தூதுவர் அம்சா சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பு

தூதுவர் அம்சா சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்பு

சவூதி அரேபியாவுக்கான நியமனம் செய்யப்பட்ட இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள தூதுவர் பி.எம். அம்சா, 2021 அக்டோபர் 31ஆந் திகதி ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் தூதரக ஊழியர்களால் எளிமையான முறையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவொன்றில் வைத்து தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

தூதரகத்தை வந்தடைந்த நியமனம் செய்யப்பட்ட தூதுவரும், அவரது பாரியாரும் தூதரகத் தலைவர் திரு. துல்மித்  வருண அவர்களால் வரவேற்கப்பட்டனர்.

தேசிய கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தூதுவர், அவரது பாரியார் மற்றும் இலங்கைத் தூதரகத்தின்  அதிகாரிகள் பாரம்பரிய மங்கள விளக்கை ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து, தூதுவர் தனது அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ஊழியர்களிடையே உரையாற்றிய தூதுவர் அம்சா, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும்  வலுப்படுத்துவதில் சுற்றுலா, வர்த்தகம், முதலீடு மற்றும் வேலை வாய்ப்புக்களை மேம்படுத்துதல் உள்ளிட்ட தனது இலக்குகளைக் குறிப்பிட்டார்.

இலங்கை வெளிநாட்டு சேவையின் உறுப்பினரான தூதுவர் அம்சா, வெளிநாட்டு அமைச்சு மற்றும் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களில் ஆற்றிய பல்வேறு பணிகள் உள்ளடங்கலாக 27 ஆண்டுகளுக்கும் மேலான இராஜதந்திர அனுபவம் வாய்ந்தவராவார். தற்போதைய பதவியை ஏற்பதற்கு முன்னர், அவர் வெளிநாட்டு அமைச்சின்  பொருளாதார விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராகப் பணியாற்றினார். அவர் ஜோர்ஜியா மற்றும் உக்ரைனுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்ட துருக்கிக்கான இலங்கைத் தூதுவராகவும், பெல்ஜியத்திற்கான இலங்கைத் தூதுவராகவும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தூதரகத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். அவர் பேர்லினில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பிரதி தூதரகத் தலைவராகவும், சென்னையில் துணை உயர்ஸ்த்தானிகராகவும், லண்டனில் துணை உயர்ஸ்த்தானிகராகவும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் மற்றும் கெய்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்திலும் அவர் இராஜதந்திரப் பணிகளை ஆற்றியுள்ளார்.

இலங்கைத் தூதரகம்,

ரியாத்

2021 நவம்பர் 02

Please follow and like us:

Close