2022 ஜூன் 19 முதல் 21 வரை தென்னாபிரிக்காவின் ஜொஹான்னஸ்பேர்க்கில் உள்ள கல்லகர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சியில் இரண்டு முன்னணி இலங்கை உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த காலங்களில் 27 ஆண்டுகள் நடைபெற்றுள்ள தென்னாபிரிக்க பல்துறை வர்த்தகக் கண்காட்சி, உள்ளூர் மற்றும் சர்வதேச இறக்குமதியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஆபிரிக்கப் பிராந்தியத்திற்குள் உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் வர்த்தக வாய்ப்புகளைப் பயன்படுத்தி, சர்வதேச மற்றும் உள்ளூர் வர்த்தக உறவுகளை எளிதாக்கும் அதே நேரத்தில் தனியார் துறைக்கு அவர்கள் செய்ய வேண்டிய கண்டுபிடிப்புக்கள், தீர்வுகள் மற்றும் சேவைகளை நிரூபிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குகின்றது. இந்த ஆண்டு, 25 நாடுகளைச் சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்களும், 4900 பங்கேற்பாளர்களும் மற்றும் இறக்குமதியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், தயாரிப்பு உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், முகவர்கள், அரச அமைப்புக்கள் மற்றும் தொழில்முனைவோர் ஆகியோர் தென்னாபிரிக்காவின் பல்துறை வர்த்தகக் கண்காட்சியில் கலந்துகொண்டனர். தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தென்னாபிரிக்க பல்துறை வர்த்தக கண்காட்சியில் இலங்கை நிறுவனங்களின் பங்கேற்பை எளிதாக்கியது.
சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனம் பிஸ்கட் மற்றும் க்ரெக்கர்கள், சொக்லேட்டுகள், தேங்காய்ப் பொருட்கள், சோயாப் பொருட்கள், இயற்கைப் பழங்கள் மற்றும் சுவையூட்டிப் பொருட்கள், ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் தானியங்கள் உட்பட பலவிதமான தின்பண்டங்களை விளம்பரப்படுத்தியது. இதில் சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக நாமங்களான மஞ்சி, ரிட்ஸ்பரி, ரெவெல்லோ, சேரா, சமபோஷ மற்றும் லங்காசோய் ஆகியவை அடங்கும். சிலோன் பிஸ்கட் லிமிடெட் தற்போது தென்னாபிரிக்கா, கானா மற்றும் அங்கோலா உள்ளிட்ட 60 நாடுகளுக்கு தமது தயாரிப்புக்களை ஏற்றுமதி செய்கின்றது. சிலோன் பிஸ்கட் லிமிடெட் இப்போது தென்னாபிரிக்கா, சாம்பியா, சிம்பாப்வே, மலாவி மற்றும் கிழக்கு ஆபிரிக்காவில் மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கும் விரிவடைந்து வருகின்றது.
சில்க் ஃபுட்ஸ் சிலோன் (பிரைவேட்) லிமிடெட் தமது அதிநவீன சைவ தயாரிப்புக்கள், இயற்கையான ஊட்டச்சத்து மருந்துகள், சுவையூட்டிப் பொருட்கள், தேநீர் மற்றும் தேங்காய் தொடர்பான தயாரிப்புக்களிலிருந்து நிலையான தயாரிப்புக்களை காட்சிப்படுத்தியது. சிலோன் டீ கொம்புச்சா (தேங்காய் மற்றும் ஈஸ்ட் சேர்த்து தயாரிக்கப்படும் பானம்), சைவ பர்கர் பாட்டி, பால் இல்லாத தயிர், தாவர அடிப்படையிலான பாலாடைக்கட்டி, ஓட்ஸ் மற்றும் அரிசிப் பால் ஆகியவை பல பார்வையாளர்களைக் கவர்ந்த சிறந்த தயாரிப்புக்களாகும். சைவ உணவு சந்தை தென்னாபிரிக்காவில் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, எனினும் அடுத்த 10 - 15 ஆண்டுகளில் சந்தையில் கணிசமான பங்கைப் பெறுவதற்கான பரந்த வாய்ப்பு உள்ளது.
உயர்ஸ்தானிகர் பேராசிரியர் காமினி குணவர்தனவினால் நடாத்தப்பட்ட இந்த நிறுவனங்களின் அதிகாரிகளுக்கான வரவேற்பு நிகழ்வில், இரு நிறுவனங்களும் வர்த்தகக் கண்காட்சியில் வெற்றியைப் பதிவு செய்தன, குறிப்பாக சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் ஆறு ஆபிரிக்க நாடுகள் மற்றும் ஒரு லத்தீன் அமெரிக்க நாட்டிலிருந்து வர்த்தக விசாரணைகள் மற்றும் சலுகைகளை அறிவித்தது. உயர்ஸ்தானிகர், இரண்டு நிறுவனங்களின் தொழில் முனைவோர் மற்றும் அவற்றின் செலவில், ஏற்றுமதியை விரிவுபடுத்துவதற்கும், இலங்கைக்குத் தேவையான அந்நிய செலாவணியைப் பெறுவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு நாட்டின் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
இலங்கை உயர்ஸ்தானிகராலயம்,
பிரிட்டோரியா
2022 ஜூலை 06