ஜோர்தானிய வர்த்தகர்கள் சங்கம் மற்றும் இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து இலங்கைத் தூதரகம் நடாத்திய மெய்நிகர் வெபினாரின் போது, இரண்டு வர்த்தக சங்களினதும் உறுப்பினர்கள், ஜோர்தானுக்கான இலங்கைத் தூதுவர் ஷானிகா திஸாநாயக்க மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான அங்கீகாரம் பெற்றுள்ள ஜோர்தான் தூதுவர் முஹம்மது அல் கயீத் ஆகியோரின் முன்னிலையில், இலங்கை - ஜோர்தான் வர்த்தக சபை முதன்முறையாக நிறுவி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வின் போது, தலைவர் ஹம்டி தப்பா மற்றும் இலங்கை தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன ஆகியோரினால் இரு சபைகளுக்கும் இடையிலான ஒப்பந்தமொன்றும் கைச்சாத்திடப்பட்டது.
தூதுவர் திஸாநாயக்க தனது உரையில், தூதரகத்தின் கீழ் வர்த்தக சபையை ஸ்தாபிப்பது இருதரப்பு வர்த்தகத்தை அதிகரிப்பதற்கும் இரு நாடுகளுக்குமான முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பெறுமதியான தளமாக அமையும் என வலியுறுத்தினார். இலங்கையை பாரம்பரியமற்ற சந்தையாகக் கருத வேண்டாம் என்றும், இலங்கையில் பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாத சாத்தியக்கூறுகளைத் திறக்குமாறும் ஜோர்தானியத் தொழில்முனைவோரை தூதுவர் கேட்டுக்கொண்டார்.
முதலீட்டு சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. பிரசஞ்சித் விஜயதிலக, ஜோர்தானியர்கள் இலங்கையில் முதலீடு செய்யக்கூடிய துறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்த அதே வேளையில், ஜோர்தானில் இலங்கையர்களுக்கு காணப்படுகின்ற முதலீட்டுச் சூழல் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து ஜோர்தான் முதலீட்டு அமைச்சின் திரு. குஸ்ஸேரி விளக்கினார். இந்நிகழ்வை இலங்கை ஏற்றுமதியாளர்கள் தேசிய சம்மேளனத்தின் பணிப்பாளர் எம். வன்னியாராச்சி நெறிப்படுத்தினார்.
இலங்கை - ஜோர்தான் வர்த்தக உரையாடலை வலுப்படுத்துவதற்காகவும், ஜோர்தானில் உள்ள இலங்கைப் பொருட்களுக்கு அதிக விழிப்புணர்வு மற்றும் தர அங்கீகாரத்தை உருவாக்குவதற்காகவும் இரு வர்த்தக சபைகளினதும் உறுப்பினர்களுடன் வணிகக் கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்வதற்கு தூதரகம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கைத் தூதரகம்,
ஜோர்தான்
2021 டிசம்பர் 29