந்திரம், இறையாண்மை, சுயாதீனம் மற்றும் ஒற்றையாட்சி அரசைப் பாதுகாக்கும் அதே வேளையில், நாட்டின் அபிவிருத்திக்கு தற்போதைய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். திருகோணமலையில் வெளிநாட்டு அமைச்சின் கிழக்கு மாகாணப் பிராந்திய கொன்சியூலர் அலுவலகத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

'வடக்கு மற்றும் கிழக்கு உட்பட, ஒரு ஒற்றையாட்சி நாடாக நாட்டின் அனைத்து மக்களுக்கும் சம உரிமைகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. முப்பது ஆண்டுகால பயங்கரவாதப் போர் இந்தப் பகுதிகளில் வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. அபிவிருத்தி மறுக்கப்பட்டது. இருப்பினும், போரில் வெற்றி பெற்ற பின்னர், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக செயற்பட்ட காலத்தில் இந்தப் பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. மூதூர் பகுதியில் நீர் வழங்கல் முறைமை எவ்வாறு மீட்டெடுக்கப்பட்டது என்பதையும், எமது நாட்டைத் தாக்கிய சுனாமிப் பேரழிவின் போது திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த இத்தாலிய அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்ட கப்பலில் ஒரு மருத்துவமனையை அமைப்பதன் மூலம் இந்தப் பகுதி மக்களுக்கு சேவை எவ்வாறு வழங்கப்பட்டது என்பதையும் மக்கள் மறக்கவில்லை. தற்போதைய அரசாங்கம் போரின் வெற்றியின் பின்னர் தொடங்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்து வருவதுடன், இந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது செயற்பட்டு வருகின்றது. அந்த நேரத்தில், கந்தளாய் நீர் வழங்கல் திட்டத்தின் மூலம் திருகோணமலையில் உள்ள நீர் சார்ந்த பிரச்சினையைத் தீர்த்து வைத்தோம். தற்போது, கொழும்பில் கிடைக்கும் வசதிகளை கிராமங்களுக்கும் வழங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற இலக்கை நனவாக்கி நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமது அரசாங்கத்தின் கீழ், எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழக்கூடிய வகையில் செயற்படுகின்றோம் என்பது மக்களுக்குத் தெரியும். எமது மனிதநேயத் திட்டம் சர்வதேச ஆதரவைப் பெறுகின்றது. அந்த ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் செயற்பட வேண்டாம் என நாங்கள் உங்களை கேட்டுக்கொள்கின்றோம். இந்த நாட்டை அபிவிருத்தி செய்வதற்காகவே இந்த நாட்டில் பெரும்பான்மையான மக்கள் எமக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளதோடு, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஒரு வலுவான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எமக்கு உதவியுள்ளனர்.'

திருகோணமலை மாவட்டம் நாட்டின் மிகவும் அதிர்ஷ்டமான பகுதிகளில் ஒன்றாகும். அனைத்து இனத்தவர்களான சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்து வருவதுடன், இந்தப் பகுதி நாட்டின் வளங்கள் நிறைந்த பொருளாதார மையமாக அபிவிருத்தியடைந்து வருகின்றது. தொலைதூரக் கடந்த காலங்களில் கூட, திருகோணமலை கடல் பகுதி சர்வதேச வர்த்தகத்திற்கும், ஏனைய பரிமாற்றங்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலைத் துறைமுகம் என்பது இப்பகுதியின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரு வளமாகும். இதை அபிவிருத்தி செய்வதற்கும் இந்தப் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் 'நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை' என்ற கொள்கைக் கட்டமைப்பிற்கு ஏற்ப, அரசாங்கத்தின் சேவைகளை மக்கள் எளிதாக அணுக முடியும் ஆதலால், மத்திய அரசாங்கம் தற்போது அவற்றை அந்தப் பகுதிகளுக்கும் நகர்த்துவதற்கு தொடங்கியுள்ளது. அதன்படி, வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் அலுவலகம் திருகோணமலையில் நிறுவப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்கள் தற்போது கொன்சியூலர் சேவைகளுக்காக கொழும்புக்கு செல்ல வேண்டியதில்லை. இது மக்களுக்கு அவர்களின் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்துவதற்கு வாய்ப்பளித்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கொன்சியூலர் அலுவலகத் திறப்பு விழாவில் இலங்கை முஸ்லிம் காங்கிரசின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. தௌபீக் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராசமணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது சிறப்பம்சமாகும். இந்த நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திலக் அத்துகோரல, பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளிநாட்டு அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு

 

2021 மார்ச் 14

 

 

 

Please follow and like us:

Close