துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

 துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இலங்கையர் ஒருவர் உயிரிழப்பு

பல நாடுகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான நபர்களின் உயிர்ச்சேதம் மற்றும் சொத்துக்களுக்கான பாரியளவிலான சேதத்தை ஏற்படுத்திய, 2023 பெப்ரவரி 06ஆந் திகதி தென் துருக்கியின் 110,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தில் இலங்கையர் ஒருவரும் துரதிஷ்டவசமாக மரணமடைந்துள்ளார்.

துருக்கியின் தென்கிழக்குப் பிராந்தியத்தில் ஏற்பட்ட அழிவுகரமான பூகம்பத்தைத் தொடர்ந்து, 2000 க்கும் அதிகமான பின் அதிர்வுகள் மற்றும் நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், மரண எண்ணிக்கை 29,605 ஆக உயர்ந்துள்ள அதே வேளை, 80,278 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகனுடன் உரையாடியதுடன், தீர்க்க முடியாத துயரிலுள்ள துருக்கி மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இந்த நேரத்தில் வழங்குவதற்கு இலங்கை தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகம், துருக்கிய அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பூகம்பம் மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் வசிக்கும் பதினாறு இலங்கையர்களின் நலனைக் கண்டறியும் பணியில் ஈடுபட்டது. அவர்களில் 15 பேரைத் தொடர்பு கொண்ட தூதரகம், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தியதுடன், துருக்கியின் ஹடாய் / அன்டக்யா மாகாணத்தில் வசித்து வந்த இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட இலங்கையரின் நிலையை தூதரகம் உறுதிப்படுத்தியதுடன், காணாமல் போன இலங்கையரின் துரதிர்ஷ்டவசமான மரணம் குறித்து வருத்தம் தெரிவிக்கின்றது. குடும்பத்தாரின் வேண்டுகோளுக்கு இணங்க உயிரிழந்த இலங்கையரின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளது. சுகாதார அதிகாரிகளால் விதிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க, இறந்தவர்களின் இறுதிச்சடங்கு ஏற்கனவே ஹடாய் / அன்டக்யாவில் நடைபெற்றுள்ளது.

இறந்தவரின் மகள் மற்றும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றது.

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,

கொழும்பு

2023 பிப்ரவரி 14

Please follow and like us:

Close