2021 ஜூலை 13ஆந் திகதி அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் டேவிட் ஹொலியுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்குமிடையேயான உறவை பல துறைகளில் பலப்படுத்துவதிலான பலன்கள் குறித்து வெளிநாட்டு அமைச்சர் மந்திரி தினேஷ் குணவர்தன கலந்துரையாடினார்.
இந்த ஆண்டு ஜூன் மாதம் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சர் மரைஸ் பெய்னுடன் நடைபெற்ற வெற்றிகரமான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, எதிர்கால கடல் அனர்த்தங்களால் ஏற்படும் சேதங்களைக் குறைப்பதற்காக இலங்கையின் கடல் பாதுகாப்பு அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து இரு தரப்பினரும் கலந்துரையாடினர். இது தொடர்பாக, எம்.வி. எக்ஸ்-பிரஸ் பேர்ள் அனர்த்தம் காரணமாக ஏற்பட்ட கழிவுகளை சுத்திகரிப்பதற்காக, கடலோரத் தூய்மையாக்கல் முயற்சிகளுக்கு உதவும் முகமாக தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் ஆதரவுகளை வழங்கியமைக்காக அமைச்சர் குணவர்தன இலங்கையின் நன்றியைத் தெரிவித்தார். கடல்சார் சுற்றுச்சூழல் அனர்த்தங்கள் மற்றும் இந்து சமுத்திர விளிம்பு சங்கம் போன்ற சர்வதேச மற்றும் பிராந்திய அரங்குகள் மூலம் இத்தகைய சம்பவங்களின் பாதகமான தாக்கங்களைக் குறைப்பதன் முக்கியத்துவம் குறித்த பரந்த அடிப்படையிலான உரையாடலை உருவாக்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது.
இலங்கையில் சமூகப் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய வெளிநாட்டு அபிவிருத்தி உதவியின் கீழ் செயற்படுத்தப்பட்ட கோவிட்-19 தொற்றுநோயின் பரவலைத் தணிப்பதற்காகவும், திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காகவும் பொது சுகாதாரத் துறையின் திறனை மேம்படுத்துவதற்கான அவுஸ்திரேலியாவின் தொடர்ச்சியான ஆதரவை வெளிநாட்டு அமைச்சர் பாராட்டினார்.
நாடுகளின் பரஸ்பர நலன்களுக்கு ஏற்ப இருதரப்புக் கூட்டாண்மையை ஆழப்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்குமான முக்கிய தளங்களான அரசியல், பொருளாதார மற்றும் கடல்சார் துறைகளில் இரு நாடுகளுக்கிடையில் இருதரப்பு ஆலோசனைகளை முன்னெடுப்பதற்கு முன்னுரிமை அளிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர். நிபுணத்துவப் பரிமாற்றத்திற்கான சாத்தியமான துறையாக ஒரு கட்டமைக்கப்பட்ட பொறிமுறையின் மூலம் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஒத்துழைப்புக்களை மேம்படுத்துதல் அடையாளம் காணப்பட்டது.
இலங்கையில் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவின் கல்வித் தகுதிகளைப் பெறக்கூடிய கல்வி மையமாக இலங்கையை கூட்டாக ஊக்குவிப்பதற்கான அவுஸ்திரேலியாவின் ஆர்வத்தை உயர் ஸ்தானிகர் ஹொலி உறுதிப்படுத்தினார். இரு நாடுகளுக்குமிடையேயான கல்வி ஒத்துழைப்பையும், தற்போதுள்ள கோவிட்-19 தொடர்பான பயணக் கட்டுப்பாடுகளின் காரணமாக உயர்நிலைக் கற்கைகளை மேற்கொள்ளும் சர்வதேச மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு மீளத் திரும்ப அனுமதிப்பதற்கான அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகளையும் வரவேற்ற வெளிநாட்டு அமைச்சர் குணவர்தன, இலங்கை மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு பிரயாணிப்பது குறித்து விரைவாக வசதிகளை வழங்குவதற்கு பரிசீலிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
வெளிநாட்டு அமைச்சு
கொழும்பு
2021 ஜூலை 14