தனது இலங்கைக்கான விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா  வெற்றிகரமாக நிறைவு செய்தார்

தனது இலங்கைக்கான விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா  வெற்றிகரமாக நிறைவு செய்தார்

இலங்கையின் முக்கிய பிரமுகர்களுடனான இருதரப்பு ஈடுபாடுகளைத் தொடர்ந்து, இலங்கைக்கான தனது முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தை இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா 2021 அக்டோபர் 5  ஆந் திகதி நிறைவு செய்தார். இந்த 3 நாள் விஜயத்தின் போது, அதிமேதகு ஜனாதிபதி, மாண்புமிகு பிரதமர், நிதி அமைச்சர் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் ஆகியோரை வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா சந்தித்தார்.

மாண்புமிகு பிரதமருடனான சந்திப்பைத் தொடர்ந்து, இந்திய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட 4 அபிவிருத்தித் திட்டங்களை ஒப்படைப்பதற்கான மெய்நிகர் ரீதியான அங்குரார்ப்பண வைபவம் இடம்பெற்றது. புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் நான்கு மாடிக் கட்டிடம், வடமராட்சி மகளிர் கல்லூரியில் ஒரு கேட்போர் கூடம், மாத்தளை, நுவரெலியா, பதுளை மற்றும் காலி மாவட்டங்களில் 1,035 கிராமசக்தி வீடுகள் மற்றும் வவுனியா மாவட்டத்தில் மெனிக் பண்ணையில் 24 வீடுகள் ஆகிய கட்டுமானங்களை உள்ளடக்கியுள்ள இந்த அபிவிருத்தித் திட்டங்களின் அங்குரார்ப்பண வைபவத்தில், வெளிநாட்டு அமைச்சர், கல்வி அமைச்சர், பெருந்தோட்ட அமைச்சர், தோட்ட வீட்டுவசதி மற்றும்  சமூக உட்கட்டமைப்பு அமைச்சர், சுகாதார அமைச்சர், தொழில் அமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த அங்குரார்ப்பண வைபவத்தில், மக்களுக்கிடையிலான இணைப்புக்கள் எமது உறவுகளின் ஒருங்கிணைந்த  பகுதியாவதுடன், அதன் விளைவாக 2021 அக்டோபர் 20ஆந் திகதி இடம்பெறவிருக்கும் குஷிநகருக்கான முதலாவது பௌத்த யாத்திரிகர்களின் விமானமானது, இந்தியா - இலங்கை உறவுகளில் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கும் என வெளிநாட்டு அமைச்சர் குறிப்பிட்டார். இந்தியாவின் குஷிநகரில் உள்ள புதிய சர்வதேச விமான நிலையத்துடனான பௌத்த இணைப்பு முயற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து செயற்படுவது சிறந்ததொரு வாய்ப்பாகும் என வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா வலியுறுத்தினார்.

இந்திய வெளியுறவுச் செயலாளருக்கும் இலங்கை வெளியுறவுச் செயலாளருக்கும் இடையிலான அதிகாரபூர்வ இருதரப்பு பேச்சுவார்த்தைகள் 2021 அக்டோபர் 20ஆந் திகதி வெளிநாட்டு அமைச்சின் குடியரசுக் கட்டிடத்தில் நடைபெற்றதுடன், இதில் இரு நாடுகளும் ஆர்வத்தைப் பகிர்ந்து கொள்ளும் பரந்த அளவிலான அரசியல், பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலாச்சார விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது. அரசாங்கங்களுக்கு இடையேயான நெருக்கமான  ஆலோசனைகளைத் தொடர்வதற்கு வெளியுறவுச் செயலாளர்கள் தமது விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக படகு சேவைகள் மற்றும் விமான இலக்கிடங்கள், மின்சாரக் கட்டம் மற்றும் டிஜிட்டல் இணைப்பை  அதிகரிப்பதன் மூலம் கடல் இணைப்பு போன்ற சாத்தியமான அனைத்து வழிகளிலும் இரு நாடுகளுக்கிடையேயான இணைப்பை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஏனையவற்றுடன், பௌத்த பாரம்பரியத்தின் மீது நிறுவப்பட்ட வலுவான கலாச்சார மற்றும் நாகரீகப் பிணைப்புக்களை வலுப்படுத்துவது குறித்து பரவலாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக இலங்கையில் மருத்துவ உற்பத்தி மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முதலீடு செய்வதற்கு தற்போதுள்ள உத்வேக நிலையை தொடர்வதன் ஊடாக இரு நாடுகளினதும் மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்த முடியுமென இரு தரப்பினர்களும் ஒப்புக்கொண்டனர்.

வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், இந்திய அமைதி காக்கும் படையினர் நினைவிடம் உட்பட கண்டி, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் கலாச்சார மற்றும் இருதரப்பு  முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பார்வையிட்டார்.

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளுமாறு இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை  வெளியுறவு செயலாளருக்கு அழைப்பு விடுத்தார்.

 வெளிநாட்டு அமைச்சு

கொழும்பு

2021 அக்டோபர் 05

Please follow and like us:

Close