துணைத்தூதுதரின் சமஸ்கிருதத்திற்கான ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழக துணைவேந்தருடனான சந்திப்பு

துணைத்தூதுதரின் சமஸ்கிருதத்திற்கான ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழக துணைவேந்தருடனான சந்திப்பு

மும்பையில் உள்ள இலங்கை துணைத் தூதுவர் வல்சன் வெதோடி, சமஸ்கிருதத்திற்கான ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழகத்திற்கு, பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரின் அழைப்பின் பேரில் விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

ஸ்ரீ சங்கராச்சார்யா சமஸ்கிருதப் பல்கலைக்கழகமானது, 1993 இல் நிறுவப்பட்டதுடன், இந்தியாவிலுள்ள சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களில் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கத்தில் முன்னோடியாக விளங்குகின்றது. இப்பல்கலைக்கழகம்  சமஸ்கிருதம், பிற இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகள், சமூக அறிவியல் மற்றும் நுண்கலைகளில் அறிவை வழங்குதலை நோக்கமாக கொண்டு இயங்குகிறது.

துணை தூதருக்கான, சார்பு துணை வேந்தர் கலாநிதி கே.முத்துலெட்சுமி மற்றும் பல்கலைக்கழகத்தின் அனைத்து திணைக்கள பிரதானிகளினதும் சுமுகமான வரவேற்புடன் இவ்விஜயம் இனிதே தொடங்கியது. அதனைத்தொடர்ந்து, ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழகத்தின் போதனைகள், இந்து மதத்திற்கும் புத்த மதத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் மற்றும் கேரளாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான கலாச்சார மற்றும் வரலாற்று உறவுகள் போன்ற விடயங்கள் தொடர்பிலான,ஒரு ஊடாடும் அமர்வு நடைபெற்றது.

உரையாடல்களின் போது, ​​சார்பு துணைவேந்தர் மற்றும் சர்வதேச உறவுகள் திணைக்களத்தின் பேராசிரியர் சூசன் தாமஸ் ஆகியோரினால்,  ஸ்ரீ சங்கராச்சாரியா பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கூட்டுறவு முன்மொழியப்பட்டது. புலமைப்பரிசில்கள், அறிவுசார் மற்றும் கலாச்சார ரீதியான பரிமாற்றங்கள் போன்றவற்றை  மேற்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களின்    சாத்தியப்பாடுகள் குறித்த விடயங்களும் இக்கலந்துரையாடலில் உள்ளடங்கியது. மேலும் பல்கலைக்கழக தரப்பானது,  வளாக கட்டிடக்கலை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் வசதிகளை காட்சிப்படுத்துவதை நோக்காகக்கொண்ட, சார்பு துணைவேந்தர் தலைமையிலான ஒரு வளாக சுற்றுப்பயணத்தையும் ஏற்பாடு செய்திருந்தது. இவ்விஜயத்தின் கலாச்சார அங்கமாக, மாணவர்களின் பாரம்பரிய இந்திய இசையின் இசை நிகழ்ச்சி விளங்கியது.

பல்கலைக்கழக உறுப்பினர்களுக்கு இலங்கையின் கைவினைப் பொருட்கள் - பரிசில்கள் வழங்குவதுடன்,  விஜயம் நிறைவு பெற்றது. இலங்கையின் பிரபல ஓவியர் சோலியஸ் மெண்டிஸின்  களனி ரஜமஹா விகாரையிலுள்ள  இரண்டு சுவரோவியங்களின் மறுஉருவாக்கங்களை அனுப்பி, பல்கலைக்கழகத்தில் காட்சிப்படுத்துவதற்கென துணைத்தூதுவர் ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.

இலங்கை துணைத் தூதரகம்

மும்பை

22 செப்டம்பர் 2023

 

Please follow and like us:

Close